நபி பெருமானார் வரலாறு - பதிப்புரை
“நற்காரியங்கள் எப்பொழுதும் நன்மை தரும்!" என்பதற்கேற்ப “நபி பெருமானார் வரலாற்றை” அவர்களின் சரித்திர நிகழ்வுகளுக்கான நூலை வெளியிடும் நல்வாய்ப்பை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே கிடைத்தமைக்கு எண்ணி, எண்ணி உள்ளம் பூரிக்கின்றோம்.
'இஸ்லாம்' உலகின் இரண்டாம் பெரிய மதமாகத் திகழ்ந்து வருகிறது. அதனைப் பின்பற்றும் முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக முஹம்மது நபி (சல்) அவர்களைப் போற்றுகிறார்கள்; பின்பற்றுகிறார்கள். அவர்களது பெருமதிப்பிற்குரிய ‘அந்த அண்ணலாரின் வாழ்க்கை என்பதுதான் என்ன? அவர்தாம் இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தாரா? அவர் கடவுளா? கடவுளின் அவதாரமா? அப்படியென்ன அவர் பிரச்சாரம் புரிந்துவிட்டுச் சென்றார்?’ என்று பல விவரங்கள், வினாக்கள் அவரைப் பற்றி படிக்கிறோம், செவியுறுகிறோம், அதனை விளக்குவதே இந்நூல் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
முஹம்மது நபி (சல்)யைப் பற்றி உலகின் அத்தனை மொழிகளிலும் பல அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல்கள் வெளிவந்துள்ளன. அவர்களும் பெருமை பெற்றிருக்கின்றனர். தமிழிலும் அவரைப் பற்றி விளக்கும் பற்பல நூல்கள் இருக்கின்றன. ஆயினும் எல்லோரும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையிலும், மேற்காணும் அவர்களது வினாக்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளும் வகையிலும், சரித்திரத் தொடர்புடைய சம்பவங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் சுவையாகவும் மேலும் எளிமையாகச் சொல்லும் வகையில் ஜனாப் N.B. அப்துல் ஜப்பார் அவர்கள் வரைந்துள்ள இந்நூல் தீர்த்து வைக்கும் என்று நம்புகின்றோம்.
கிடைக்குமிடம்: |
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் விரியக்கூடிய வகையில் நிகழ்வுகள் அமையப்பெற்றது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை. அவர்களது ஒவ்வோர் அம்சத்தையும் பண்புகளையும் குணாதிசயங்களையும் வெகு நுணுக்கமாக விவரிக்கக்கூடிய தகவல்களும் செய்திகளும் ஏராளம். அவற்றையெல்லாம் தொகுத்து, சுருக்கி, ஒரு நாவலைப் போல், சுவாரஸ்யமான கதையைப் போல், அனைத்து மதத்தினரும் படித்து ரசிக்கும் வகையில் இந்நூலை எழுதியுள்ளார் 'என்.பி.ஏ.' என்று அழைக்கப்படும் N.B. அப்துல் ஜப்பார்.
தாருல் இஸ்லாம் பத்திரிகையின் பதிப்பாசிரியராகவும் நூலாசிரியராகவும் எழுத்தாளராகவும் பல சிறப்புகளுடன் திகழ்ந்த என்.பி.ஏ. தமிழ் மொழியிலும் ஆழ்ந்த பயிற்சியுள்ளவர். அத்தகு சிறப்புத் தகுதிகள் அமைந்திருந்த அவரது அழகிய தமிழில், எளிய நடையில் மிகச் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது நபி பெருமானாரின் வரலாறு. இந்நூலின் முதற் பதிப்பு 1978 ஆம் ஆண்டு வெளியானது. வெகு விரைவில் அதன் அத்தனை படிகளும் விற்றுத் தீர்ந்தன.
தற்பொழுது இரண்டாம் பதிப்பை வெளியிடும் எங்களது முயற்சிக்கு உதவியாக, மறைந்த N.B. அப்துல் ஜப்பாரின் இளைய மகன் திரு. நூருத்தீன் அவர்கள் நூலின் தகவல்களைச் சரிபார்த்து, திருத்தங்கள் சில செய்து தந்தார்கள். தரமான நூல்களைச் சிறப்பான முறையில் வெளியிடும் எங்களது குறிக்கோளுக்கு ஏற்ப இந்நூலை உங்களது கைகளில் தவழவிடுகிறோம். இது சுவையான ஒரு நூலாக, சுகமான வாசிப்பனுபவமாக தங்களுக்கு அமையும் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம்.
பூம்புகார் பதிப்பகம்
ஆன்லைனில் வாங்க: www.commonfolks.in