யதார்த்த மயக்கம் - நூல் விமர்சனம்

Written by நூருத்தீன் on .

‘ஊதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்’ என்பது “என்னமா கவிதை தெரியுமா” என்று சிலாகித்தால் ஆட்சேபனையின்றி ஏற்றுக்கொள்ளும் கவியறிவாளன் அடியேன்.

அத்தகு சாலையோர சிற்றுண்டியாளனை குளிர் சாதனம் பொருந்திய தரமான உணவகத்திற்கு அழைத்துச் சென்று மேசையில் உணவு வகைகளை கடை பரப்பினால் என்னாவது? உணவகத்தைச் சிலாகிப்பதா, உணவை மெச்சுவதா?

சபீரின் (திருப்பிப் போட்ட ‘க’-வுடன்) ‘யதார்த்த மயக்கம்’ கவிதைத் தொகுப்பு வெளியாகும் தருணத்தில் நான் ஊரில் இருந்தது தற்செயல். உடனே அப் பிரதியை எனக்கு அனுப்பி வைத்தார் கவிஞர். முதல் பத்தியில் சொன்ன கவி ஞான ஆர்வமுடைய நானோ, அதை நிதானமாக ஒன்றரை மாதம் கழித்துத்தான் எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். அது என்னடாவென்றால் முடித்துவிட்டுத்தான் வைக்கும்படி ஆகிவிட்டது.

வாழ்க்கை, நட்பு, சோகம், மகிழ்வு, காதல் என்று தமது அனுபவங்களை கவிதைகளில் தோரணம் கட்டி ஆடியிருக்கிறார் சபீர். அதிரை முதல் அஜ்மான் வரை பரந்து விரிகின்றன அவை.

இல்லாளைப் பிரிந்து வளைகுடாவில் வாழும் சோகத்தை விளக்கும் கவிதையில் இப்படியான சில வரிகள் -

நான் கேட்ட பொருட்களோடு
பெட்டி முழுதும்
ஒட்டி யிருந்தன
நீயாக அனுப்பிய
கடுஞ்சோகப் பெருமூச்சும்
நிலைகுத்திய பார்வைகளும்

தந்தையை இழந்த தருணங்களை விவரிக்கும் -

அழுவது ஆணுக்கு அழகல்ல-
அழுவது நானல்ல...
என் உயிர்!
...
போய்ட்டீங்க என
கதறிய
சொந்த பந்தங்களின்
சப்தங்களினூடே
கேட்டதா உங்கள்
மகனின்
உயிர் அழும் ஓசை?

கைம்பெண்ணான தம் தாயிடம் தந்தையைக் காணும் மகன் -

உம்மாவின்
வெண்ணிற ஆடை
வெறும் கழுத்து
என
எங்கும்
எதிலும்
வாப்பாவின் இருப்பு!

வணிகர்களுக்கு மாதர் குலம் புரியும் சேவையை இப்பத்தியின் இறுதி வரிகளில் ஒளித்து விளக்கும் ஹாஸ்யம் -

மனைவியின்
பயணப் பாதுகாப்பைப்
பற்றியக் கவலை
எனக்கில்லை
மகன்
கையில் பென் ட்டென் வாட்ச்சோடு
சொல்லிச் சென்றிருக்கிறான்
தான் பார்த்துக் கொள்வதாக
பெட்டிக்கடைக்குள்கூட
காணாமல் போய்விடும்
தன் அம்மாவை.

வளைகுடா கணவன் தன் முதல் வாரிசு உருவான நற்செய்தியை விவரிக்கும் அற்புதம் -

உனக்குள் நெளிகிறதா
என்
உயிரின் உதிரியொன்று...
வயிற்றில் வளர்கிறதா
என்
வாழ்க்கையின் கனவொன்று!

என்று இத்தொகுப்பில் ஏகப்பட்ட ஆஹா!

வாசித்து முடித்ததும் அரைப் பக்கத்துக்காவது ஏதாவது கவிதை எழுதித்தள்ளிவிட வேண்டும் என்று கையில் பரபரப்பு. ஆனால், எனக்கென இருக்கும் சொற்ப நட்புகளிடம் மானம், மரியாதையை இழக்க மனம் ஒப்பவில்லை. உபகாரம் புரியாவிட்டாலும் அவர்களை இன்னலுக்கு ஆளாக்கக்கூடாதில்லையா? அதனால் எனது சுற்றமும் நட்பும் பிழைக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

கட்டுரைகளையே ஓரிரு பத்திகளில் எழுதிச் சுருக்கும் இக் காலத்தில் இரண்டு, மூன்று பக்கங்கள் நீளும் கவிதைகள்தாம் குறுநாவல் மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. நறுக்குத் தெறிக்கும் வார்த்தைகளுக்குப் பஞ்சமற்ற கவிஞருக்கு, சுருக்கமாக கவிதை படைப்பது பிரச்சினையாக இருக்காது என்பது எனது நம்பிக்கை, கருத்து.

கசங்கி விடக்கூடாதே என்று பத்திரமாகப் பக்கங்கைளப் புரட்ட வைக்கின்றன ‘வழு வழு’ தாள்கள். சர்தாரின் அட்டகாசமான அட்டைப் படத்துடன் தரமான நூலாக வெளியிட்டிருக்கிறது முரண். இதற்கு ரூ. 100 சகாய விலை என்பேன்.

நூறு ரூபாய்க்கு நூல் வாங்குபவர்களுக்கு ரேஷன் கிடையாது என்று அரசு அறிவிப்பதற்குள் வாங்கி வாசித்து விடுங்கள்.

-நூருத்தீன்

இதர விமர்சனங்கள்

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker