விபரீதக் காதல்

Written by N. B. அப்துல் ஜப்பார்.

அன்றிரவு சுல்தானா ஷஜருத்துர் தம் சயனவறையின் அம்சதூளிகா மஞ்சத்தின்மீது நீட்டிப் படுத்துக்கொண்டு கிடந்தார். அவர் சற்றும் சலனமின்றிச் சிலையேபோல் தோற்றமளித்து வந்த போதினும், நடுநடுவே படமெடுத்த பாம்புபோற்

சீறிப் பெருமூச்செறிந்து கொண்டிருந்தார். வெறுப்பும் கோபமும், ஆத்திரமும் ஆயாசமும் அவருடைய உதிர முழுவதையும் கொதிப்படையச் செய்து கொண்டிருந்தன. அன்று பகல் நடந்த சகல வைபவங்கள் மட்டுமின்றி, இறந்தகால நிகழ்ச்சி முற்றுமே அவர் கண்முன் படையெடுத்து வந்து நின்றன.

“இந்த மிஸ்ரின் ஸல்தனத்தை ஐயூபிகட்கே மீட்பித்துக் கொடுத்துக் காப்பாற்ற வேண்டுமென்று நான் எத்தனையோ வகைகளில் சொல்லொணாத் தியாகங்களெல்லாம் புரிந்திருக்கிறேன். ஆனால், ஆண்டவனோ இதை ஐயூபிகளிடமிருந்து பிடுங்கி என் காத்திடையளித்திருக்கிறான். இதை கலீஃபா மிகச் சுலபமாகவல்லவோ என்னிடமிருந்து ஏமாற்றி, அதட்டியுருட்டித் தட்டிப் பறித்துவிடப் பார்ககிறார்! ஆண்டவனுடைய நாட்டத்துக்கு இஃதொரு மாற்றமா? இல்லை. நான் ஏமாறப் போவதில்லை. இவ்வளவு தியாகங்கள் புரிந்த எனக்குப் பரிசாக இறைவன் கொடுத்துள்ள இந்தப் பெரிய ஸல்தனத்தை யான் ஒருபோதும் கைந்நழுவ விடமாட்டேன். இன்று விதவையாயிருக்கிற நான் சுல்தானாவாகப் பதவி வகிப்பதற்கு லாயிக்கில்லையென்று அந்த கலீஃபா பர்மானைப் பிரயோகிப்பதால், நானே மீண்டும் கட்டுக்கழுத்தியாகி இந்த ஸல்தனத்தை இன்னம் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டாலும் கொள்வேனன்றி, என் ராஜ்யத்தைக் கைந்நழுவ விடமாட்டேன். கடைசிவரை ஒருகை பார்த்துவிடுகிறேன் - அந்த மீசை தாடி முளைத்த அப்பாஸீ வம்ச கலீஃபா ஜெயிக்கிறாரா, அல்லது ஆண்டியாய் அலைந்து, அபலையாய் அவதியுற்று, அரசியா யுயர்ந்த ஒரு பெண்பிள்ளையாகிய நான் ஜெயக்கிறேனா என்று.

நாளையொரு காலத்தில் என்னுடைய வின்னியாசமான விருத்தாந்தத்தைப் படிக்க நேருகிறவர்கள் அந்த கலீஃபாவைப் பார்த்துக் கைகொட்டி நகைக்கும் வண்ணம் செய்யாவிட்டால் நானும் ஒரு ஷஜருத்துர்ரா! என்னைக் கைது செய்ய வந்த லூயீ என்னிடம் சிக்கிப் பெற்ற அவமானத்தைக் கேட்டு உலகம் சிரித்து மெய்சிலிர்ப்பது மட்டும் பற்றாது என்று கருதியே இப்போது இந்த கலீஃபா என்னிடம் வாலாட்டிப் பெருத்த அவமானத்தைச் சம்பாதித்துக் கொள்ள முற்பட்டிருக்கிறார் போலும்! நான் இந்த ராஜ்ஜியத்தை அவரிடமிருந்து களவாடினேனா? அல்லது அவருக்கு எவரேனுமோர் எதிரியைச் சிருஷ்டி செய்துவிடச் சூழ்ச்சி செய்கிறேனா? அவரே வலிய வந்து என்மீது மோதும்போது, நான் விட்டுக்கொடுத்தா விடுவேன்?

ஷஜருத்துர் எப்படிப்பட்டவள் என்பதை ரிதா பிரான்ஸுக்கு அறிமுகம் செய்துவைத்த நான் இந்த அமீருல் மூஃமினினுக்கும் முற்றமுற்ற அறிமுகப்படுத்தி விடுகிறேன். இந்த அமீருல் மூஃமினீனுக்கு, ஒரு பெண்ணடிமை கலீஃபாவையே தலைகவிழச் செய்யும் மலிக்காவாக உயர்ந்துவிட முடியுமென்பதைச் செயலளவில் செய்தே காட்டி விடுகிறேன். நான் இந்த கலீஃபாவுக்குக் கற்பிக்கிற பாடத்திலிருந்து, இவரை யொத்த பிற்காலச் சந்ததியாரும் நடுநடுங்கிப் போகும்படி செய்து விடுகிறேன்!” என்றெல்லாம் அவர் சூளுறவு செய்து கொண்டுவிட்டார்.

ஆனால், கலீஃபாவின் திட்டத்தைத் தவிடுபொடி யாக்குவதற்கு முதலில் ஷஜருத்துர் ஒரு தக்க கணவரை விவாகம் செய்துகொள்ள வேண்டுமே! இப்போது அந்தப் பிரச்சினைக்கு என்ன பரிகாரம்?

சகல கலையும் கற்றுத்தேர்ந்த ஷஜருத்துர்ருக்கு இவ்வற்பப் பிரச்சினைக்கா பரிகாரம் தெறியாமற் போகும்? முன்னம் கேவலம் அடிமையாயிருந்த காலத்திலேயே அவ்வளவு பெரிய ஐயூபி சுல்தானாகிய ஸாலிஹைச் சொற்ப நேரத்தில் தம் மோக வலைக்குள்ளே சிக்கச்செய்த ஷஜருத்துர், இப்போது சாக்ஷாத் மகாராணியாக - ஏகபோக அரசியாக, ஸாஹிபாவாக, ஜலாலாவாக, மலிக்காவாக உயர்ந்தோங்கியிருக்கும் இந்தக் காலத்திலா அவருக்கேற்ற ஒரு கணவனை அடையப் பெறுவதற்கு அவதிப்படப் போகிறார்? அஃதன்று பிரச்சினையின் அம்சம். ஆனால், தக்க கணவரைப் பிடிப்பதுதான் இப்போது ஷஜருத்துர்ரின் மூளையைக் குழப்பத் தலைபட்டது.

அவர் வரிக்கிற மனிதன் ஷஜருத்துர்ருக்கு எஜமானாய்ப் போய்விடக்கூடாது; ஆனால், அவருக்கு அடிமையாகவே என்றென்றும் இருக்க வேண்டும். அவர் சொல்கிறபடிதான் இவன் கேட்க வேண்டுமேயொழிய, இவனொன்றும் அவரை ஆதிக்கஞ் செலுத்த முடியாதவனாயிருக்க வேண்டும். கலீஃபாவை ஏமாற்றுதற்கு அவர் எடுக்கிற திட்டங்களுக்கெல்லாம் இவன் முற்ற முற்ற ஒத்துழைக்க வேண்டும். அவர் வெளி வேஷத்துக்காக ராஜ்யாதிகாரத்தைத் தாத்காலிகமாக இவனிடம் ஒப்படைத்தால், இவன் மீண்டும் அதை அவரிடமே திரும்பக் கொடுத்துவிடும் நம்பிக்கைக் குரியவனாக இருக்க வேண்டும். துரத்துகிற புலிக்குப் பயந்து, ஆற்றில் மிதக்கிற முதலையின் வாய்க்குள் பாய்ந்த கதையாக, கலீஃபா பறிக்க விரும்புகிற ஸல்தனத்தைத் தம் கையிலிருந்து நழுவவிட்டு விடக்கூடாதென்று ஆலோசித்து இப்போது ஒருவனை விவாகம் செய்து கொள்ளும்போது, நாளை ஒரு காலத்தில் இவனே ஷஜருத்துர்ருக்கு துரோகஞ்செய்து ஸல்தனத்தைக் கவரும்படி நேரவிடக் கூடாது. ஒரு கல்லால் இரு மாங்காய்களை வீழ்த்தியதுபோல், இப்போது ஷஜருத்துர் வரிக்கிற கணவன் கலீஃபாவை வீழத்துவதற்கும் உதவி புரிய வேண்டும்; ஷஜருத்துர்ரின் புருஷனென்ற ஹோதாவில் ஸல்தனத் ஆட்சியின் உரிமை மீது சொந்தம் பாராட்டாதவனாகவும் இருக்க வேண்டும். எனவே, இந்தச் சிக்கலான முடிச்சை எப்படி அவழ்ப்பதென்பது தான் ஷஜருத்துர்ருக்குச் சற்றுத் தலைவலியைக் கொடுக்க ஆரம்பித்தது.

“நான் இப்போது வரிக்கவேண்டிய கணவர் எக்காலத்திலும் என்னைவிடப் பலசாலியாக மாறிவிடாமலிருக்க வேண்டும்; ஆனால், அதே சமயத்தில் கலீஃபாவை எதிர்த்து நிற்கக் கூடிய பலமுள்ளவராகவும் இருக்க வேண்டும். அவர் வாலிபராகவும், நல்ல லக்ஷணமுள்ளவராகவும் விளங்க வேண்டும். ஆனால், அந்தப் பண்புகளுக்கு என்னை அடிமையாக்கிக் கொண்டுவிட முடியாத பலஹீனராகவும் இருக்க வேண்டும். எவ்வளவோ பாடுபட்டுழைத்திருக்கும் ஜாஹிர் ருக்னுத்தீனை மணந்துகொள்ளலாமென்றாலோ, அவருக்கு ஒருகண் பார்வை மந்தம். மேலும், அவருக்கிருக்கிற பலாட்டியத்துக்கு நான் அடிமைப்பட நேர்வதுடன் என் ஸல்தனத் என்னிடமிருந்து அவரால் பிடுங்கப்பட்டும் போய்விடலாம். வேறு என்ன செய்யலாம்? என் ஸல்தனத்தை நான் எப்படிக் காப்பாற்றிக் கொள்வது?”என்று சிந்தித்த வண்ணம் புரண்டு உருண்டார் ஷஜருத்துர்.

பாருங்கள்! - பதவியென்பது ஒரு மனிதனுக்கு அல்லது ஒரு மனுஷிக்கு வந்து கிட்டிவிட்டால், பேராசை யென்பதும் உடன் சேர்ந்தே பிறந்து விடுகிறது! தூரான்ஷாவின் வருகைக்காக “ஐயூபி ஸல்தனத்”தின் அமானத்துப் பேர்வழி யென்னும் தோரணையில் சில மாதங்கட்கு முன் காட்சியளித்த ‘விதவை’ ஷஜருத்துர்ருக்கும், இப்போது கபட சித்தத்துடன் ஒரு கணவனை வரிப்பதற்காக “என் ஸல்தனத்!” என்று அகம்பாவங் கொண்டு நிற்கும் சுல்தானா ஷஜருத்துர்ருக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா, பாருங்கள்!

இந்த நாகரிகம் முதிர்ந்த இருபதாவது நூற்றாண்டின் மத்திய காலத்திலேயே ஒரு மனிதனுக்குப் பதவியொன்று கிடைத்தால் அதோடு பேராசை, எதேச்சாதிகாரம், சர்வாதிகாரம், ஏகாதிபத்தியம், குறும்பு சேஷ்டை, சுயநல ஆதிக்கம், பட்டம்பதவி என்றுமே தன்னைவிட்டு அகலக்கூடாதென்னும் அநியாய மோகம் முதலியன வரம்புமீறி அதிகரித்து விடுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். ஜனநாயகத்தின் பெயரால், இந்தக் காலத்தில் ஆட்சி செலுத்துகிறவர்கள் பலரின் யோக்கியதையே இப்படியிருக்க, சுமார் எழுநூறு ஆண்டுகட்கு முன்னே ‘ஏகபோகம்’ நிலவிய மத்திய காலத்தில் ஷஜருத்துர் என்னும் ஒரு பெண்மணியாகிய அரசி இவ்வாறு மாற்றம் பெற்றதில் வியப்பென்ன இருக்கிறது? இங்ஙனமெல்லாம் நடப்பதேதான் இறைவனின் திருவிளையாடலென்று தத்துவம் போதிக்கும் வேதாந்திகள் சித்தாந்தம் உபதேசிக்கின்றார்கள்! இனிமேல் நாம் காணப்போகம் ஷஜருத்துர்ரின் சகல குணவிசேஷங்களும் இச்சித்தாந்தத்தின் விளக்கமேயாகும்.

ஷஜருத்துர் தம் அகக்கண்ணுள் பரிகாரம் தேடி ஒரு முடிவு காண்பதற்கும், பொழுது விடிவதற்கும் சரியாயிருந்தது. என்னெனின், சூரியன் எழுவதற்கும் அவருடைய எதிர்காலக் கணவர் இன்னாரென்பதை சுல்தானா நிர்ணயித்து முடிப்பதற்கும் சரியாயிருந்தது.

பொழுது புலர்ந்து சற்று நேரம் கழிந்ததும் சுல்தானாவைக் காணவும், தம் கடமைகளை நிறைவேற்றவும், தம் வழக்கத்துக்கொப்ப ஐபக் அந்தப்புரத்துக்குள் வந்து நுழைந்தார். ஷஜருத்துர் இன்னம் படுக்கையை விட்டு எழவில்லை யென்பதைத் தாதிகள் மூலம் கேள்வியுற்ற அநத அத்தாபேக் ராணியின் சயன அறைக்குள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்றுவிட்டார். இவ்வளவு நேரமாகியும் சுல்தானா ஏன் எழவில்லையென்று அவருடைய வதனத்திலே சந்தேகம் ஜனிப்பதற்குண்டான தோற்றங்கள் தோன்றத் துவங்கின.

ராணி திலகத்துக்குப் படுக்கையில் விபத்தேதும் நேரிட்டிருக்கக் கூடுமோவென்னும் ஐயத்துடனே அந்த ஐபக் மெல்ல ஷஜருத்துர்ரின் படுக்கையறைக்குள் தலையை நீட்டி மெதுவாக எட்டிப் பார்த்தார். சுல்தானா கண்ணை மூடிக் கொண்டு படுக்கையிலே மல்லாந்து கிடந்ததை அவர் கண்டார்.

இரண்டொரு நிமிடங்கள் சென்றன. ஷஜருத்துர் அப்போதும் கண் விழிக்கவில்லை.

ஐபக் மெதுவாக அந்தப் பஞ்சனையருகே நெருங்கிச் சென்று நின்று பார்த்தார். சுல்தானா சுகமாகத் தூங்குவதாக அவர் எண்ணிக் கொண்டார். பிறகு மிருதுவாகத் தம் அடித் தொண்டையால் கொஞ்சம் கணைத்தார். சுல்தான்களுக்கும் சுல்தானாக்களுக்கும் உணவை ருசிபார்த்துக் குற்றங்குறை காணும் மிகவும் யோக்கியப் பொறுப்பான உத்தியோகம் வகிக்கும் சஷ்னிகீர்களுக்கு அரசிகளைத் துயிலெழுப்பும் நாஜூக்கான வித்தையும் மிக நன்றாய் தெரியும்.  எனவே, ஐபக் கணைத்த கணைப்பும் அப்படிப்பட்ட வித்தையின் ஓர் அம்சமாகும். ஆனால், தூங்குகிறவர்களை எழுப்புகிற வித்தைதான் ஐபக்குக்கு தெரியுமேயன்றி, தூங்குகிறார்போல் கண்ணை மூடிக்கொண்டு பொய் தூக்கம் தூங்குகிறவரை எழுப்புகிற வித்தை எப்படித் தெரியக் கூடும்?

முஈஜுத்தீனோ ஷஜருத்துர்ரை எழுப்புவதற்காக என்னென்னவோ தந்திரங்கள் செய்துபார்த்தார். சுல்தானா எழுவதற்கு வழியொன்றும் கிடைக்கவில்லை. மெய்ம் மறந்து உறங்குகிற அரச குடும்பத்தினரைப் பலாத்காரமாவோ, பெரிய அதிர்ச்சியுறும் வண்ணமோ துயிலெழுப்புவது மிக மிகப் பெரிய குற்றமாகும். ஐபக் இன்னது செய்வதென்று புலப்படாமல் சற்று யோசித்தார். அறையிலிருந்து வெளியேறிச் சென்று, ஓரிரு பெண்ணடிமைகளை யழைத்து வந்து மிருதுவாக சுல்தானாவைத் தட்டியெழுப்புவது ஒன்றுதான் மார்க்கமென்று கண்ட அவர் மெதுவாகப் பின்னிடைய ஆரம்பித்தார்.

ஆனால் அந்த அறையின் கதவுகள் சந்தடியின்றிச் சார்த்தப்பட்டிருப்பதையும் கண்ட அவர் அப்படியே பிரமித்துவிட்டார். மீண்டும் அவர் அம்சதூளிகா மஞ்சத்தைத் திரும்பிப் பார்த்தார். இதுவரை தூங்கியதாகக் கருதப்பட்ட ஷஜருத்துர் படுக்கைமீது எழுந்தமர்ந்து குந்திக்கொண்டிருப்பதையும், குறும்பும் விஷமும் தொனிக்கும் மாதிரியில் கடைக்கண் ஓட்டிக்கொண்டு ஐபக்கைப் புன்முறுவலுடன் பார்த்துக் குதூகலிப்பதையும் கண்ட ஐபக் கள்வனைப்போலே திருதிருவென்று விழித்தார். அவருக்கு ஒன்றுமே புலப்படவில்லை. என்ன பெரிய குற்றத்தை இழைத்துவிட்டமைக்காக ஐபக் இப்படி ராணி திலகத்தின் படுக்கையறைக்குள்ளே, சாக்ஷாத் சுல்தானாவின் முன்னிலையிலே கைது செய்யப்பட்டு விட்டாரென்று அந்த அத்தாபேக்குக்கு அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. மெய் விதிர்த்து உள்ளங் குன்றும் அவர், எதிரே அமர்ந்திருக்கும் இன்னம் அதிகமான சந்துஷ்டியுடனே அதிகமாக நகைப்பதைக் கண்டு, பித்துப் பிடித்த பேயனைப் போல் தாடியைக் கோதிக் கொண்டார்.

விரகமொழுகும் மாதிரியிலே ஷஜருத்துர் கண்வலை வீசிக்கொண்டு, மிகவும் மிருதுவான தொனியிலே மிழற்றத் தொடங்கினார்:-

“நான் நேற்று தெரிவித்தபடி எனக்குரிய மணாளரைத் தேர்ந்தெடுத்து விட்டேனே, தெரியுமா?” என்று சுல்தானா ஷஜருத்துர் நேரே விஷயத்துக்குச் சென்றார். ஒரு திண்டின் மீது முதுகை லேசாகச் சாய்த்துக்கொண்டு, ஒரு காலை முடக்கி மற்றொன்றை நீட்டிக் கொண்டு முடங்கிய முழுங்காலைக் கோத்துக் கைவிரல்களைப் பிணைத்துக் கொண்டு அந்த சுல்தானா அப்போது அளித்த தோற்றம் கண்ணைப் பறிப்பதாயிருந்தும், செயலிழந்த ஐபக் எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “மிஸ்ரின் ஸாஹிபத்துல் ஜலாலத்தில் மலிக்காவாகத் திகழும் தங்களை மனையாட்டியாக அடையப் பெறும் பாக்கியசாலியான அப் புண்ணிய புருஷர் யாரோ?”என்று கம்பீரமிழந்த தொனியிலே பைய வினவினார்.

 “இவ்வளவு பெரிய மிஸ்ர் ராஜ்ஜித்தின் சுல்தானாவாக விளங்கும் எம்முடைய அத்தியந்த காதலுக்கு இலக்காகக் கூடிய அந்தப் பெரிய பேரதிருஷ்டசாலி யாரென்பதை நீரே யூகித்துச் சொல்லுமே, பார்ப்போம்!” என்று விரைவாகக் கண்சிமிட்டிக் கொண்டே ஷஜர் விஷமமாகக் கேட்டார்.

“பிறருடைய மனத்தில் என்ன உதித்திருக்கிறது என்பதை என் மனத்தால் கற்பனை செய்து சொல்லக் கூடிய வித்தையை யான் இன்னம் கற்கவில்லையே! தாங்கள் வரித்திருக்கும் அந்தப் புண்ணியவான் நிச்சயமாய்ப் பேரதிருஷ்டசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்பதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.”

“ஆம். நிச்சயமாகத் தங்களேதாம் எல்லா மிஸ்ரிகளுள்ளும் மிகப் பெரிய பேரதிருஷ்டசாலியாக விளங்கி வருகின்றீர்கள். தங்களுக்கே என் காதலை முற்றும் அர்ப்பணஞ் செய்துவிடுவதாகத் தீர்மானம் செய்துவிட்டேன். தங்களுக்கு இஃது எதிர்ப்பாராத பரிசல்லவோ, காதலீர்!”

ஐபக்கின் கண்முன்னிருந்த கறுப்புத்திரை இப்பொழுது கிழிந்தது. சுல்தானாவின் சூழ்ச்சிக்குத் தாம் இரையாகி விட்டதையும், இதுபொழுது ஏதும் மாறு சொன்னால் உயிருடன் வீடு திரும்ப முடியாதென்பதையும் அவர் உணர்ந்து கொண்டு விட்டார். நாடாளும் சுல்தானாவாகிய ஷஜருத்துர் எங்கே! கேவலம் மம்லுக்காயிருந்து அந்த சுல்தானாவின் கீழ்க் குற்றேவல் புரிகின்ற அத்தாபேக் எங்கே! முன்னொரு காலத்தில் அடிமை ஷஜருத்துர் சுல்தான் ஸாலிஹை மயக்கியது பெரிய விந்தையென்று கருதிவந்த ஐபக்குக்கு இப்போது சுல்தானா ஷஜருத்துர் தம்மிடம் இந்த மாதிரி காதல் காட்சி நடத்துவது நம்பமுடியாத பேரதிசயமாகத் தோற்றிற்று. அவர் அப்படியே செயலிழந்து நெடுமரமாக நின்றுவிட்டார். கண் கலங்கிவிட்டார்.

முஈஜுத்தீன் ஏற்கனவே விவாகமானவரென்பதையும், ஒரு மைந்தனைப் பெற்றவரென்பதையும் நாம் முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். மேலும், தம் மனைவிமீது அளவுகடந்த அபிமானம் மிக்கவர்; வேறு விவாகம் செய்து கொள்ள வேண்டிய அவசியமே சற்றுமில்லாதவர்; தம் மனைவியை உண்மைக் காதலுடன் நேசிப்பவர். அப்படிப்பட்ட அவரைத் தாம் மணக்கப் போவதாக ஷஜருத்துர் கூறினால், அவர் ஏன் கலங்க மாட்டார்? அவர் இன்று காலை அரண்மனைக்குப் புறப்பட்ட நேரத்தில்தான் அவருடைய மனைவி மைமூனா, மிகவும் பக்ஷத்துடனே அவரை வழியனுப்பி வைத்தாள். இந்த எண்ணமெல்லாம் சிந்தையிலே இன்னம் கலையாமலிருக்கிற நேரத்தில் ராணிதேவியாரிடமிருந்து இப் புதிய சாகசம் தோன்றினால், ஐபக் என்ன செய்வார்?

 “யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! அடியேனைத் தாங்கள் தயவு செய்து பிழை பொறுத்தருளல் வேண்டும். யானோ ஏற்கனவே மணமானவன். என் இனிய மனைவியோ ஆண்டனுதவியால் இன்னம் உயிருடனிருக்கிறாள். யானோ தங்களின் கீழான அடிமையாய் இருக்கிறேன். எத்தனையோ மன்னாதி மன்னர்களெல்லாம் தங்களையடையத் தவியாய்த் தவித்துக் கிடக்கும்போது...”

“இல்லை! நான் எல்லாவற்றையும் மிகநன்றாய் அறிவேன். நான் சகலவற்றையும் நன்கு யோசித்து முடிவு செய்தே உம்மைக் கணவராக வரித்திருக்கிறேன். இந்த ஸல்தனத்தையும் என்னையும் எப்படிப்பட்ட தியாகம் புரிந்தும் காப்பாற்றத் தயாராயிருப்பதாக நீர் முன்னம் எனக்களித்திருக்கும் ராஜவிசுவாச உறுதிமொழியை உமக்கு ஞாபக மூட்டுகிறேன். தற்சமயம் கலீஃபாவின் கோபத்துக்கு ஆளாகிக் கிடக்கிற என்னையும் இந்த மிஸ்ரையும் காப்பாற்ற வேண்டிய மகத்தான பொறுப்பு உம்மீது மட்டுமே சார்ந்திருக்கிறதென்பதையும் நினைவூட்டுகிறேன்.

“இஸ்லாத்தில் ஒரு கணவன் ஏககாலத்தில் அவசியத்தினிமித்தம் நான்கு மனைவிகள் வரை மணந்துக்கொள்ளலாமென்று அனுமதியளிக்கப்பட்டிருப்பதை மறந்து விடாதீர். இப்போது ஏற்பட்டிருக்கிற அவசர நிலைமையில் நீர் அந்த அனுமதியை ஏற்றுத்தான் தீரவேண்டும். நமக்குள்ளே விவாகமாகக்கூடாது என்று யாருக்காவது சொல்ல உரிமை இருக்கிறதென்றால், அது நானாகத்தானிருக்கிறேன். ஆனால், நானே உம்மை மணந்துகொள்ள ஆயத்தமாயிருக்கும்போது, உமக்கென்ன ஆக்ஷேபணை யிருக்க முடியும்?” என்று ராஜாகங்கார தோரணையுடன் முழங்கினார் ஷஜருத்துர்.

சற்றுமுன் விரகம் சொட்டிய அவர் வதனத்திலே ‘ராஜகோபம்’ ஜூவாலை வீசத் தலைப்பட்டது. முஈஜுத்தீனுக்கும் ஷஜருத்துர்ருக்கும் விவாகம் நடைபெற கூடாதென்று சொல்லும் உரிமையுங்கூட அந்த சுல்தானாவுக்குத் தாம் உண்டாம்! விந்தையே அரசி ஆக்ஞை!” 

Image courtesy totalwar-ar.wikia.com/wiki/Aybak

தொடரும்...

-N. B. அப்துல் ஜப்பார்

<<முந்தையது>> <<அடுத்தது>>

<<ஷஜருத்துர் II முகப்பு>>


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker