இனியதொரு விபரீதம்! - 3

Written by நூருத்தீன்.

திகிலுடன் வந்தக் கேள்வியை பிரதமர் கையமர்த்தி, “நோ, நீங்க பயப்படற மாதிரி நான் நினைக்கலே. இப்ப ஒரு குடும்பம் ஒரு வாரிசுன்னு தீவிரமா பிரச்சாரம் பண்ணினாலும், நம்மால்

எந்தச் சட்டம் போட்டும் அதை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் நிர்பந்தப்படுத்தலாம். அதை, உங்க மருந்து மூலமா நிர்பந்தப்படுத்தப் போறோம்.

எய்ட்ஸ் அளவிற்கு மோசமான ஹெப்படைட்டிஸ் நோயைத் தடுப்பூசி மூலமா கட்டுப்படுத்த முடியும் என்று எல்லா குழந்தைக்கும் அதை அளிக்க ஆரம்பித்தோம். பிரசவமாகும்முன் அதை அந்தத் தாய்க்கே போட்டுடலாம், குழந்தைக்குத் தேவையில்லேன்னு சில டாக்டர்கள் கண்டுபிடிச்சு நிரூபிக்க, இப்ப அதைதான் நாம செஞ்சுட்டு இருக்கோம். உங்களுக்குத் தெரியும், தரக்கட்டுப்பாடு காரணமா எல்லா தடுப்பு மருந்துகளும் அரசாங்க நிறுவனம்தான் தயாரித்து நாடெங்கும் வினியோகிக்குது. எங்களுடைய திட்டம் - ஹெப்படைடிஸ் தடுப்பு மருந்தோட சேர்த்து இந்த மருந்தையும் ஒரே மருந்தா பிரசவமாகும் பெண்ணுக்குச் செலுத்திடணும். அதன் பிறகு அந்தத் தாயை வேறு குழந்தை பெறாமல் தடுத்திடலாம்.

“டாக்டர் அதுல். இந்த நாட்டின் அபார வளர்ச்சிக்குத் துணையிருக்கப் போகும் உங்க கண்டுபிடிப்பு துரதிர்ஷ்டவசமா ஒரு மடிஞ்சு போன ரகசியமா மாறணும். ராணுவ ரகசியத்துக்கு இணையான ஒரு விஷயம் இது. இந்தத் திட்டத்துக்கு மக்கள் ஒத்துப்பாங்க என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால், அவங்களோட சிறந்த எதிர்காலத்துக்கான இந்தத் திட்டம், அவங்க மேலே அவங்க அறியாமல் நாம் நிச்சயமா திணிக்கப் போறோம். நல்லதுக்கான சில விஷயத்தை வற்புறுத்தி நடைபெற வைப்பது எதுவும் தப்பில்லை என்பது இந்த அரசாங்கத்தின் கருத்து. பல விஷயங்களை அதைப் போல வற்புறுத்திதான் நாம முன்னேறிட்டு இருக்கோம். உங்களைக் கௌரவப்படுத்த எங்களுடைய மந்திரிசபை காத்திருக்கு.“

அடுத்த இரு வாரங்களில், டாக்டர் அதுல், மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் டாக்டர் அதுல் ஆகிப்போனார். தனது கண்டுபிடிப்புக்கு அவர் உட்படுத்திய முதல் இந்தியப் பிரஜை அவரின் மனைவி. அவரது கண்டுபிடிப்பு யாருமறியா ரகசியமாக, அன்றிலிருந்து நடைமுறைக்கு வந்தது.

ஏப்ரல் 2021

டாக்டர் அதுலுக்கு இரண்டு வருடங்களில் அது நடந்தது. அவரது ஒரே மகன், இரண்டு வயது மகன், விளையாடிக் கொண்டிருந்தவன் படியிலிருந்து தவறி விழ, மண்டையில் படுகாயம். அதிக இரத்தம் இழந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்து போனான். இயற்கை இலேசாய் தனது ஆளுமையை நிரூபித்த நேரம் அது. கதறியழும் மனைவியைச் சமாளிக்க இயலாதவராகி கலங்கி நின்றார் டாக்டர் அதுல்.

சுள்ளென்று அந்த உண்மை அவரைச் சுட்டது. இனி தனது குடும்பத்திற்கு வாரிசு இருக்கப் போவதில்லை என்ற உண்மை அவரது நெஞ்சை வலிக்க வைத்தது. துக்கம் நிரந்தரமாய் நிலைத்துவிடும் என்ற நிலை உண்டான பின், பிரதமரைச் சந்தித்தார், பேசினார். இந்தத் திட்டத்தின் பாதகத்தை உணர்த்தினார். நிதானமாய்க் கேட்டுக்கொண்டார் பிரதமர். ஆனால் அந்தக் கோரிக்கை மறு சிந்தனையின்றி ஒதுக்கித் தள்ளப்பட்டது; முற்றிலுமாய் நிராகரிக்கப்பட்டது. அதைவிட முக்கியமாய், அரசாங்க ரகசியம் அவர் மூலமாய் எந்த நிலையிலும் வெளிவரக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மனம் வெறுத்துப்போய், தனது அமைச்சர் பதவியை அதுல் ராஜினாமா செய்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவரைச் சுற்றி ரகசியக் கண்காணிப்பு வளையம் விழுந்தது. அவரது ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு தொடர்பும் மிக நெருக்கமாய்க் கண்காணிக்கப்பட்டன. பொது வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி வாழ முடிவெடுத்து ஒதுங்கிய போதும் அது தொடர்ந்தது. அரசாங்கக் கழுகுப் பார்வை தொடர்ந்து வர, ஒரு கைதி போல் உணர ஆரம்பித்தார் டாக்டர் அதுல்.

துடிப்புடன் இருக்கிறார்கள், சிறப்பாய்ச் செயல்படுகிறார்கள். அவர்களின் குறிக்கோளில், இலட்சியத்தில் மாபெரும் உன்னதம் நிறைந்திருக்கிறது. ஆனால், இலட்சியத்தை அடைய எந்த மூர்க்கத்திற்கும் தயாராய், எவ்விதக் கருணைக்கும் இடமின்றி இருக்கும் இவர்களிடம் சிக்கிய தனது மருந்தையும் அதிலிருந்து மக்களையும் காப்பது எப்படி? டாக்டர் அதுல் யோசிக்க ஆரம்பித்தார். மனதில் ஒரு கனல் உருவாகி எரிய ஆரம்பித்தது. ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்ற கனல்.

ஜூன் 2050

அது அடங்க ஏறக்குறைய முப்பது வருடங்களாயின. அவரது மருந்திற்கு அவரே மாற்று கண்டுபிடிக்கும் முயற்சி வெற்றியடைந்தபோது, யுரேகா என்று கத்தாமல், வெற்றி வெற்றி என்று குதிக்காமல், விண்ணோக்கி தலையுயர்த்தி, கண்களை மூடிக்கொள்ள, இரு விழிகளிலிருந்தும் மெலிதாய் நீர்க்கோடு.

அடுத்து நம்பகமான வெளியுலகத் தொடர்பு தேவை என்ற நிலையில்தான், அவருக்கு ஜியின் அறிமுகம் ஏற்பட்டது. அது ஒரு தெய்வாதீனம். ஜியின் கெமிக்கல் நிறுவனம் தங்களது பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் டில்லியில் ஒரு கான்பிரன்ஸ் நடத்த, ‘மூலிகை மருந்தின் சக்திகள் - அது எக்காலத்திற்கும் உகந்ததா?’ எனும் தலைப்பில் பேச டாக்டர் அதுல் அழைக்கப்பட்டார். அப்பொழுது ஜியுடன் அவருக்கு ஒரு தொடர்பு உருவாக, அதைச் சரியான முறையில் அவர் பற்றிக்கொண்டார்.

தனது சொற்பொழிவு தகவல்களுடன், ஜியின் நேரடிப் பார்வைக்கு நடந்தவை அனைத்தையும் விவரிக்கும் குறிப்பை இணைத்து அனுப்பினார் டாக்டர் அதுல். குறிப்பிட்ட நாளன்று அவரது சொற்பொழிவு முடிந்து, மேடையிலுள்ள நாற்காலியில் தனதருகில் அமர்ந்த ஜியிடம், இயல்பாய் மெல்லிய குரலில் அவர் தனது உரையாடலைத் தொடர்ந்தார்.

“அத்தனையும் உண்மை ஜி. என்னுடைய மருந்து இந்த நாட்டுக்கு நல்லது செய்ததா, கெட்டது செய்ததா என்று நான் வாதாட விரும்பவில்லை. ஆனால், ஒரு மனிதனோட உரிமையை அவன் அனுமதியில்லாமல் பறிக்க நான் காரணமாயிட்டேன். ஆக, இந்தக் கண்டுபிடிப்பு அதற்கு நிவாரணமா அமையலாம்.”

“எப்படி டாக்டர்?”

“இப்போ ஹாஸ்பிடல்ல பிரசவம் நடைபெறுவதற்கு முன்னால், தடுப்பூசி என்கிற பேர்ல எல்லோருக்கும் ஊசி செலுத்தப்படுது. ஆனால் அதுக்கு முன்னால் நான் இப்போ புதுசா கண்டுபிடிச்சிருக்கிற மருந்தை செலுத்தினால் அடுத்து அவங்க செலுத்தப்போற மருந்தோட வீரியத்தை முற்றிலுமாய்ச் செயலிழக்கச் செய்ய முடியும். ஒரு புது பிரசவத்திலே இதைப் பரிசோதித்துப் பார்க்கணும். மீண்டும் அந்தத் தம்பதிக்குக் குழந்தை உண்டானால், தேர் இஸ் இட். பிறகு இதை ஒரு மௌனப் புரட்சியா பிரபலப்படுத்தலாம். உங்க நிறுவனம் இதை உற்பத்தி செஞ்சு, ஒருத்தருக்கு, அவங்க மற்றவங்களுக்குன்னு வினியோகிக்க, ஒரு சைன் டிஸ்ட்ரிப்யூஷன் ஏற்படுத்தலாம். மறைமுகமா ஒரு பாதிப்பை ஏற்படுத்திய என் மருந்தை, மறைமுகமா இந்த மருந்து முறியடிக்கும்.”

“ஏன், இதை நேரிடையா மக்களிடம் விளம்பரப்படுத்தி செயல்படுத்த முடியாதா டாக்டர்?”

“நீங்க இந்த அரசாங்கத்தோட வலிமையை குறைச்சு மதிப்பிடுறீங்க ஜி. இங்கு குழுமியிருக்கும் கூட்டத்திலே எத்தனை பேர் அரசாங்க ஒற்றர்கள்னு என்னாலே சொல்ல முடியும். இந்த முப்பது வருஷமா நான் அதிகம் பட்டுட்டேன். நான் ஒரு சுதந்திர கைதி. என் முதுகிலே எந்நேரமும் ஒரு துப்பாக்கி முனை அழுத்திட்டிருக்கு. உங்க நிறுவனத்தின் இந்த நிகழ்ச்சி சரியான நேரத்திலே எனக்குக் கிடைச்ச ஒரு நல்ல வாய்ப்பு. அதனாலதான் நீங்க என்னைக் அழைத்தபோது எந்த மறுப்பும் இல்லாமல் சம்மதிச்சேன். இத்தனை வருஷமா நான் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அவையும் அரசாங்க நிகழ்ச்சிகள்.

தொடரும்...

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 02 அக்டோபர் 2012 அன்று வெளியானது

<<பகுதி 1>> <<பகுதி 2>> <<பகுதி 4>>

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker