சன்மானம்

Written by நூருத்தீன் on .

'யாராவது தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வாங்க'

ஒருவர் பதட்டமாகக் குரல் கொடுத்தார். சுற்றி நின்ற கூட்டம், 'ச்சொ... ச்சொ...' என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அடிபட்டு ரத்தமும் காயமுமாய் இருந்த சிறுவன்

அழக்கூட திராணியின்றி அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான். எட்டு வயது இருக்கும். உடை ஸ்கூல் யூனிஃபார்ம் கலரில் இருந்தது.

உலக பொறுப்புகளைத் துறந்த உருப்படாத இளைஞன் ஒருவன் வேகமாய் ஓட்டி வந்த பைக் அந்தப் பையனை இடித்து, அலறி விழும் சிறுவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, இரக்கமே இல்லாமல் பறந்துவிட்டான் இளைஞன்.

பாதசாரிகள் ஓடிவந்து குழுமினார்கள். கோபக் குரல்கள கேட்டன. எல்லோருடைய முகங்களிலும் தற்காலிகக் கவலை. அச்சிறுவனைத் தொட்டுத் தூக்காமல் வட்டமிட்டு நின்றிருந்தது கூட்டம்.

'ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணுங்க சார்' என்றார் ஸ்கூட்டரை விட்டு இறங்காத முதிய வயது மாமா.

'அந்த பைக் நம்பரைப் பார்த்தீங்களா?'

'ராஸ்கல். இர்ரெஸ்பான்ஸிபிள் ராஸ்கல். நின்னு திரும்பிப் பார்த்துட்டு அப்படியே ஓட்டிட்டுப் போயிட்டான் சார்'

'பேரண்ட்ஸைச் சொல்லனும். பிள்ளைகளுக்கு செல்ஃபோன், பைக் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுத்து சீரழிக்கிறாங்க'

'டிரக்ஸல இருந்திருப்பான் சார் அவன். அதான் நிக்கலே'

'இப்படித்தான் மூன்றாவது கிராஸ் ஸ்டீர்ட்ல லாயர் மாமாவுடைய பையன் போன வாரம் பைக் ஆக்ஸிடென்ட்ல ஸ்பாட் அவுட்டு. பொட்டலமாத்தான் பாடிய கொடுத்தாங்க. காணச் சகிக்கல'

'யாராவது தண்ணீர் கொண்டு வாங்களேன். தம்பி உன் பேர் என்ன? வீடு எங்கே? ஃபோன் நம்பர் இருக்கா?'

சிறுவன் பதில் சொல்லாமல் பேந்தப் பேந்த பார்த்துக்கொண்டிருந்தான்.

'விழுந்த வேகத்துல பிரெயின்ல பட்டிருக்கும் சார். இன்டெர்னல் இன்ஜியூரி. உடனே ஜி.எச்.க்குப் போனா நல்லது. ஆம்புலன்ஸுக்குப் போன் பண்ணியாச்சா?'

அப்பொழுது ஸ்கூட்டியில் அங்கு வந்த ராஜன், கூட்டத்தில் ஒருவரைப் பார்த்து, 'மாதவா. என்ன ஆச்சு?'

'ஹிட் அண்ட் ரன். சின்னப் பையன் ரொம்ப பிளீடிங். இவனை எங்கேயாவது பார்த்திருக்கியா? பதிலே பேச மாட்டேங்கிறான்'

வண்டியை நிறுத்திவிட்டு நெருங்கி வந்து பார்த்த ராஜன், 'அய்யோ! இது ராசி ஜுவல்லரி ஓனரின் பையன் போல் தெரியுதே. மனநிலை சரியில்லாதவனாம். நைட்டில் இருந்து காணவில்லை என்று வாட்ஸ்அப்பில் ஃபோட்டோவுடன் மெஸேஜ் வந்துச்சே. அங்கே வேலை பார்க்கிற என் மச்சினன் அனுப்பியிருந்தான். கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு லட்ச ரூபாய் சன்மானமாம்'

ராஜன் முடிக்கும்முன் ஓடிப்போய் சிறுவனை அள்ளித் தோளில் போட்டுக்கொண்டு, 'ஆட்டோ! ஹாஸ்பிடலுக்குப் போகணும்' அங்கு வந்த வாகனத்தை வழிமறித்து பறந்தார் மாதவன்.

'மணி. உன் ஓனர் பையன் கிடைச்சுட்டான். இங்கே ரோட்ல அடிபட்டு...' மைத்துனனுக்குப் போன் செய்த ராஜன், 'அப்படியா? எப்போ?' என்று முடித்துக் கொண்டார்.

கலைந்த கூட்டத்தில், 'ஓனருக்கு சேதி சொல்லிட்டீங்களா?" என்று கேட்டார் ஒருவர்.

'அந்தப் பையன் இன்று காலையில் கிடைத்து விட்டானாம்'

-நூருத்தீன்

Image courtesy: kissclipart.com

 

நூருத்தீனின் கதைகள்


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner

Tags: குட்டிக் கதை

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker