தோழர்கள் - நம்பிக்கையின் நூல் அறிமுகம்

நபித் தோழர்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிக அரிதாகவே கிடைக்கின்றன. அவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம். இருப்பவையும்

பெரும்பாலும் மக்களுக்கு அறிமுகமான சஹாபாக்கள் பற்றித்தான் பேசும்.

அதைப் போக்கும் முகமாய் சகோதரர் நூருத்தீன் முயன்றிருக்கிறார். சத்தியமார்க்கம்.காம் எனும் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக சஹாபாக்கள் வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதி வந்தார். அதனை இப்போது நூலாகவும் வெளியிட்டிருக்கிறார்.

இருபது நபித் தோழர்களை வரிசைப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர் நூருத்தீன். அனைவருமே பிரபலமான தோழர்கள் மட்டுமல்ல பல நபிமொழிகளை அறிவித்தவர்கள். சம்பவங்களை மட்டும் தொகுக்காமல், தோழர்களின் இறைபக்தி, பெருமானார் (ஸல்) அவர்கள் மீது அவர்கள் கொண்ட ஈர்ப்பு, சொல்லாலும் செயலாலும் இறைதிருப்தி ஒன்றை மட்டுமே முன்வைத்து வாழ்ந்த அவர்களது வாழ்க்கை என்று பல்வேறு அம்சங்களை மிகைப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

நூலிலிருந்து ஒரு சிறு பகுதி...

சிரியா நாட்டிற்கு மேற்கில் அமைந்துள்ளது சைப்ரஸ் தீவு. முஸ்லிம்களுடனான போரில் தோற்றிருந்த ரோமப் படையினர் அத் தீவிற்குத் தப்பிச் சென்று அதனைத் தங்களது கப்பற்படையின் தலைமையிடமாக ஆக்கிக் கொண்டு போர்க் கருவிகளையெல்லாம் சேமித்து வைத்திருந்தனர்.

உதுமான கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் சைப்ரஸ் மீது படையெடுக்க அனுமதி அளித்தார். கடல்தாண்டி நடக்கும் போர் அது. பாலையிலும் நிலத்திலும் போர் புரிந்திருந்த முஸ்லிம்களுக்கு இது நிச்சயமாய் சவாலான படையெடுப்பு. அதனால் யாரையும் வற்புறுத்தி படையில் சேர்க்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தார் உதுமான் (ரலி). முக்கிய தோழர்கள் அனைவரும் போருக்குத் தயாராகி வந்துவிட்டார்கள். அதில் அபூதர்தாவும் முக்கியமானவர். வெற்றிகரமாய் முடிவுற்ற அப் போரில் சைப்ரஸை முஸ்லிம்கள் வசமாக்கியதால், அதன் பின்னர் கான்ஸ்டான்டினோபில் (இன்றைய துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்) நோக்கி முஸ்லிம் படைகள் முன்னேற வாசலை அகலத் திறந்து கொடுத்தது. ஹிஜ்ரி 28 - 29 ஆம் ஆண்டு அப் போர் நடைபெற்றது.

நிறைய செல்வம் முஸ்லிம்கள் வசமாகின. அதையெல்லாம் கண்ட அபூதர்தா அழ ஆரம்பித்துவிட்டார். ஜுபைர் இப்னு நாஃபிர் என்பவர், “என்ன அபூதர்தா? அல்லாஹ் இஸ்லாத்திற்கு சக்தியும் வெற்றியும் அளித்திருக்கும்போது என்ன காரணத்திற்காக அழுகிறீர்?” என்று வினவினார்.

“ஜுபைர்! அல்லாஹ்வோ வெற்றிக்கு மேல் வெற்றி அளிக்கிறான். வெற்றியும் ஆட்சியும் மேலோங்கி, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்கத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாகிவிட்டால் எத்தகைய அற்பர்களாய் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் மாறிவிடுவார்கள்?”

நேற்று மாட்சிமையுடன் ஆட்சி புரிந்து கிடந்தவர்கள் எல்லாம் இறைவனை அறியாமல் மறந்து அகங்காரத்தில் இருந்ததால், இன்று முஸ்லிம்களிடம் தோற்றார்கள். அதைப் போன்ற மனோநிலைக்கு முஸ்லிம்களும் ஆளானால் இன்றைய வெற்றி அவர்களுக்கு நாளை என்னவாகும்? என்ற எண்ணம் ஏற்பட்டபோது அழுதார் அபூதர்தா்.

எஞ்சிய காலமும் டமாஸ்கஸ் நகர மக்களுக்குக் குர்ஆனை போதித்தவாறு தொடர்ந்த அபூதர்தாவின் வாழ்க்கை, அவரது 72ஆவது வயதில் இறுதி நிலையை அடைந்தது.


மலேஷியத் தலைநகரிலிருந்து வெளிவரும் 'நம்பிக்கை' மாத இதழில் தோழர்கள் நூல் அறிமுகம்

நன்றி : நம்பிக்கை, டிசம்பர் 2011

e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker