இனியதொரு விபரீதம்! - 1

Written by நூருத்தீன்.

ஜூலை 2050.

மணி அடிக்கும் சப்தம் கேட்டு விஜே கண் விழித்த போது மணி காலை 4:30. கண்ணைத் திறக்க முடியாமல் தூக்கம்

அப்பியிருந்தது. வீட்டின் மைய கம்ப்யூட்டருடன் இணைந்திருந்த அந்த போன் போன்ற வஸ்து, நாலு முறை ஒலித்து விட்டு அழைத்தவருக்குப் பதில் அளிக்கும்முன் தன் தூக்கம் கலைந்து கட்டிலின் பக்கத்திலிருந்த பட்டனைத் தட்டினான்.

“ஹலோ விஜே ஹியர்” என்று அவன் சொன்னதை சீலிங்கில் இருந்த மைக்ரோஃபோன் துல்லியமாய் மறுமுனைக்கு அனுப்ப அதற்குள் அந்த அறையின் சுவரில் வரையப்பட்டிருந்த கட்டம் திரையாய் உருமாறியது. அதில் அவன் நண்பன் ஜி.

“ஹப்பா, எழுந்திட்டியா. எங்கே பேச முடியாம போயிடுமோன்னு நினைச்சேன். நான் டில்லியிலிருந்து பேசறேன். ஆறு மணி ப்ளைட்ல பெங்களூரு போறேன். மதியம் இரண்டு மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங். சாயந்தரம் ஆறு மணிக்கு சென்னை வர்ரேன்.”

“சந்தோஷம். எத்தனை நாள் விஜயம்?”

“முடிவு பண்ணலே. உன் மனைவி கன்ஸீவ் ஆகியிருக்கிறதா, நாலஞ்சு மாசத்துக்கு முன்னால போன் பண்ணும்போது சொன்னியே, டெலிவிரி ஆயிடுச்சா?”

“இன்னும் ஒரு வாரத்துல ஆயிடும். அவ திருச்சியிலே இருக்கா.”

“நல்லது. நான் ஈவினிங் உன்னை மீட் பண்றேன். நிறைய பேசணும். பை.” அவசரமாகத் தகவல் தொடர்பு முடிந்த நொடி, திரை சுவரானது. மைக்ரோஃபோன் உறக்க நிலைக்கு மாறிக்கொண்டது.

ஜியிடம் தெரிந்த பதட்டத்தை விஜே கவனிக்கத் தவறவில்லை. அவனிடம் பேசி நாலைந்து மாதம் ஆகியிருக்கும். திடீரென்று இன்று போன் செய்து, மனைவியைப் பற்றி விசாரிக்கிறான், மாலை சென்னை வருகிறேன் என்கிறான். என்ன அவசரம்? புரியவில்லை. ஆனால் தூக்கம் முற்றிலுமாய்க் கலைந்து போய், நெடுநாள் கழித்து நண்பனை நேரில் சந்திக்கப் போகும் மகிழ்வுமட்டும் மனதிற்குள் இலேசாய் எட்டிப்பார்த்தது.

இருவரும் ஒன்றாய்ப் படித்து வளர்ந்த இணைபிரியா நண்பர்கள். ஏறக்குறைய ஒரே வயது. தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரது நிறுவனத்தை முழு அளவில் கவனிக்க இறங்கி, சென்னையிலேயே விஜே ஸ்திரமாகிவிட, ஜி டில்லியிலுள்ள ஓர் இன்டர்நேஷனல் கெமிக்கல் கம்பெனியில் இணைந்து, முன்னேறி, இன்று டைரக்டர் ஜி. டில்லியிலேயே திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகி விட்டிருந்தான். விஜேவுக்குப் பல வருடங்கள் குழந்தையின்றி, பல மருத்துவத்திற்குப் பின் அவன் அனைவி கருவுற, அரசாங்கம் நிர்ணியித்திருந்த ஒரு குடும்பத்திற்குண்டான ஒரே வாரிசு உருவானது.

அடுத்த அரை மணி நேரம் புரண்டு படுத்தும் தூக்கம் பிடிக்காமல், எழுந்து பாத்ரூமில் நுழைந்தான். டைல்ஸ் பதித்து, நறுமணம் வீசும் பளிச் டாய்லெட். முடித்துவிட்டு வெளியில் வர, பசித்தது. கிச்சனில் நுழைந்தான். தம் புராதன வடிவமைப்பு மாறிப்போய், ஸ்டீல் பளபளப்புடன் அடக்கமாய் அமைந்திருந்தன குளிர்சாதனப் பெட்டகம், அடுப்பு, பாத்திரம் துலக்கும் இயந்திரம். அனைத்திலும் சிறுசிறு திரைகள், சில பொத்தான்கள். அறையின் மையமாய் இருந்த சதுரத் திரையொன்றில் விரல்களால் தொட “மெனு” உயிர்பெற்றது. அது கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல, டோஸ்ட்டர் போன்ற கருவியிலிருந்து சுடச்சுட இட்லியும், சட்னியும் அருகிலிருந்த மற்றொரு கருவியிருந்து தேநீரும் நிரம்பி வந்தன.

எடுத்துக்கொண்டு, ஹாலின் ஓரத்திற்கு வந்து சன்னலின் வினைல் திரையை விலக்க, நாற்பத்தைந்து அடுக்கிற்குக் கீழே, கார்களும் பஸ்களும் குட்டி குட்டியாய் விரைந்து கொண்டிருந்தன. சாலைகளில் பிரகாச விளக்கொளி. திரும்பி நின்று ‘டி.வி... வெதர் சேனல்’ என்று அவன் பேசியதும், சுவரில் பதிந்திருந்த திரை உயிர்பெற்று வானிலை அறிக்கை தெரிந்தது. கண்ணுக்குத் தெரியாத ஸ்பீக்கர்களிலிருந்து மிகச் சன்னமாய் உறுத்தாமல் பரவிக்கொண்டிருந்தது டிவியின் ஆடியோ.

வானுயர்ந்த கட்டிடங்களுடன் சென்னை பிரமாண்டமாகியிருக்க, பெயர் மாறாத இராயப்பேட்டையில் கோபலபுரம் - பீட்டர்ஸ் ரோடு சந்திப்பில் அமைந்திருந்தது அவன் இருந்த அந்த காந்தி டவர்ஸ். ஒவ்வொரு சாலையிலும் பலப்பல டவர்கள். ஒவ்வொரு டவருக்குள்ளும் குடியிருப்பு, வியாபாரத் தளங்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், செயற்கை விளையாட்டு மைதானம் என ஒவ்வொன்றும் சிறு சிறு நகரங்கள். அதையெல்லாம்விட பெரும் ஆச்சரியம், ஒவ்வொரு கட்டிடத்திலும் அனைத்து குழாய்களிலும் 24 மணி நேரமும் சுத்தமான நீர்!

காலையாகாரம் முடித்து, தயாராகி, லிப்டில் அடித்தளத்தை அடைந்தான் விஜே. அரசாங்க பஸ்களில், சப்தமின்றி ஏஸி இயங்க, மாணவர்களையும், அலுவலர்களையும் அழைத்துச் செல்ல ‘புஸ்’ என்று சிறு பெருமூச்சுடன் அவை நின்றுகொண்டிருந்தன. புகை கக்காத மின்சார பஸ்கள். பார்க்கிங்கில் இருந்த தன்னுடைய மின்சார காரில் ஏறி சாலையை அடைந்தான். மாடு, ஆட்டோ, சைக்கிள் இல்லாத துப்புரவான சாலையில் தூசு, புகை, இரைச்சலில்லாமல் வாகனங்கள் வேகமாய் வழுக்கி விரைந்துக் கொண்டிருந்தன.

ஆயிரம் விளக்கில் திரும்பி கீழே நகரும் சிக்னல் டிராபிக்கை தவிர்த்து, அண்ணாசாலையின் மேலே சிக்னலின்றி அமைக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்வேயில் கலக்க, இரண்டு நிமிடங்களில் 120 கி.மீ, வேகத்தில் நான்காவது டிராக்கில் வாகனம் மிதந்தது. நெருக்கமான உயர்ந்த கட்டிடங்களுக்கு இடையே நூறாண்டுக்கும் முந்தைய 14 அடுக்கு LIC கட்டிடம் மட்டும் அபத்தமாய் நின்றுகொண்டிருந்தது. அதை அரசாங்கம் நினைவுச் சின்னமாக்கியிருந்தது.

சிங்காரச் சென்னை; ஹைடெக் கிராமங்கள்; பன்மடங்கு ஹைடெக்கான நகரங்கள் என்று புதுப்பொலிவுடன் முன்னேறும் நாடுகளின் முதல் வரிசையில் இடம் பிடித்திருந்தது இந்தியா. அடுத்த பத்தாண்டுகளில் வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியாவை அமர்த்தியே தீருவோம் என்று ஆளும் ஜனநாயக கட்சி உறுதி அளித்திருந்தது. சுபிட்சம் பெருகி, வளமான, உன்னதமான இந்தியாவில் இரண்டே இரண்டு கட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு - ஆளும் ஜனநாயக கட்சி, எதிர் கட்சியாக குடியரசுக் கட்சி.

அண்ணாநகருக்குப் பிரியும் கிளை சாலையில் வெளிவந்து ஆபீஸ் கட்டிடத்தை அடைந்தான் விஜே. தனது கட்டை விரலை கதவுக்குப் பக்கத்திலிருந்த ரீடரில் ஒத்த, அது ஆரூடம் பார்த்துவிட்டு கதவைத் திறந்தது. இரைச்சலில்லாமல், அரட்டையில்லாமல், சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது அலுவலகம். வேலையில் மூழ்கும் நேரம், திருச்சியிலிருந்து அழைப்பு என்றது கைப்பேசி கருவி. மனைவி பேசினாள். “சனிக்கிழமை ஆயிடும்னு சொல்றாங்க விஜே. வெள்ளிக்கிழமை அட்மிட் ஆகச் சொல்றாங்க, வெள்ளிக்கிழமை காலைல வர்றீங்களா?”

டெலிவரிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்தன. “நான் சனிக்கிழமை காலை வந்துடறேனே, இங்க கொஞ்சம்...”

அவள் மறித்தாள். “பிஸினஸ் தானே?. அது வெய்ட் பண்ணும். எனக்கு நீ பக்கத்துல இருக்கணும். முதல் பிரசவம், அதுவும் ஒரே பிரசவம். நல்லபடியா ஆகணுமே, நீ பக்கத்துல இருந்தாதான் எனக்குத் தெம்பு. புரிஞ்சுக்கோ விஜே.”

யோசித்தான். பிறகு “இன்னிக்கு சாயந்தரம் ஜி வரான். காலையில் என்னிடம் பேசினான். ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னான். என்னன்னு தெரியலே. அவன் எத்தனை நாள் இருப்பான்னு தெரியலே. ஐ வில் டூ ஒன் திங். அவன் வந்ததும், நான் நாளைக்கு போன் பண்றேனே.”

சிணுங்கினாள். “நீ சொல்லு. அவன் புரிஞ்சுப்பான். ஐ வில் வெயிட் ஃபார் யூ. பை தி பை, ஜியை நான் விசாரிச்சேன்னு சொல்லு.”

ஆனால் மறுநாள் மாலையே திருச்சிக்கு பயணிக்கும்படி இருக்கும் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

o-O-o

மாலை ஐந்து மணிக்கு ஜி அழைத்தான். “நான் கிளம்பிட்டேன். கார்லேருந்து பேசறேன். எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன்,” என்றான். சொன்னதைப்போல் மூன்று மணி நேரத்தில் அவனது கார் சென்னை காந்தி டவர்ஸை அடைந்தது. நாடெங்கும் நெடுஞ்சாலைகள் மகாநதியாய்ப் பரவி, இரு பிரிவுகளிலும் ஐந்து லேன்களுடன் அமைக்கப்பட்டு, சிக்னல் இல்லாத, குண்டு குழிகளற்ற சாலைகள் பயணத்தை மிகவும் எளிதாக்கி விரைவுபடுத்தியிருந்தன.

காபியை உறிஞ்சிக் கொண்டே ஜி கேட்ட முதல் கேள்வி, “எப்ப உன் மனைவிக்கு டெலிவரி?”

“காலைல தான் பேசினேன், சனிக்கிழமையாம். வெள்ளிக்கிழமை அட்மிட் ஆகச் சொல்லியிருக்காங்க.”

“தேங்க் காட், இன்னிக்கு செவ்வாய்க்கிழமை. அனேகமா நாம நாளைக்கு திருச்சிக்குப் போறோம், நீ ஒத்துக் கொண்டால்.”

"என்ன விஷயம், புரியும்படியா சொல்லேன், எதுக்கு அவசரமா நாளைக்கே திருச்சி?"

தொடரும்...

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் 05 செப்டெம்பர் 2012 அன்று வெளியான சிறுகதை

<<பகுதி 2>> <<பகுதி 3>> <<பகுதி 4>>

e-max.it: your social media marketing partner