இனியதொரு விபரீதம்! - 2

Written by நூருத்தீன்.

“சொல்றேன் விஜே. பெரிய விஷயம், நிதானமா பேசணும், அதுக்கு முன்னாலே, நல்லா சாப்பிடணும், செம பசி.”

சென்னையின் இரவு வெளிச்சமாய் இருந்தது.

பாரதி சாலை வழியே செல்ல, ஜாம்பஜார் மார்க்கெட், ஜாம்பஜார் டவர்ஸாக இருபத்தைந்து மாடி உயரத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. முழுவதும் ஏஸியுடன், வழுக்கும் பளிச் தரையுடன், ஈ மொய்க்காத, நாற்றமில்லாத ஜாம்பஜார். பிரஸிடன்ஸி காலேஜ் அருகில், பீச் ரோடில் அமைந்திருந்த, புஹாரீஸ் அடைந்தார்கள்.

நீள உயர்ந்த தூண் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்தது போல், புஹாரீஸ் அமைந்திருந்தது. முழுவதும் கண்ணாடி; சுழலும் உணவகம். தூணுக்குள்ளிருந்த லிப்டில் ஏறி, ரெஸ்டாரெண்ட்டை அடைய, சிப்பந்தி பணிவுடன் அழைத்துச் சென்றான். கீழே தூரத்தில் விளக்கொளியில் மெரீனாவும், உல்லாசமாய் மனிதர்களும் தெரிய, கடல் இருட்டாய் இருந்தது. உணவுக்கான ஆர்டரைப் பெற்றுக்கொண்டு சிப்பந்தி நகர, ‘இப்போ சொல்’ என்பது போல் விஜே ஏறிட்டான்.

“உனக்கு இந்த இந்தியா பிடிச்சிருக்கா?”

சிரித்தான். “வொய் நாட்? ரொம்ப பிடிச்சிருக்கு. வந்தே மாதரம், ஜெய் ஹிந்த்.”

ஜி தனது முகத்தில் எந்தப் பாவமும் இல்லாமல், “நீ இந்த அரசாங்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறே?”

“இட்ஸ் ஜஸ்ட் ஃபைன். குழப்பறியே, கம் அவுட் ஜி.”

“நம்ம முன்னேற்றம், ஆளப்படும் விதம், இதப்பற்றி?”

“நீ என்ன கேட்கிறேன்னு தெரியலே. பட் இட்ஸ் ஸில்லி. நாம எப்படி இருந்தோம் தெரியுமா? நேத்து பழைய தமிழ் படம் ஒன்னு பார்த்தேன். ஐம்பது வருஷத்துக்கு முந்தைய படம் - அதுவும் சேரியை மையமா வெச்சு. அதோ எதிர் டேபிள்ல ஒரு பையன் உட்கார்ந்திருக்கானே அவன் கிட்டே சேரின்னா என்னன்னு கேளேன். முழிப்பான். நாம எவ்வளவு சாதிச்சிருக்கோம் தெரியுமா? ஜஸ்ட் இந்த முப்பது வருஷமா, இந்த ஒரே கட்சி ஆளற இந்த முப்பது வருஷமா, எவ்வளவு தூரம் வந்திருக்கோம் தெரியுமா? அடுத்த பத்து வருஷத்துலே நாமளும் ஒரு வல்லரசு நாடு. தே ஆர் ஸிம்ப்ளி டூயிங் கிரேட். மக்களை மதிச்சு மக்களுக்காக நடத்தப்படுது இந்த அரசாங்கம்.”

“நீ சொல்றது சரி. முப்பது வருஷத்துக்கு முந்தி அமெரிக்காவில் கிடைச்ச அத்தனை சொகுசும், வசதியும்... அதெல்லாம் அப்ப கனவு, இப்ப நமக்கு சாத்தியமாகிவிட்டது.“

“இந்த நூற்றாண்டு துவங்கும்போது நம்ம நாடு எப்படி இருந்தது? பரிதாபகரமான நிலையில். அப்பல்லாம் அஞ்சு வருஷத்துல மூன்று முறை அடிச்சுகிட்டு தேர்தல். ஒவ்வொரு அரசாங்கமும் புரிந்த ஊழல், எல்லாரையும் கோவணம் கட்டற அளவுக்குத் தள்ளிக்கிட்டு போனப்ப யார் கிட்டேயாவது 2050-ல இப்ப நாம இருக்கிற மாதிரி யாராவது கதை எழுதியிருந்தா, நக்கலா சிரிச்சிருப்பாங்க. பட், இப்ப அதான் உண்மை. யாருமே எதிர்பார்க்காத ஒரு புரட்சி! மற்றுமொரு விடுதலைப் போராட்டம் போல், அஞ்சு வருஷத்துக்கு நாடு படாத பாடு பட வேண்டியிருந்தது. அதனால் என்ன? 2018-லேருந்து இந்த அரசாங்கம் வந்து, திருப்பி போட்டாற் போல எல்லாத்தையும் மாத்திட்டாங்க.”

ஜி அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க, “இப்பவும் அமெரிக்கா மத்த சில ஐரோப்பிய நாடுகள்ல இருக்கிற அளவுக்கு நாம இல்ல. பட், இடைவெளி எவ்வளவு? ஜஸ்ட் பத்து வருஷ இடைவெளி. சாதிச்சிடுவோம், இதே நிலையில இருந்தா சாதிச்சிடுவோம்.”

“இதுக்கெல்லாம், நாம ஒரு விலை கொடுத்திருக்கோம், விஜே.”

“நத்திங். எல்லோரும் உழைக்கிறாம் - சின்சியரா. அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாங்க, நாம வளர ஈசியா இருந்துச்சு.”

“அதுல எந்த அபிப்ராய பேதமும் இல்லே. விஷயம் வேறு. புரட்சி நடத்தி ஆட்சிக்கு வந்தவங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையா இருந்தது என்ன தெரியுமா? மக்கள் தொகை. பாப்புலேஷன்! கட்டுப்படுத்த முடியலே. மக்கள் ஆசைப்பட்டாங்க - ஆண் குழந்தை இருந்தா ஒரு பொண்ணு வேணும். பெண் குழந்தை இருந்தா ஒரே ஒரு ஆண் வேணும். அந்தக் காலத்திலே அவங்க வெச்சிருந்த ஒரு குழந்தை ஒரு வாரிசு, வெறும் விளம்பரம். அது ஒரு பெரிய சேலஞ்ச் ஆயிடுச்சு.”

“அப்ப மக்கள் கிட்டே கல்வியறிவும் பத்தலியே. இப்பக் கல்வியறிவு நூறு சதம். குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் சக்ஸஸ். லேட்டஸ்ட் புள்ளி விபரம், 85 சதவிகித இந்திய குடும்பத்திலே இப்ப ஒரு குழந்தை தான். விரைவில் அது நூறு சதம் ஆகிடும்.”

“நாம கொடுத்த விலை அதுதான் விஜே. நம்ம உறவு! நம்ம இரத்த சொந்தம். இன்னும் பத்து வருஷத்துலே தமிழ்லே உறவு அறிவிக்கிற பல சொற்கள் வழக்கொழிஞ்சு, அப்பா, அம்மா, மகன், மகள், தாத்தா, பாட்டிங்கிற இந்த ஆறு சொற்கள் மட்டுந்தான் பாக்கியிருக்கப் போவுது. இதோட சேர்ந்து அழியப்போறது மனிதன் தோன்றிய நாள் முதலா இருந்து வந்த பாசம். இரண்டே பாசம் மட்டும் தான் மிச்சமிருக்கும். பெற்றோர் பாசம், பிள்ளைப் பாசம். எவ்ரிதிங்க் எல்ஸ் வில் பி டெட். நோ அண்ணன், தம்பி, அக்கா, தங்கை பிஸினஸ். சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, அண்ணி, மன்னின்னு யாரும் கிடையாது.”

“அப்படி ஆசைப்படறவங்க இன்னும் ஒன்று பெத்துக்கட்டும். ஒன்லி திங்க், வசதி நலிந்துவிடும். ஒரு குழந்தைக்கு காலேஜ் வரை படிப்பு இலவசம். ஒரு குழந்தைக்கு அதிகமா இருந்தா, முதல் குழந்தை படிப்பு செலவுலே அம்பது சதம், அடுத்த குழந்தை செலவு முழுவதும் கொடுக்கணும். எஜுகேஷன் செலவு எவ்வளவு தெரியுமா? ஒரு குழந்தைக்கு, சராசரி தனிநபர் வருமானத்துலே பாதி. யோசிச்சுப் பாரு. ஸோ, எவ்ரிபடி இஸ் வித் ஒன் அன்ட் ஒன்லி சைல்ட்.”

“அதான் விஜே. நீ, நான், ஏன் எல்லோரும் அப்படிதான் நினைச்சுட்டு இருக்கோம். குடும்பக் கட்டுப்பாடு நம் ஒத்துழைப்புலே வெற்றியடையலே. நாம் எல்லாம் வற்புறுத்தப்பட்டு – நம்முடைய ஒப்புதல் இல்லாமல் வற்புறுத்தப்பட்டு - அது வெற்றியடைஞ்சுட்டு இருக்கு.”

“நீ என்ன சொல்றே?”

“அதுக்குத்தான் நான் உன்னை நேர்ல பார்க்க வந்திருக்கேன். சொல்லணும். என் மண்டை வெடிக்கிற ஒரு விஷயத்தைச் சொல்லணும். நாம் ஒரு மாற்றத்தைத் தோற்றுவிக்கப் போகிற விஷயம், உறவுகனை நிலை நிறுத்தப் போகிற விஷயம். அதை இங்க பேசறது நல்லதில்லே. ப்ளாட்டிற்குப் போகலாம்.”

அழைத்துச் சென்று பழைய கதையொன்றைச் சொன்னான்.

o-O-o

பிப்ரவரி 2019.

டாக்டர் அதுல் பிரதமரைச் சந்திக்க அழைப்பு வந்தது. அதுல் தமிழகத்தைச் சேர்ந்த மிக புத்திசாலியான டாக்டர். மூலிகை மருந்தில் அதிக கவனம் செலுத்தி, சிறியதாய் ஓரிரு புதிய கண்டுபிடிப்பு முயற்சிகளில் வெற்றியும் பெற்று, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தவர். அவரைப் பிரதமர் சந்திக்க அழைப்பு வந்து டெல்லி விரைந்திருந்தார்.

“வெல்கம் டாக்டர் அதுல். சில நாட்களுக்குமுன் நீங்க உள்நாட்டுத் துறை அமைச்சரை ஒரு விழாவில் சந்திச்சபோது தெரிவிச்ச ஒரு விஷயம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் கேள்விபட்டது உண்மை என்றால், அது நம்ம நாட்டு தலைவிதியை மாத்தப் போகிற ஒரு மாபெரும் விஷயம். உண்மைதானா?”

“நிச்சயமா. அது தற்செயலா நான் கண்டுபிடிச்ச ஒரு மூலிகை மருந்து. ஓர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அதை செலுத்திவிட்டால், அதன் பிறகு அவர்கள் ஒரு குழந்தையை உருவாக்கிற சக்தியை நிரந்தரமா இழந்து விடுவார்கள். பட், இது நம்ம நாட்டுக்கு எப்படி...”

“சொல்றேன் டாக்டர். ஒரு பெண் கர்ப்பமடைந்த பிறகு இதை செலுத்தினால்?“

“அந்தக் கருவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லே. முழுவதும் ஆரோக்கியமா அந்தக் குழந்தை பிறக்கும். ஆனால், அதற்குப் பிறகு அவள் மீண்டும் தாய் ஆகக் கூடிய வாய்ப்பை இழந்துவிடுவாள்.”

“இப்ப உங்க கேள்விக்கு வருவோம். மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த நம்ம நாட்டை ஒரு பெரிய சாதனையா மாற்றி, மெதுவா முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு போய்ட்டு இருக்கோம். தரமான, முழுவதும் முன்னேற்றமடைந்த இந்தியா நமது இலட்சியம். நம்ம நாட்டுல புரையோடிக் கிடக்கிற அத்தனையையும் மாற்ற வேண்டியிருக்கு. ஆனா, முக்கியமான பிரச்சினை மக்கள் தொகை. நம்முடைய பல எதிர்காலத் திட்டங்களுக்கு முக்கிய இடையூறா இது நம்மை பயமுறுத்துது.”

“ஸோ?”

தொடரும்...

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 08 செப்டெம்பர் 2012 அன்று வெளியான சிறுகதை

<<பகுதி 1>> <<பகுதி 3>> <<பகுதி 4>>

 

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker