அஞ்சிறைத்தும்பி - நூல் விமர்சனம்

Written by நூருத்தீன் on .

அத்தொடரின் இறுதி சில அத்தியாயங்களை மட்டுமே ஆனந்த விகடனில் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. 'சுவாரஸ்யமாக இருக்கிறதே' என்று ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்த சில வாரங்களிலேயே 'அஞ்சிறைத்தும்பி' முடிவுற்று விட்டது. அதுவரை ஐம்பத்து நான்கு அத்தியாயங்கள் -சற்றொப்ப ஓராண்டு- வெளியாகியிருந்த அத்தொடரின் முந்தைய அத்தியாயங்களையும் விகடன் ஆன்லைனில் படித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். நினைப்பு மட்டும்தான். நேரமும் சாத்தியமும் எளிதா என்ன?

ஆனால் அதன்பின் அதன் ஆசிரியர் சுகுணா திவாகரை ஃபேஸ்புக்கில் பின் தொடர ஆரம்பித்திருந்ததால் இவ்வாண்டின் சென்னை புத்தகக் காட்சியில் அஞ்சிறைத்தும்பி நூலாக வெளியாவது தெரிந்து, அதை சியாட்டிலுக்கு பறந்து வரச் செய்து விட்டேன். ஒருவாறாக படித்தும் முடித்து விட்டேன்.

ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு கதை அல்லது கட்டுரை அல்லது ஓர் அக்கறை. இப்படியாகத்தான் தும்பி பறக்கிறது. சில நேரடியாகப் புரிந்து உடனே சுவாரஸ்யம் கூட்டியபோது பல எனது சிந்தினைக்கு வீட்டுப்பாடம். ஓர் உட்கருத்து, சிலேடை, குறியீடு, கவலை, அக்கறை, கோபம், விமர்சனம் இப்படி ஏதோ ஒன்று ஒவ்வொன்றிலும் அமைந்திருந்ததே அதற்குக் காரணம்.  இந்திய/தமிழக அரசியல், சமூகப் பிரச்சினைகள், அதன் பின்னணி ஆகியனவற்றை ஆழ்ந்து ஊன்றிக் கவனித்து, அவற்றில் களமாடும் தமிழ் வாசகர்களுக்கு எனது பிரச்சினை இருக்காது.

வரலாற்று வகை, ஃபேண்டஸி வகை என்று அத்தியாயங்கள் பலவகை. அத்தியாயத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப பெரியார், புத்தர், காந்தி ஆகியோரெல்லாம்கூட அக்கதையின் பாத்திரங்களாக இடம்பெற்று விடுகிறார்கள். இளையராஜாவும் தனுஷும்கூட உண்டு.  நூல் நெடுக சுகுணாவின் ஏதோ ஒரு தீம் ம்யூசிக். இனிய பின்னணி.

சுகுணா திவாகரின் சில கருத்துகளுடன் நாம் வேறுபடலாம், அவற்றின்மீது விமர்சனம் இருக்கலாம். அதை இந்நூலின் மாமிசம் அத்தியாயத்தில் உள்ள, 'தப்பு, சரியெல்லாம் நம்ம தராசைப் பொறுத்தது' என்ற வாசகத்துடன் ஒப்பிட்டுக்கொண்டு இந்நூலை முழுவதும் வாசித்துவிட முடியும். நமக்கு நம் தராசு. அவருக்கு அவரது தராசு.

சில உரையாடல்களில், விவரிப்புகளில் புன்னகை நிச்சயம். திறன்பேசியைப் பறிகொடுத்தவன் சார்ஜ் தங்காத மனைவியின் அடாசு செல்ஃபோனுடன் தற்காலிகமாகத் தவிக்கும்போது, 'பானுவின் போனைப் பயன்படுத்துவது என்பது கிழிந்த உள்ளாடையுடன் அலைவதைப் போலிருந்தது' என்ற சுகுணாவின் வர்ணனை நகைச்சுவைப் பூசிய, அழுத்தமான அர்த்தம் புதைந்த வாக்கியம்.

வழிதவறி நிகழ்காலத்தில் நுழைந்துவிட்ட காந்தியிடம் கதையின் பாத்திரம், "நாங்கள் அவ்வப்போதைய விஷயங்களை அவ்வப்போது மறந்துவிடுவோம். உங்களை உட்பட. ஆமாம், உங்களைச் சுட்டது இரண்டு தோட்டாக்கள் என்றும் மூன்று தோட்டாக்கள் என்றும் ஒரு சர்ச்சை ஓடுகிறதே" என்று கேட்டபோது, காந்தி தன் மார்பிலிருந்து பிய்த்து தோட்டாக்களைக் கையளித்தார். "ஆனால் அவை கடைசி தோட்டாக்கள் அல்ல" என்றார் என்கிறது தும்பியின் சிறகசைப்பு.

நூலின் புரூஃப் ரீடிங் இன்னும் கவனமுடன் நிகழ்ந்திருந்தால் அச்சுப் பிழைகளைக் குறைத்திருக்கலாம். அடுத்த பதிப்பில் ஆசிரியர் அதைக் கவனிக்க வேண்டும்.

நூல்: அஞ்சிறைத்தும்பி
ஆசிரியர்: சுகுணா திவாகர்
வெளியீடு: எதிர் வெளியீடு
விலை: ரூ. 400

-நூருத்தீன்

இதர விமர்சனங்கள்

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker