01 - மனம் ஒரு மாதிரி

இன்பம். மகிழ்ச்சி! ஆண்டிமுதல் ஆள்பவன்வரை, மூட்டை தூக்கும் முனுசாமிமுதல் மூட்டை மூட்டையாய்ப் பணம் வைத்துக் கொண்டிருக்கும்

அம்பானிவரை, எல்லோருக்கும் அது பொதுவான தேடல். அனைவரும் அதைத் தேடி அலைந்து, திரிந்து, ஆன்மீகம், பெண் மோகம், போதை என்று என்னென்னவோ முயற்சி செய்துவிட்டு கடைசியில் ஞானமாய் வார்த்தை வரும் - "எல்லாம் மனசுல இருக்குபா!"

மனசு! அதுதான் எல்லோருக்கும் இருக்கிறதே! ஆனால் மன நிறைவு? இன்பம்?

மன மகிழ்வு என்பது என்ன என்பதை எல்லோரும் உணர்ந்து வாழ ஆரம்பித்தால் பாலாறும் தேனாறும் ஓடி, நாடு வளம் பெறும்; உலகம் சுபிட்சம் அடையும்; அமெரிக்கா நல்ல பிள்ளையாகிவிடும்; உலகில் தீவிரவாதம் குறையும் என்றெல்லாம் அதீத நம்பிக்கைக்கு நாம் ஆளாகி விடக்கூடாது. குறைந்த பட்சம், அவரவரும் மெய் மகிழ்வுடன் வாழ்க்கையை அணுகலாம்; உய்யலாம்; சமர்த்தாய் வாழப் பழகலாம். அவ்வளவே!

மனசு, நெஞ்சு, மூளை, இதயம் இவை எல்லாவற்றையும் கூறுபோட்டு, அனாடமி, தத்துவ ஆராய்ச்சி என்றெல்லாம் பண்ணாமல், பொதுவாய் மனசு, மகிழ்ச்சி, அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை அடிப்படையாய் அமைத்துக் கொண்டு,

மனம் மகிழும் முயற்சி, இத்தொடர் அவ்வளவே!. அளவளாவிக் கொள்வோம்.

- நூருத்தீன்

மனதிற்கென்று சில மாதிரிகள், வடிவமைப்பு இருக்கிறதாம். எப்படி? தெருவில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று வையுங்கள், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மனம் யோசிக்கிறதா என்ன? சரவண பவன் தோசையோ, பீட்ஸாவோ, அதை உண்பதற்குத்தான் ஆவலே தவிர, செரித்து அது ஜீரணம் ஆகியே தீரவேண்டும் என்று மனம் மெனக்கெட்டுத் தீர்மானமெல்லாம் போடுவதில்லை. உறங்கச் செல்லும் போது, ஃபேனோ, ஏசியோ அட்ஜஸ்ட் செய்து படுத்துக் கொண்டால் போதும், மூச்சுவிட எதுவும் திட்டமெல்லாம் தேவையில்லை. கெடு பாக்கியிருந்தால் தானாய் அது நடக்கும். இவையெல்லாம் உள்ளுணர்வு (subconscious). இப்படிப்பட்ட உள்ளுணர்வுதான் நம் வாழ்க்கையின் பலன்களின் பெரும்பகுதியை நிர்ணயிக்கிறது.

அடிக்கடி நிகழும் வடிவமைப்பு

ஒரு நண்பரை விருந்துக்கு அழைத்திருக்கிறீர்கள் என்று வையுங்கள். "சரியாக ஏழு மணிக்கு வந்து விட வேண்டும்" என்று சொல்லியிருப்பீர்கள். எப்படியும் ஒன்பது மணிக்கு வந்து விடுவார். "என்றைக்கு அவன் நேரத்தோடு வந்திருக்கிறான்?" என்பது மிகப் பரிச்சயமான டயலாக். பலருக்கும் இந்தப் பிரச்சனை உண்டு. அலட்சியமெல்லாம் இருக்காது. ஏதாவது சிறு சிறு முக்கியமற்ற விஷயங்களை முக்கியமாய் முடித்துவிட்டு வருவதே பழக்கமாகியிருக்கும். அல்லது ஏதாவது தடங்கலான நிகழ்வுகள். அப்பொழுதுதான் டூவீலர் பன்ச்சர் ஆகியிருக்கும். கிளம்பும்போதுதான் சலவைக்குப் போய்வந்த சட்டையில் ஒரு பொத்தான் பிய்ந்திருப்பது தெரிய வரும். அல்லது வைத்த இடத்தில் பர்ஸ் இருக்காது. அல்லது இராயப்பேட்டையிலிருந்து தி.நகருக்குச் செல்லும் உங்களிடம் ப்ராட்வேயில் மட்டுமே கிடைக்கும் ஒரு பொருளை வாங்கி வரும்படி உங்கள் இல்லத்தரசி அன்புக் கட்டளை இட்டிருப்பார்.

விருந்திற்கு என்றில்லை, காலேஜிற்கு, ஆபிஸிற்கு, என்று பலதிற்கும் இப்படித்தான். உலகம் திட்டமிட்டு நம்மை இப்படி அலைக்கழிக்கிறது என்று நமக்குத் தோன்றும். அதெல்லாம் ச்சும்மா. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த உள்மனசுதானாம். அது ஏற்கனவே அழகாய்ப் ப்ரோக்ராம் எழுதி வைத்திருக்கும் - "நீ லேட்டாகத்தான் போகப் போகிறாய்". வெளி மனசு பரபரப்பாக நம்மை இயங்க வைத்துக் கொண்டிருந்தாலும் நடப்பதென்னவோ உள்மனசின் கட்டளைப்படிதான்.

அப்படியே தப்பித் தவறி வெள்ளனே எழுந்து கிளம்புவதற்கான ஆயத்தமெல்லாம் சரியாய் நடந்து விட்டாலும், அன்றைக்கென்று ஏதாவது ஊர்வலம் /போராட்டம்/பேரணி என்று திசை திருப்பப்படுவீர்கள். இவற்றுள் எதுவுமே இல்லையா? இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சந்தித்த நண்பன் அன்றுதான் எதிரில் வந்து, "நீ ........ " என்று ரொம்ப தூரம் நீட்டி, கடைசியாய்க் கட்டிப்பிடி வைத்தியம் தொடரும். இப்படி ஏதாவது ஒன்று.

எல்லாஞ் சரி. அது எப்படி நான் எப்போவாவது ரயிலில் போக முடிவெடுத்த அன்றைக்குப் பார்த்து, ரயிலும் லேட்டாகவே வருகிறதே? அப்படியெல்லாம் இல்லை, ரயில்வே அட்டவணையில்தான் ப்ரிண்டிங் மிஸ்டேக்.

நாடக வடிவைமப்பு

சிலருக்கு வாழக்கையில் எதுவுமே சரியாக இருக்காது. எல்லாமே சோக மயம்தான். மார்க்கெட்டில் எதிரில் தென்பட்டிருப்பார் அந்த நண்பர். அன்றைய தினத்தின் உலக மகாக் குற்றத்தைச் செய்து விடுவீர்கள், "அடடே ... பார்த்து ரொம்ப நாளாச்சே, என்ன சௌக்கியமா?"

"அதை ஏன் கேட்கிறே போ!" என்று ஆரம்பித்து கைக்குட்டை நனையும் அளவு சோகக் கதை வெளிவந்து கொட்டும். பொறுப்பற்ற தண்டச் சோறாய்த் திரியும் மகன், அல்லது அடக்கமற்ற மருமகள், இரக்கமேயில்லாமல் வீட்டு வாடகையை ஏற்றிச் சாத்தும் வீட்டுக்காரன், பான் பராக் போட்டு மாடியிலிருந்து அவர் வீட்டு வாசலுக்கு அருகே துப்பும் வில்லன், அக்கிரமக்கார மேனேஜர், சம்பள உயர்வு தராத ஈவிரக்கமற்ற முதலாளி, இப்படி ஏதாவது.

அப்படியே அவரது வாழ்வில் எல்லாம் கனக் கச்சிதமாய் நிகழ்ந்து கொண்டிருந்து என்று வைத்துக் கொள்வோம், ஏதாவது ஒரு அசந்தர்ப்பமான நோய் வந்து பத்து இருபது நாள் படுத்திவிடும். அல்லது அன்றைக்கென்று நோ பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்த அவரது மோட்டார் பைக்கைக் கடமை தவறாத காவல்துறை ட்டயர் லாக் செய்திருக்கும். அதுவுமில்லையா, தூக்கிச் சென்றிருக்கும்.

சரி அதற்கெல்லாம் என்ன செய்வது? பார்க்கத்தானே போகிறோம்!

மனம் மகிழ, தொடருவோம்...

இந்நேரம்.காம்-ல் 11 ஜூன் 2010 அன்று வெளியான கட்டுரை

<--ம. ம. முகப்பு--> <--அடுத்தது-->

 

e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker