நபி பெருமானார் வரலாறு - விமர்சனம்

Written by பார்த்திப ராஜா on .

நபி பெருமானார் வரலாறு – என்.பி. அப்துல் ஜப்பார், பூம்புகார் பிரசுரம், சென்னை. 1978.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக விவரிக்கும் நூல் இது.

அரபிகளின் இழிந்த வாழ்க்கையை மாற்றப் போராடிய ஒரு புரட்சி வீரரின் வரலாறு இது. தனது கருத்துகளை நிறுவுவதற்குப் போராடிய, தடைகளை, சிக்கல்களை உடைத்தெறிந்த நாயகத்தின் வரலாறு இது. மக்காவிலிருந்து மதீனா சென்று அந்நகரத்தையே தன் போதனையின் வாயிலாக மாற்றி, செல்வம் ஒழுகும் மாநகராக உயரச் செய்த நபி ஸல் அவர்களின் பெருமை மிகு வரலாற்றைப் படிக்கும்போது இஸ்லாத்தின் மீதான மரியாதை இன்னும் கூடுகிறது. இறைவசனங்களைப் பொருத்தமான இடங்களில் கையாண்டு, நபிகள் நாயகத்தின் வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது.

மதீனா நகருக்குச் செல்லும்போது, அவருக்குத் தங்களது வீட்டை அளிக்க முன்வரும் இரு அனாதைச் சிறுவர்களிடமிருந்து பணம் கொடுக்காமல் சொத்தை வாங்கமாட்டேன் என்று பிடிவாதம் செய்யும் நபிபெருமானார் செயல் படிப்போரை அதிசயிக்க வைக்கிறது.

நபிகள் பெருமானாரின் உத்தரவுப்படித் தன் வீட்டுக்கு ஒரு அகதியை அழைத்துச் சென்ற நபித்தோழர் ‘அபூதல்ஹா’, தனக்கும் தன் மனைவிக்கும் மட்டுமே இருந்த உணவினைத் தட்டில் இட்டு, விளக்கை அணைத்து, இருவரும் உண்ணுவதுபோல நடித்து, அகதிக்கு முழுவுணவையும் அளித்த இரக்கம் பரவசமடைய வைக்கிறது.

மக்காவிலிருந்து படையெடுத்து வந்து கைதிகளாகப் பிடிபட்ட குரைஷிகளுக்களு நபிகள் நாயகம் அளித்த தண்டனை வித்தியாசமானது. 4000 திர்ஹம் கொடுத்து விடுதலை ஆகலாம். அல்லது எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் பத்துப்பேருக்கு எழுத்தறிவித்துவிட்டு விடுதலை பெறலாம் என்கிறார். ‘பத்துப்பேருக்குக் கல்வி புகட்டுவது 4000 திர்ஹம்களுக்கு சமமென்று கருதும் இந்த நபி எப்படிப்பட்ட புண்ணியவானாக இருப்பார்!’ என்று குரைஷிக்கள் பேசிக் கொள்ளுகிறார்கள்.

நபிகள் நாயகம் உடல்நலம் குன்றி இறப்பதும் அதனை முஸ்லிம்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள் என்பதும் நூலில் அழகுறச் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்நூலைப் படித்தபோது, நபிகள் பெருமானோடு தொடர்புடைய மக்கா, மதீனா உள்ளிட்ட இடங்களைக் காணவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது.

- Prof. Parthiba Raja

(பேரா. பார்த்திப ராஜா தமது முகநூல் பக்கத்தில் பதிந்திருந்ததை நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.)

oOo

Updated: October 24, 2020

இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.

கிடைக்குமிடம்:

பூம்புகார் பதிப்பகம், 127 (ப. எண்: 63) பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை-600108.

தொலைபேசி: 044-25267543

 

 

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker