பேரா. மார்க்ஸுக்கும் அஹ்மது மீரானுக்கும் விருதுகள்

Written by நூருத்தீன்.

மனிதகுல சேவைகளுக்காக பல்வேறு தளங்களில் சிறந்த முறையில் சேவை ஆற்றுபவர்களுக்கு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்டின்

நிறுவனர்களுள் ஒருவரான பன்முக ஆற்றல் கொண்ட மனிதநேய மாண்பாளர், மறைந்த அறிஞர் M.A. ஜமீல் அஹ்மத் அவர்களின் பெயரால் ஆண்டுதோறும் விருது அளிப்பது என்று IFT முடிவு செய்தள்ளது.

அதனடிப்படையில் 2013 ஆம் ஆண்டிற்கான M.A. ஜமீல் அஹ்மத் விருது இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது. மனித உரிமை சேவைகளுக்காக மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின் (PUHR) மாநிலத் தலைவர் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுக்கும் கல்வி சேவைக்காக யூனிட்டி குழும பள்ளிகளின் தலைவர் திரு. எஸ். அஹ்மத் மீரான் அவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

பிப்ரவரி 1, 2014 அன்று மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இவ்விழாவில், நிறுவனத்தின் தலைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத் தலைமையேற்க பொதுச்செயலாளர் ஹெச். அப்துர் ரகீப் முன்னிலை வகித்தார். நிறுவனத்தின் அறங்காவலர் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் விருது அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். தமுமுக-வின் மூத்த தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என். சிக்கந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியைப்பற்றி பேரா. மார்க்ஸ் தம்முடைய ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாவது:-

நன்றி தெரிவிக்க எழுகையில் என்னால் பேச இயலவில்லை. குரல் தழுதழுத்திருந்ததை நானே உணர்ந்தேன். இதற்கெல்லாம் நான் எந்த விதத்தில் தகுதியானவன் என்கிற எண்ணம் என்னை வாட்டியது, வாட்டுகிறது. இம்மாதிரி நிகழ்வுகளைத் தவிர்த்துவிடலாமெனில் டாக்டர் கே,வி.எஸ் ஹபீப் முஹம்மத் போன்ற பெரியவர்கள் வீட்டிற்கு வந்து அழைக்கும்போது நான் எப்படி மறுப்பேன்? எனக்கு இந்த விருதை அளித்த இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையினருக்கும், மேடையிலும் அரங்கிலும் மனமார வாழ்த்திய நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் உண்மையாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இன்று செய்து வருகிற பணிகளைத் தொடர இந்த அன்பு என்னை ஊக்குவிக்கும் என நம்புகிறேன்.

வாணியம்பாடியைப் பிறப்பிடமாகக் கொண்ட மவ்லானா எம்.ஏ. ஜமீல் அஹ்மத் (1928-2007) அவர்கள் IFT நிறுவனத்தை உருவாக்கி முதல் பொதுச் செயலாளராகவும் இருந்தவர். உருதைத் தாய்மொழியாகக் கொண்டவராயினும் 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நூற்களைத் தமிழிற் கொண்டு வந்தவர். திருக்குர்ஆனுக்கு உள்ள தமிழ் மொழியாக்கங்களிலேயே ஆகச் சிறந்த மொழியாக்கமாகிய IFT வெளியீட்டை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். சில தமிழ் நூற்களை உருது மொழியிலும் ஆக்கியவர். நெருக்கடி நிலை காலத்தில் 18 மாதங்கள் சிறைப்பட்டவர். பேரா. ஜவாஹிருல்லாஹ் போன்ற பலரை உருவாக்கியவர்.

2000களின் தொடக்கத்தில், என்னுடைய ஏதோ ஒரு நூலை வாசித்துவிட்டு என்னைச் சந்திக்க அவர் விரும்பியதாக என்னை பெரம்பூரிலுள்ள IFT அலுவலகத்திற்கு ஒருவர் அழைத்துச் சென்றார். மவ்லானா ஜமீல் அஹ்மத், கவிஞர் தண்ணன் மூசா (இன்னும் சிலர், பெயர்கள் நினைவில்லை) ஆகியோருடன் அன்று மதிய உணவைப் பகிர்ந்து கொண்ட போது எனக்கு மவ்லானா குறித்து இவ்வளவு விவரங்கள் தெரியாது. மவ்லானா அவர்கள் உருவாக்கிய இந்த 150 நூற்களுக்கும் இரு முக்கிய பரிமாணங்கள் உண்டு. ஒன்று அவை முஸ்லிம் மக்களுக்கு மார்க்க நூல்கள், புனித நூல்கள். மற்றது இந்த 150 நூல்களும் தமிழுக்குச் சேர்க்கப்பட்ட புதிய சொத்துக்கள்.

நல்ல தமிழில் திருக்குர்ஆனை ஆக்க வேண்டுமென திருநரையூர் பா. தாவூத்ஷா அவர்கள் திருக்குர்ஆனின் ஒரு பகுதியை கூடிய வரை உருது கலக்காத தமிழில் கொண்டு வந்தபோது முதல் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர், நவீன விமர்சன முறையைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர் என்றெல்லாம் பாராட்டப்படும் வ.வே.சு. அய்யர் அவர்கள் அம் மொழியாக்கத்தை வாசித்துவிட்டு ஒரு விரிவான விமர்சனத்துடன், "ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்" என எழுதியதை நினைவு கூர்ந்தேன். சாவர்க்கரின் நண்பர், சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளைத் தனியே அமர்த்திச் சோறிட்டவர் என்கிற அவப் பெயர்களைக் கொண்டவராயினும் வ.வே.சு. விடம் குடிகொண்டிருந்த தமிழ் மனம் தமிழுக்கு வந்த திருக்குர்ஆனைத் தமிழின் சொத்தாகவும், ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டிய அறிவுத் தொகுதியாகவும் கண்டதைக் குறிப்பிட்டேன்.e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker