தட்டுங்கள்! திறக்கப்படும்!!
அறிஞர் பா. தாவூத்ஷா ஒரு புரட்சியாளர். சிறந்த சிந்தனையாளர். சமுதாயச் சீர்திருத்தவாதி. அஞ்சா நெஞ்சம் படைத்தவர். “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவன்.
முஸ்லிம்களிடம் மண்டிக் கிடந்த மூடக் கொள்கைகளைக் களைந்தெறிய வாழ்நாள் முழுவதும் போராடிய மாபெரும் வீரர். இந்த வகையில் ஈரோட்டுப் பெரியாருக்கு ஈடான இஸ்லாமியப் பெரியார், இவர். இதன் கரணமாகத் தாவூத்ஷாவின் பெயரை, புகழை, சாதனைகளை, சரித்திரம் படைத்த வரலாற்றை மூடி மறைத்து விட்டார்கள். மறக்கடித்து விட்டார்கள்.
அறிஞர் தாவூத்ஷாவைப் பற்றி அறிந்தபோது, அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி, அனைத்துத் தமிழ் மக்களும் அறியச் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டேன். அவரது வரலாற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் உணர்ந்தேன். ஏனென்றால், அவர் விதைத்த விதைக்ள இன்று முளைத்துப் பலன் தரத் தொடங்கி விட்டன.
இன்று “இஸ்லாம் எங்கள் வழி! இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்று முஸ்லிம்கள் முழக்கமிடுகிறார்கள் என்றால், இதற்கு விதை ஊன்றியவர், தாவூத்ஷா. இன்று முஸ்லிம் பெண்கள் படித்துப் பட்டதாரிகளாக விளங்குகிறார்கள் – மற்ற சமுதாயப் பெண்களுடன் முஸ்லிம் பெண்களும் படிப்பு, வேலை வாய்ப்புகளில் போட்டியிடுகிறார்கள் என்றால், இதற்காகப் போராடியவரும் தாவூத்ஷாதான். அவரது போராட்டத்தின் பலன்களை அனுபவிக்கும் நாம், அவரை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
அந்த நோக்கத்துடன் நான் கிளம்பினேன்! முதலடி எடுத்து வைத்த போதுதான், ‘இல்லாத ஊரக்கு செல்லாத பாதை’ என்பார்களே, அப்படிப்பட்ட ஒரு பாதையில் நான் அடியெடுத்து வைத்து விட்டது புரிந்தது! கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது! தாவூத்ஷாவின் வரலாறோ, அவர் நடத்திய “தாருல் இஸ்லாம்” இதழின் பிரதிகளோ கிடைக்கவில்லை! ஆனாலும், நான் முன் வைத்தக் காலைப் பின் வைக்கவில்லை.
என்னுடைய மாமனாரின் ஊரான நாச்சியார்கோவிலுக்குப் போயிருந்தபோது, ‘இதுதானே தாவூத்ஷாவின் சொந்த ஊர்’ என்ற நினைவு வந்தது. அங்கே அவரைப் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று விசாரித்தேன். அப்போதுதான் எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது!
தாவூத்ஷாவின் இளைய மகன் 84 வயது நசீர் அகமது இப்போது நாச்சியார் கோவிலில் வசித்துக் கொண்டிருக்கிறார்! அவரைப் போய்ப் பார்த்தேன்.
ஒரு நூல் கிடைத்து விட்டது! போதாதா?
“இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா” நூலின் முன்னுரை |
சீதக்காதி மணிமண்டப நூலகர் தக்கலை பசீர் அவர்களை தொடர்பு கொண்டேன். அவர் நாகை ஜி. அகமது அவர்களை கையைக் காட்டினார். இவர் தாவூத்ஷா குடும்பத்தில் “முஸ்லிம் முரசு” அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றியவர். அவரது குடும்பம் முழுவதையும் அறிந்தவர். அவர் வழியே “முஸ்லிம் முரசு” நிறுவனர் ரஹீம் பாயின் மகன் கமால்பட்சா அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
திருப்பந்துருத்தி பாரூக் அவர்கள், அமெரிக்காவிலிருக்கும் நூருத்தீன் அவர்கள், அய்யம்பேட்டை இம்ரான் அவர்கள், கும்பகோணம் ராஜ் முகம்மது அவர்கள், பல்லாவரம் ராஜ் முகம்மது அவர்கள், பல்லாவரம் புலவர் அப்துல் வகாப் அவர்கள், சாலிகிராமம் சலாவுதீன் அவர்கள், பெரியவர் தைகா சுஐபு ஆலிம் அவர்கள், நாச்சியார்கோயில் கோவிந்தராஜ் அவர்கள், “முஸ்லிம் குரல்” கனி சித்தி அவர்கள், கலைமாமணி உமர் அவர்கள், இசை முரசு நாகூர் அனிபா அவர்கள், ரெங்கூன் சுலைமான் அவர்கள் என்று, சங்கிலி போன்று தொடர்புகள் ஏற்பட்டன. தாவூத்ஷாவைப் பற்றிய செய்திகளும் சேர்ந்தன.
“தாருல் இஸ்லாம்” இதழ்கள் வேண்டுமே? யாரிடமும் இல்லை! நூல்களைப் பொன்று இதழ்களைப் பாதுகாக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. அதிலும் “காதினி”, “காபீர்” என்று சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தாவூத்ஷா நடத்திய “தாருல் இஸ்லாம்” என்ற பரபரப்பு இதழைப் பலரும் படித்தார்கள்; படித்ததும் கிழித்து விட்டார்கள். யாரும் சேர்த்து வைக்கவில்லை.
கோட்டக்குப்பம் (புதுவை) அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகம் மட்டும் இதற்கு விதி விலக்கு! அங்கு “தாருல் இஸ்லாம்” இதழ்கள் பைண்டிங் செய்து வைத்திருக்கிறார்கள். தாவூத்ஷா எழுதிய அரிய நூல்களும் உள்ளன.
“உங்களுக்கு வேண்டியதைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று, நூலகப் பொதுச் செயலர் காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நூலகத்தைத் திறந்து விட்டு விட்டார்! வேண்டிய குறிப்புகள் எடுத்துக் கொண்டதுடன், நகல்களும் எடுத்துக் கொண்டேன். காஜி ஜைனுல் ஆபிதீன் அவர்களே பல நூல்களை நகல் எடுத்துக் கொடுத்தார். நான் தொலைபேசியில் கேட்ட நூல்களையும் நகல் எடுத்து அனுப்பினார்.
சென்னையில் மறைமலை அடிகள் நூலகம், ரோசா முத்தையா நூலகம், இளையான்குடி முஸ்லிம் இளைஞர் சங்க நூலகம் ஆகியவற்றிலும் “தாருல் இஸ்லாம்” பைண்டிங் இருப்பதை அறிந்தேன். ஆனால், “தாருல் இஸ்லாம்” வார இதழோ, நாளிதழோ எங்கும் இல்லை.
என் அன்புத் தந்தையார் அப்துல் மஜீது அவர்கள், எங்கள் நீடூர் அ.மு. சயீது அண்ணன் அவர்கள், கம்பம் அலி அவர்கள், கவிஞர் சோதுக்குடியான் அவர்கள், பாரிஸ் ஜமால் அவர்கள், பேராசிரியர் தை.கா. காதர் கனி அவர்கள், “சமநிலைச் சமுதாயம்” ஜாபருதீன் அவர்கள், ஜே.எம். சாலி அவர்கள் என்று பல நண்பர்களம் உதவி செய்தார்கள்.
தாவூத்ஷாவின் பேரன் ஷாஜஹான் குடும்பத்தினரும் சம்பந்தி ராஜ் முஹம்மது அவர்களும் பழைய படங்களைக் கொடுத்து உதவினார்கள்.
ஆசிரியர் அ.மா. சாமி அவர்கள் என்னுடன் எல்லா இடத்திற்கும் வந்து உதவினார்.
இவர்கள் எல்லோருக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஜே.எம். சாலி அவர்கள், பேராசிரியர் தை.கா. காதர்கனி அவர்கள் தாவூத்ஷாவின் வாழ்க்கைக் குறிப்பை சிறு கட்டுரைகளாக ஏற்கெனவே எழுதியிருக்கிறார்கள். ஆசிரியர் அ.மா. சாமி அவர்கள் தனது “இஸ்லாமிய இதழ்கள்” என்ற நூலில் தாவூத்ஷா பற்றியும் “தாருல் இஸ்லாம்” பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். தாவூத்ஷாவின் வரலாறு முழுமையாகவும் விரிவாகவும் தனி நூலாகவும் வெளிவருவத இதுவே முதன் முறை. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
-முனைவர் அ. அய்யூப்
7.7.2007,
பேங்காக்.
(தொடரும்)
நூல்: இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா
ஆசிரியர்: முனைவர் அ. அய்யூப்
<--அடுத்தது-->