37 - முயற்சி திருவினையாக்கும்!

சுறுசுறுப்பிற்கு எப்பொழுதுமே எறும்பை உதாரணமாகச் சொல்வோம். எறும்பு படு சுறுசுறுப்புதான். எதில் சுறுசுறுப்பு? தனக்கெனச் செய்து கொள்ள

வேண்டிய வேலைகளில்! அதேபோல் புழு, பூச்சி, மிருகங்கள் என்று உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்துமே ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டவாறுதான் உள்ளன. சுறுசுறுப்போ, மெத்தனமோ ஏதோ ஒரு வேலை; அல்லது காரியம் - கூடு கட்டுதல், பசிக்கு இரை தேடுதல், தன் ஜோடியிடம் காதல், தேவைப்பட்டால் நீரில் 'சளக்'கென்று ஒரு குளியல். யாரும் சொல்லாமல், கட்டளையிடாமல், வற்புறுத்தாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கின்றன. பிறகு நிம்மதியான உறக்கம்.

இதிலுள்ள அடிப்படைத் தத்துவம் நமக்கு முக்கியமானது. அது, ‘மகிழ்வாய் இருக்க வேண்டுமெனில் முயற்சியெடுத்துக் காரியமாற்றும் மனப்பக்குவம்.’

ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. ‘அதற்கு மெனக்கெடணுமே’, ‘முயற்சி எடுக்கணுமே’ என்று தள்ளிப்போட்டால், செய்யத் தவறினால் என்னவாகும்? காரியம் ஆகாது. தவிர அது நம்மைப் பாதிக்கும்.

எளிமையான உதாரணம் ஒன்று: ஓரிரு நாட்களாய்க் காய்ச்சல். சுக்குக் கஷாயம், கை வைத்தியம் எதிலும் சரியாகவில்லை. என்ன செய்வது? எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு, பை நிறையப் பணத்தை அடைத்துக் கொண்டு டாக்டரிடமும், அவருக்கே அவருக்கான பார்மஸிக்கும் செல்ல வேண்டும். அதெல்லாம் பிடிக்கவில்லை என்று தள்ளிப்போட்டாலோ, போக மறுத்தாலோ நிலைமை சீராகி விடுமோ? ஆகாது. பிரச்சினை நம்மை மேலும் பாதிக்கும்.

தேர்வு எழுத படிக்க வேண்டும். படகு ஓட்ட துடுப்புப் போட்டால்தான் நகரும்.

உடனே ‘மோட்டார் போட்?’ என்று வம்பு செய்யாதீர்கள். அதற்குப் பெட்ரோல் பங்க் சென்று டீசல் வாங்கி வைத்திருக்க வேண்டும். நீரை அள்ளி ஊற்றினாலெல்லாம் வேலைக்காவாது.

ஆக, எந்தவொரு காரியத்திற்கும் ஏதோ ஒருவகையிலான முயற்சி முக்கியம். அந்த முயற்சி சிறக்க நமது மனோபாவம் முக்கியம்.

ஒரு முயற்சி என்று இறங்கும்போது காரியம் நடைபெறுகிறது என்பது ஒரு விஷயம். அதனூடே மற்றும் சில நிகழ்கின்றன. முயற்சி நம்மைச் சோதிக்கும்; நம் திறனை நாம் பரீட்சித்துப் பார்க்க உதவும்; நமக்குப் பாடம் கற்பிக்கும்.

எப்படி என்கிறீர்களா? இல்லறம் என்றொரு முயற்சியில் இறங்குகிறீர்களில்லையா? இப்பொழுது யோசித்துப் பாருங்கள்.

எனவே ஒரு முயற்சியில் இறங்கும்போது அதை அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு முயற்சியில் இறங்கினால் அதில் மகிழ்விருக்காது. தவிர அம்முயற்சி ஏதேனும் காரணத்தால் கைகூடவில்லையெனில் மனம் சோர்ந்து போய்விடும்.

ஒரு விற்பனையாளன் தனது தொழில் நிமித்தமாய்ப் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க முடிகிறது; பேச முடிகிறது; பழக முடிகிறது. மக்களைச் சந்தித்துப் பேசிப் பழகுவதால் ஏற்படும் அனுபவத்தை உணர்ந்து அவன் மகிழ்வுடன் தன் பணியைப் புரியும்போது அவனது மனம் உற்சாகமடைகிறது. அதனால் ஒரு நாள் குறிப்பிட்ட அளவிலான விற்பனை இல்லாது போனாலும் அவனது மனம் அதீதச் சோர்வடையாது; ஏமாற்றம் அடையாது.

ஈடுபடுவது எந்தக் காரியமாக இருந்தாலும் அதை அனுபவித்து உணர்ந்து மகிழ்வுடன் செய்யும்போது அந்த வேலையின் முடிவு இரண்டாம் பட்சமாகி ஏற்படும் திருப்தியும் மகிழ்வும் இருக்கிறதே அது முக்கியமானதாகிவிடுகிறது. இதைப் பொதுவாய் ஆங்கிலத்தில் job satisfaction என்போம். மனத்திருப்தியற்று ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் லட்சலட்சமாய்ச் சம்பாதித்தாலும் மகிழ்வு தொலைந்து காணாமல் போய்விடும்.

"பணம்; பணம்" என்று நிற்காமல் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோமே அது சொத்தைத் தரும். சுகத்தைத் தரும். மகிழ்வைத் தருமோ?

ஒரு செயலின் முடிவை மட்டுமே எண்ணி அளவுக்கதிகமாக அதில் கவனம் செலுத்தினால் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுவோம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் ஓடி ஓடி, செய்து கொண்டிருக்கும் காரியத்தை, அந்த நிமிடத்தை, அந்த நொடியை உணர்ந்து மகிழ மறந்துவிடுவோம். ஏனெனில் மகிழ்வு என்பது ஏதோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தில் என்று நமக்காகக் காத்திருப்பதில்லை.

எனவே முயற்சியின் இறுதியில் ஏற்படப் போகும் முடிவை நினைத்துப் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் ஈடுபடும் முயற்சியை உணர்ந்து மகிழக் கற்றுக் கொண்டால் செய்யும் காரியம் தானாகவே இன்பமானதாக ஆகிவிடும்.

வாரம் முழுதும் மனைவி உங்களுக்குச் சமைத்துப் போடுகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நீங்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி தர முடிவு செய்கிறீர்கள். அவர் உறக்கத்திலிருந்து எழுவதற்கு முன் நீங்கள் எழுந்து, தலைக்குக் குளித்து, அடுக்களைக்குச் சென்று காலையுணவு சமைக்கிறீர்கள். சமையல் அனுபவம் இல்லாத நீங்கள் அன்று அபூர்வமாய் ஈடுபடும் முயற்சியில் அந்த அனுபவத்தை உணர்ந்து, மகிழ்ந்து லயிப்புடன் செய்ய முனைந்து பாருங்கள். அது மிகப்பெரும் மன மகிழ்வை உங்கள் மனதில் ஏற்படுத்தும்.

அதன்பின் உங்கள் மனைவி எழுந்துவந்து அந்த உணவைச் சாப்பிட்டுவிட்டுப் பாராட்டினால் அது போனஸ். இல்லையென்றால் பெரிய பிரச்சினையில்லை. நீஙகள் அதிகம் மனவருத்தம் அடையப் போவதில்லை. ஏனெனில் உங்கள் மனதில் அன்றைய சமையல் பணியை, அந்தப் புது முயற்சியை ரசிப்பதற்கு மனதைத் தயார்படுத்திவிட்டீர்கள். அதுவே உங்கள் மனதில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

மனத் திருப்திக்காக ஒரு காரியம் புரியும்போது, அதில் ஈடுபடும்போது, அம்முயற்சி தானே நல்ல முடிவை தேடித்தரும். முயற்சி திருவினையாக்கும் என்பது இயற்கையின் விதி. ஆயினும் ஏதேனும் காரணத்தால் முடிவுகள் தாமதமானாலோ, அல்லது நீங்கள் நினைத்ததைப்போல் காரியம் அமையவில்லை என்றாலோ, அது உங்கள மன அமைதியைக் குலைக்காது. காரியத்தில் உள்ளார்ந்து ஈடுபட்ட திருப்தி மனதில் பரவியிருக்க, முடிவு வரும்போது வரட்டும் என்று அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவீர்கள்.

எல்லாம் சரி! ஒரு காரியத்தை விரும்பி திருப்திகரமாகப் புரிவது எப்படி? அதை நீங்கள் மனதில் ஒரு தீர்மானமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.

ஒரு சிந்தனையாளர் கூறினார், "மன மகிழ்வின் இரகசியம் என்ன விரும்புகிறோமோ அதைச் செய்வதில் இல்லை; எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது."

மனம் மகிழ, தொடருவோம்...

இந்நேரம்.காம்-ல் 25 பிப்ரவரி 2011 அன்று வெளியான கட்டுரை

<--முந்தையது--> <--அடுத்தது-->

<--ம.ம. முகப்பு-->

 

e-max.it: your social media marketing partner

Comments   

0 #1 Ramesh 2017-02-28 15:32
Pdf anupiruka
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker