பாஸிட்டிவ்

மூட்டை கட்டிக்கொண்டிருந்தார் அம்மா. மனம் களைப்பாய் இருந்தாலும் வேகமாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தார். ‘இது சரிதானா? நல்லா யோசிச்சுட்டியா?’

“இதுல யோசிக்க என்னங்க இருக்கு? எப்பவுமே அவன் சந்தோஷம்தானே நமக்கு முக்கியம். அவனுக்கு இதுதான் சரிவரும்னு தோணியிருக்கு.”

புடவைகளை அழகாக மடித்து வைத்துக்கொண்டார். வெள்ளைப்பூ டிஸைன் போட்ட புடவையை மடிக்கும்போது கிழிந்திருந்த ஓரம் கண்ணில்பட்டது. அடுத்தமுறை உடுத்தும்முன் தைத்துவிட வேண்டும். ஊசி, நூலெ்லாம் கிடைக்குமா, எடுத்துச் செல்ல வேண்டுமா?

‘அங்கே எல்லா வசதியும் இருக்குமா?’

“அதெல்லாம் விசாரிக்காமலா செய்வான்? நிறைய அலைஞ்சு, அவன் ஆபீஸ் ஃப்ரெண்ட்ஸ் கிட்டேல்லாம் விசாரிச்சுதான் பிடிச்சிருக்கான்.”

ஏர்பேகில் ஃபோட்டோ ஆல்பம், கல்யாணமான புதிதில் கணவர் அன்பாய் வாங்கி அளித்த நகைப்பெட்டி என்று என்னனென்னவோ அடைந்து கிடந்தன. ஆனால் நகைப்பெட்டியில் எப்பொழுதுமே கவரிங் மட்டுமே வாசம். தங்கம் என்று இருந்ததெல்லாம் சேட்டுக் கடையில் அதிகநாட்கள் வாழ்ந்து அப்படியே விடைபெற்றும் போய்விட்டது. இருந்தாலும் அந்தப் பெட்டி தங்கத்தைவிட அவருக்கு உசத்தி.

“சொல்ல மறந்துட்டேனே. இங்க பால்கணில செடி வைக்கவே பெரும்பாடு. அங்கே பெரிய பெரிய மரமெல்லாம் இருக்காம். காலைல காலாற வாக்கிங், பாதையில் மரம்னு நெனச்சால உற்சாகமாயில்லை?”

அம்மாவின் அந்தக் கேள்விக்கும் அதில் தொற்றியிருந்த உற்சாகத்திற்கும் அவரிடமிருந்து பதில் இல்லை. அதைப் பெரிதாய் அலட்டிக்கொள்ளாத அம்மா, பேக்கைக் கட்டிலின்மேல் நகர்த்தி வைத்தார். கட்டில் ‘க்றீச்’சிட்டுக் கொண்டு ஆடியது. பேக் ஒன்றும் பெரிய சுமையுடன் இருந்ததாய்த் தெரியவில்லை.

“மறக்காமல் இதனோட காலை சரிசெய்ய அவனிடம் ஞாபகப்படுத்தனும்.”

‘ஆமாம்! இந்த பழச செப்பனிடப் போறானாக்கும்? வேணும்னா பாரு, கட்டை குப்பைக்குப் போயிடும்.’

“உங்களுக்கு இப்பல்லாம் அவன்மேல் ஒரு இது. குதர்க்கமாத்தான் பேசுவீங்க.”

‘நீயே பாரு! இந்த மூன்று பெட்ரூம் ப்ளாட்டுல இருக்கிற ஒவ்வொரு லேட்டஸ்ட்டுக்கும் மாத்தமா இந்த ரூம் மட்டும்தான் அசந்தர்ப்பமா இருக்கு; எல்லாம் அதே பழைய பொருள்கள், பழைய வாசனை.’

“எனக்கு எதுக்குப் புதுசு? புதுச் செலவு? அதுவுமில்லாமல் எனக்கு நீங்க வாங்கிக் கொடுத்ததுதான் எப்பவுமே உசத்தி.”

அதில் பாதி உண்மை; மீதி மகனை விட்டுக்கொடுக்காத பாசம். கரகரவென்று ஒரு ஸ்டூலை இழுத்துக்கொண்டு வந்து, துணி உலர்த்த ரூமுக்குள் கட்டியிருந்த கயிறுகளைப் அவிழ்க்க ஆரம்பித்தார்.

‘பார்த்து ஏறு. ஏன் நாளைக்கு இதை அவன் செஞ்சுக்க மாட்டானா? இல்லை அவன் பொண்டாட்டி செய்யட்டுமே. இதைக்கூட வெட்டி முறிக்க முடியாதா?’

கணவரின் பாசம் பெருமை அளித்தாலும் இலேசாகக் கோபம் வந்தது. “ரெண்டுபேரும் எவ்வளவு பிஸியா பறக்கறாங்கன்னு தெரிஞ்சுகிட்டே இது என்ன பேச்சு?”

‘ஆமாம்! என்னத்தை பிஸியோ? வீட்டைப் பார்த்துக்க நேரமில்லாமே சம்பாரிச்சு யாருக்குக் கொட்ட?’

ஆயாசமாய்க் கட்டிலில் அமர்ந்துகொண்டார். வயது அறுபதுதான் இருக்கும் அம்மாவுக்கு. இருந்தாலும் உடல் முதுமை பத்துப் பதினைந்து வயது கூடுதலாகக் காண்பித்தது. பரபரவெனன்று காலையில் இருந்து இயங்கிக் கொண்டிருப்பதாலோ என்னவோ போதையாய் இருந்தது. அடுக்களைக்குச் சென்று வாட்டர் ஃபில்டரில் இருந்து தண்ணீர் பிடித்து மடக் மடக்கென்று குடித்தபின் சற்று சுமாராய் இருப்பதுபோல் தோன்றியது. வந்து கட்டிலில் சாய்ந்து கொண்டார். அது மீண்டும் ‘க்றீச்’ என்றது.

திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்தே அவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் அமைந்தது. ஒரே மகன். அதற்குப் பிறகு அவர்களுக்கு ஆசையிருந்தாலும் இயற்கை அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டது. கண்ணில் பொத்தி வளர்த்தார்கள். மகனுக்குத் தலைவலி என்றால் இருவருக்கும் உடம்பே வலிக்கும். “இதுக்கு ஏம்மா ஸ்பெஷலிஸ்ட்கிட்டே ஓடி வர்ரீங்க?” என்று டாக்டரே கோபித்துக் கொண்டதும் நடந்தது.

ஆனாலும் மாய்ந்து மாய்ந்து செய்தார்கள். பள்ளிக்கூடம், உடை, ஆகாரம், அவன் பாத்ரூமுக்கு இட்டுச் செல்லும் செருப்பு என்று எல்லாமே சிறப்பானதாக, உயர்வானதாகத்தான் செய்யத் தோன்றியது அவர்களுக்கு. பாசம் கண்ணை மறைக்குதோ என்று யாராவது கேட்டால், நன்றாகக் கண்ணைத் துடைத்துவிட்டுக்கொண்டு இல்லையே என்று சொல்லும் அளவிற்கு வெள்ளந்தித்தனம் இருவருக்கும்.

குறை சொல்ல முடியாத வேலை அப்பாவுக்கு. ஓரளவு நிறைவான சம்பளம்தான். இருந்தாலும் ‘என் ராசா!’ என்று கொஞ்சும் மகனை அரசகுமாரன் ரேஞ்சுக்குச் சீராட்டியதில் சேமித்து வைத்திருந்த ரொக்கம், நகை என்பதெல்லாம் படிப்பு, அவன் பொருட்டு இன்னபிற என்றே செலவழிந்தது. அவனுக்கு இல்லாமல் என்னத்தை நமக்குப் பெரிசா என்று எதிர்காலம் மறந்து மகன்தான் எதிர்காலம் என்றாகிப்போனது.

நன்றாகப் படித்தான். படு கெட்டி. சமர்த்து. கம்ப்யூட்டர் ஸயின்ஸ், என்ஜினீயரிங், என்று மகன் கொண்டுவந்து வைத்த கோரிக்கை எல்லாம் நிறைவேற்றினார்கள், அகலக்கால் வைத்து. ஆனால் முக்கியமாய் ஒன்று - அவனுக்கு இவர்களின் எந்தச் சிரமமும் தெரியக்கூடாது என்பதில் படு கண்டிப்பு இருவருக்கும்.

கேம்பஸ் இன்டர்வியூவில் பாஸ் செய்து நல்ல சம்பளம்; நல்ல உத்தியோகம் என்று மகன் வளர்ந்து நின்றதும், அடிவயிறு பூரித்துப்போனது தாய்க்கு. மல்ட்டி நேஷனல் கம்பெனி, கம்ப்யூட்டர் சார்ந்த விற்பன்னன் என்பதன் நுணுக்கம் புரியாமல், அறிந்து கொள்ள விரும்பாமல், மகன் நினைத்தபடி வளர்ந்துவிட்டான் என்ற குறைந்தபட்ச உண்மை அவர்களுக்குப் போதுமானதாயிருந்தது.

கசகசவென்ற திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து நகரின் புதிய பகுதியில் முளைத்திருந்த அடுக்குமாடி ப்ளாட்டிற்கு அழைத்து வந்தான். கண் அகலப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் அடுத்தநாள், ‘கம்பெனி எனக்குக் கார் கொடுத்திருக்கிறது’ என்று கூறி, ஏஸி காரில் பெற்றோரை அழைத்துக் கொண்டு ஏஸி ரெஸ்டாரரெண்ட்டில் அவர்களுக்குப் பெயர் புரியாத உணவு... நாளெல்லாம் வசந்தமாயிருந்தது பெற்ற உள்ளங்களுக்கு.

அடுத்த சில மாதங்களில், ஒரு ப்ராஜெக்ட் விஷயமாய் அமெரிக்காவுக்கு ஆறு மாதப் பயணம் போகணும் என்று அவன் வந்து சொன்னதும் மகிழ்ச்சியைத் தாண்டி அவர்களைக் கவலையும், அச்சமும் தொற்றிக் கொண்டன. அதற்கு அடுத்த இரண்டு வாரங்கள் அவனுக்குப் பெற்றோரை சமாதானப்படுத்துவதும் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்குப் பெரிய மனுசத்தனமாய்ப் பதில் சொல்வதும் என்று கழிந்தது.

மகன் அமெரிக்கா சென்றதும் தனியாய்த்தான் இருந்தார்கள். போரடிப்பதைப் போல் இருந்தது. பழகிய திருவல்லிக்கேணியாய் இருந்தால் இப்படித் தனிமையாய் இருக்காது என்று தோன்றியது. ஆனால் மகனிடமிருந்து தினமும் ஃபோன், கவனமான விசாரிப்பு என்பது ஆறுதலாய் இருந்தது. அமெரிக்காவிலிருந்து அவன் திரும்பியதும் நல்லதொரு வரன் பார்த்து முடித்துவிட வேண்டும் என்று புதுக் கவலை தோன்றி - தினமும் அவர்களை உற்சாகமுடன் வைத்துக் கொண்டது அந்தக் கவலை.

சொந்தமா, சென்னையா, நம் ஊர்ப் பக்கமே பார்த்துடுவோமா, என்று பேசிப் பேசி, அங்கு இங்கு சொல்லிச் சில வரன்களும் ஃபோட்டோக்களுமாக இவர்கள் தயார் ஆக, ‘அடுத்த வாரம் வருகிறேன். உங்களுக்கெல்லாம் நல்ல செய்தி சொல்லப்போறேன்’ என்று ஒருநாள் ஃபோன்.

வந்து இறங்கியவன், நிறைய அமெரிக்கக் கதை சொன்னான்; பெற்றோரை மறக்காமல் நிறைய வாங்கி வந்திருந்தான். “உங்களுக்கு ஆப்பிள்” என்று அப்பாவிடம் நீட்ட “ஏன் வெள்ளையா இருக்கு?” என்று ஐபோனைப் பார்த்தவரைக்கண்டு, “யூ டேட்” என்று சிரித்தான். ஆங்கிலத்தில் அமெரிக்கத் தொணி கட்டாயமாய் ஒட்டிக்கொண்டிருந்தது.

அப்புறம்தான் லேப்டாப்பைப் பிரித்து அந்த ஃபோட்டோவைக் காட்டினான். “பிடிச்சிருக்காம்மா? சென்னைதான். என்கூட ப்ராஜெக்ட்டுக்கு வந்திருந்தா? இங்கே அண்ணாநகர்ல அவங்க பேரெண்ட்ஸ். ப்ளீஸ் யெஸ் சொல்லும்மா” என்று குரல் செல்லம் கொஞ்சியது.

ஃபோட்டோவில் மகனும் அவளும் குளிர் ஜாக்கெட் பத்தவில்லை என்று கட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள். ஆரம்ப அதிர்ச்சி, திகைப்பு எல்லாம் அடங்கி, ‘பொண்ணு நல்லாத்தான் இருக்கா’ என்று சமாதானம் ஆகி அடுத்தடுத்து பேசி, அடுத்த இரண்டு மாதத்தில் மகனின் திருமணம் நடைபெற்றது.

அதற்கு அடுத்த இரண்டு வாரத்தில் பெரும் சோகம் தாக்கியது. பொசுக்கென்று சொல்லாமல் கொள்ளாமல் இறந்துபோனார் அப்பா.

o-O-o

தாக்கிய சோகம் பழகிப் போயிருந்தாள் அம்மா. ஆனால் அது ஒருபுறமிருக்க திருமணத்திற்குப் பிறகு எல்லாமே புதிதாய், மாற்றமாய் இருந்தது. இந்த மூன்று ஆண்டுகளில் மகன் அருகில் இருந்தாலும் அமெரிக்காவைவிடத் தூரமாய் இருப்பதாய்த்தான் தோன்றியது அம்மாவுக்கு. கணவன் மனைவி இருவருக்கும் நீண்..ட அலுவல் நேரம். அகால நேரத்தில் வீடு திரும்பினார்கள். விழிப்பது நேரம் கழித்து. வார இறுதியிலும் வேலை என்று சில சமயம் பறப்பார்கள். வசதி பெருகியது. என்னென்னவோ புதுப்புது வஸ்துகள் வீட்டிற்குள் வந்தன. ஆனால் அவர்கள் வீட்டில் இருக்கும் நேரம்தான் ஏகத்துக்கும் குறைவு.

வீட்டு பராமரிப்பு? அது சிறுகச் சிறுக என்று துவங்கி முழுக்க முற்றிலும் அம்மாவிடம்.

செய்வதற்கு வேறொன்றும் இல்லை; இப்படியாவது கழியட்டுமே என்று இழுத்துப் போட்டுக் கொண்டுதான் செய்தார் அவரும். ஆனாலும் வெறுமை. விவரிக்க இயலாத வெறுமை. ஒரே ஆறுதல் கணவருடன் பேச்சு மட்டுமே. கற்பனையில்! உள்ளத்தைத் தாக்கியிருந்த வெறுமை உடலின் முதுமையை ஏகத்துக்கும் அதிகரித்துவிட, மெதுவே மெதுமெதுவே சில்லறை நோய்கள் வந்து புகுந்து ஐக்கியமாகி, பிள்ளையையும் மருமகளையும் அம்மா பார்த்துக்கொண்டது போக அம்மாவுக்குத் துணை வேண்டும் என்ற நிலை.

அதையெல்லாம் பொருட்படுத்தமால் இயங்கிக்கொண்டிருந்தார். ஆனால், ‘இப்படியே சென்று கொண்டிருந்தாலும் பரவாயில்லையே’ என்று நினைக்குமளவிற்கு அன்று மகன் வந்து அதிர்ச்சி கொடுத்தான்.

“அம்மா! ராமாவரத்துலதான் இருக்கு. நிறையபேர் இருக்காங்க. என் ஃபெரண்ட்ஸ் கூட ரெக்கமென்ட் செஞ்சாங்கம்மா.”

“நான் இங்கேயே இருந்துடுறேனே!”

“அதுக்கில்லேம்மா. உங்களுக்குத் தெனமும் டாக்டர் தேவைப்படுது. எங்களுக்கோ டியூட்டி நேரம் அவஸ்தையான டைமிங். அங்கே எல்லாத்துக்கும் வசதியிருக்கு. டாக்டர்ஸ், நல்ல உணவு, சமையல்காரங்க, உங்க வயசுக்கு ஏத்த ஃபரெண்ட்ஸும் அமைவாங்க.”

அமைதியாக இருந்தார். பிறகு, “ராமாவரமா?”

“ஆமாம்மா! ரொம்ப தூரமில்லையே. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்க வந்துடுவோம்.”

ஒருவாரமாகப் பேசிப்பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். வேறு வழி இருப்பதாகவும் அம்மாவுக்குத் தெரியவில்லை. எல்லா உணர்ச்சிகளையும் விழுங்கிக்கொண்டு சிரித்துக் கொண்டே சம்மதித்தாள். நாளைக் காலை செல்ல வேண்டும் என்றான் மகன். துவங்கப் போகும் புதிய, விடுதி வாழ்க்கைக்கு இன்று பயண ஏற்பாடுகள் துவங்கின.

இரவு நெடுநேரமாகிவிட, மகனுக்கும் மருமகளுக்கும் உணவை எடுத்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு ரூமிற்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டார்.

மருமகள் வந்து ஒருமணி நேரத்திற்குப் பிறகுதான் மகன் வந்தான். மனைவியின் முகத்தில் ஏதோ பொலிவு. வித்தியாசம் தெரிந்தது அவனுக்கு.

“அம்மா எங்கே?” என்றான்.

ரூமைக் காட்டினாள் அவள். சென்று கதவைத் திறந்து எட்டிப் பார்க்க, எப்பொழுதும்போல் அப்பாவின் ஃபோட்டோவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள் அம்மா. அதிராமல் கதவை மூடிவிட்டு டேபிளுக்கு வந்தவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

“நான் ஒரு ஐடியா சொல்றேன்.”

“என்ன?”

“அம்மா நம்மோடேயே இருந்துடட்டுமே”

ஒன்றும் புரியாமல் ஆச்சரியத்துடன் பார்த்தான். “என்ன சொல்றே?”

“இன்னிக்கு ஈவினிங் எனக்கு டாக்டரிடம் அப்பாயிண்ட்மென்ட் இருந்துச்சு. போயிருந்தேன். தள்ளிப்போகுதுன்னு சொன்னேனில்ல. ரிசல்ட் சொல்லிட்டாங்க.”

“என்ன?”

“பாஸிட்டிவ்.”

o-O-o

-நூருத்தீன்

இந்நேரம்.காம்-ல் வெளியான சிறுகதை

Image courtesy: drawingfit.com

இதர கதைகள்


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner
e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker