இனியதொரு விபரீதம்! - 4

Written by நூருத்தீன்.

“உலகம் முழுவதும் பல கண்டுபிடிப்புகள் சிலரின் சுயநலத்திற்காக மக்களை அடையாமல் போகுது. அல்லது என்னுடையதைப் போல தவறா திணிக்கப்படுது. நாற்பது வருஷத்துக்கு முந்தி

மூலிகையின் மூலமா தயாரிக்கப்படுற ஒரு மாத்திரையில் எய்ட்ஸிற்கு நிவாரணம் அளிக்க முடியும்னு ஒரு செய்தி வந்தது தெரியுமா?”

“பட், அது போலின்னு நிரூபிக்கப்படாமல் போயிடுச்சே.”

“கரெக்ட். அந்த முயற்சியில் இறங்கியவர் யாருமில்லை, என்னுடைய தந்தைதான். தனது கண்டுபிடிப்பு உண்மைதான்னு அவர் தீவிரமா நம்பினார். ஆனால் அவர் எடுத்த முயற்சிகள் அத்தனையும் அவருக்கு எதிராகவே அமைந்தன. பிறகு அவர் தனது இறுதி காலத்தின்போது மனநிலை சரியில்லாமல் இறந்து போனார். அவருக்கு மனநிலை சரியில்லாதது மட்டும் கொஞ்சம் அதிகமா விளம்பரப்படுத்தப்பட்டு, கடைசியிலே அவரது கண்டுபிடிப்பு வெளியே வராமலே போயிடுச்சு. என் தந்தை மேலே எனக்கு அபார நம்பிக்கை உண்டு. அவரது கண்டுபிடிப்பு தவறா அமைய வாய்ப்பில்லே என்பது என் அபிப்ராயம். ஆனால், அவருடைய இறுதிகால நிலையை எனக்கு எதிரா அரசாங்கம் பயன்படுத்தற வாய்ப்பு அதிகம். என்னுடைய கண்டுபிடிப்பு ஒன்று மக்களுக்கு எதிரா இந்த அரசாங்கம் பயன்படுத்துகிறதுன்னு நான் சொல்ல ஆரம்பித்தால் அடுத்த நொடி, எனக்குப் பைத்தியக்கார முத்திரை குத்தி, முழுசா முடிச்சிடுவாங்க. அதனாலே ஒரு மாற்று தயாரிக்கிற வரைக்கும் எனக்கு பொறுமை தேவைப்பட்டது. நௌ ஐ ஹவ் டன் இட்.”

“நான் என்ன செய்யட்டும்?”

”முதல்லே இதைப் பரீட்சிக்கணும். அதுக்கு உங்க உதவி தேவை.”

அனைத்தையும் கேட்டு முடித்த விஜே, “யெஸ் ஜி. நாளை மாலை நாம திருச்சி போறோம்.”

சென்றார்கள். அடுத்த மூன்றாவது நாள் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஜனவரி 2051

கதவைத் திறந்து உள்ளே நுழைந்த விஜேயைக் கட்டிப்பிடித்து முகம் முழுக்க சிவப்பாய் வரவேற்றாள் அவள் மனைவி.

“என்ன செம மூடு போல.”

“நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்.”

“நாளைக்கு என்னுடைய பர்த்டே. எப்பவும் போல நான் மறந்துடுவேன். நீ கிஃப்ட் கொடுத்து திகைக்க வைப்பே, பட், இப்ப அது முடியாது. என் கம்ப்யூட்டரே நான் கிளம்பும்போது ஞாபகப்படுத்தி அனுப்பியது.”

பொம்மை ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு, இவனைக் கண்டதும் சிரித்த மகனை கட்டிலில் இருந்து வாரி எடுத்து முத்தமிட, “நோ விஜே. இது ரியலி உங்களுக்கு ரொம்ப சர்ப்ரைஸான பர்த்டே கிஃப்ட், யூகிக்க முடியாது.”

யோசித்தான். என்ன தரப் போகிறாள். அவளைப் பார்த்தான். புதிதாய்ப் பூத்த ரோஜா போல், அப்பொழுதுதான் குளித்து, உடுத்தி, பளிச்சென்றிருந்தாள்.

“என்ன அது? நீயே சொல்லிடு.”

“நமக்கு மற்றொரு குழந்தை விஜே.”

உண்மையிலேயே இன்ப அதிர்ச்சி அவனைத் தாக்கியது. டாக்டர் அதுலின் கண்டுபிடிப்பு நிச்சயமாகிவிட்டது. ஆனந்தத்தில் அவளைத் தூக்க, “ஓ மெதுவா, முதல்லே ஜி-யிடம் பேசுங்க.”

“நிச்சயமா, உடனே பேசணும்.”

ஜி உடனே கிடைக்கவில்லை. ஆபீஸில் அவனது கம்ப்யூட்டருடன் தொடர்பு கொண்டு, அது இவன் யார் என்று வினவ, தனக்கென அவன் கொடுத்திருந்த அடையாள எண்ணை தெரிவித்தான். அவனது அரசாங்க அடையாள எண்ணைக் கேட்டு கம்ப்யூட்டர் சரி பார்த்துக்கொண்டு, “தங்களுக்கு ஒரு செய்தி காத்திருக்கிறது” என்றது.

“விஜே. டாக்டர் எனக்கு நேற்று ஒரு தகவல் தந்தார். நம்முடைய உற்சாகத்தைப் பறிக்கிற தகவல். ஒரு முக்கியமான வேலையா நான் வெளியில் போறதால இதில் மெஸேஜ் பதிவு செஞ்சு வெச்சிருக்கேன். ஏதாவது ஆச்சுன்னா ஆதாரமா இருக்கட்டுமே. டாக்டர் தனது சமீபத்திய கணிப்பு நிச்சயமானதுன்னு உறுதிப்படுத்தறார். அவர் கொடுத்தாரே மாற்று மருந்து, அது தாயை அடுத்து மலடாக்காமல் தடுத்திடுது. அரசாங்கம் பிறகு செலுத்தும் மருந்தோட வீரியத்தைச் செயலிழக்க வைக்குது என்பதெல்லாம் சரி. உன் மனைவி விரைவில் கர்ப்பமடையலாம். ஆனால்...,”

சற்று நிறுத்தி மறுமுனை தொடர்ந்தது. ”ஆனால் சைட் எஃபெக்ட்டா, அல்லது அவருடைய புது கண்டுபிடிப்பில் ஒரு குறையா, எப்படி வேணும்னாலும் சொல்லலாம். அது பிறக்கிற ஒவ்வொரு குழந்தையையும் பாதிச்சிடும்னு திட்டவட்டமா நம்பறார். அதாவது தாயை காக்கிற மருந்து குழந்தையைப் பாதிக்குது. புதுசா பிறக்கிற குழந்தை நிரந்தர இம்பொடென்ட் விஜே. அந்தக் குழந்தைக்குத் தாயாகவோ, தகப்பனாகவோ ஆகும் தகுதி இல்லவே இல்லை.”

அதிர்ச்சி காதில் அறைந்தது. புதிதாய்த் தொற்றிய இன்பத்தை புதுச் செய்தி முற்றிலும் அழிக்க, பலவீனமாய் உணர்ந்தான். “தன்னால் இதை சரிப்படுத்திட முடியும்னு டாக்டர் நம்பறார். முடியும், அவராலே முடியும். இவ்வளவு தூரம் வந்த அவராலே இந்தப் பிரச்சினையையும் சரி பண்ண முடியும். முயற்சி பண்ணப் போகிறேன் என்கிறார். ஆனால், அது எத்தனை நாள், எத்தனை மாசம், எத்தனை வருஷம் - அதான் தெரியலே விஜே.”

தன்னிரக்கம் தோன்றியது. இலக்கில்லாமல் கோபம் வந்தது. எதிரே பாதை மூடிக்கிடப்பதாய்த் தெரிந்தது. சோர்வாயச் சரிந்தான். இப்பொழுது அபாயகரமான கட்டத்தில் இருப்பதாய்த் தோன்றியது. பிறக்கும் அனைத்தும் மலடானால்? நினைக்கவே சகிக்காமல், “நோ” என்று பலமாய்த் தலையாட்டினான்.

மறுநாள் காலை ஜி தொடர்பு கொண்டான். “எங்கே போய்ட்டே ஜி? என் மனைவி இப்போ கர்ப்பம். சந்தோஷத்தைப் பரிமாறலாம்னு பேசினால், நீ வெச்சிருந்த மெஸேஜ், எல்லாத்தையும் கவுத்திடுச்சு. வாட் இஸ் திஸ், எல்லாமே அவ்வளவுதானா?”

“இல்லை! நேற்று மிக முக்கியமான அப்பாயின்ட்மென்ட். மிஸ்ராவை சந்திக்கப் போயிருந்தேன்.”

“யார் மிஸ்ரா?”

“குடியரசு கட்சி, நம்ம நாட்டின் எதிர் கட்சி, முப்பது வருஷமா எதிர்கட்சியாகவே இருந்துட்டு, இன்னமும் ஆட்சியைப் பிடிக்க போராடிட்டு இருக்கே, அதனோட தலைவர். அப்புறம் என்ன கேட்டே, எல்லாமே அவ்வளவு தானான்னா? இல்லே விஜே. இனிமேல்தான் எல்லாமே.”

முற்றும்

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 24 அக்டோபர் 2012 அன்று வெளியானது

<<பகுதி 1>> <<பகுதி 2>> <<பகுதி 3>>

e-max.it: your social media marketing partner