19 - அளவோடு சிரி; மகிழ்வோடு வாழ்

இணையம், ஐஃபோன் போன்ற சங்கதிகளெல்லாம் இல்லாத ஆதி காலத்தில் வானொலி என்றொரு பொருள் இருந்தது. பல்பொடி விளம்பரம், உங்கள் விருப்பம்,

செய்திகள் போன்றவை தவிர சிறுவர்களுக்கென்று ஞாயிறன்று நிகழ்ச்சி ஒன்றும் இருக்கும். சிறுவர்கள் மேல் அக்கறை தொலையாமல் இருந்த காலமாதலால் நல்லதொரு சைவ நிகழ்ச்சி. அதை நடத்தும் வானொலி அண்ணா என்பவர் “சிரிச்சு கிட்டே இருங்க, சந்தோஷமா இருங்க.” என்று நிகழ்ச்சியை முடிப்பார்.

நகைச்சுவை உணர்வு மனிதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கொடை. அதன் பலன் அதைத் திறம்பட உபயோகிப்பதில் உள்ளது. நல்ல நகைச்சுவை என்ன செய்யும்? சிரிக்க வைக்கும். அந்தச் சிரிப்பை வாய்விட்டுச் சிரித்தால்? நோய் விட்டுப் போகும் என்கிறது முதுமொழி.

“சிரிப்பு ஒரு சிறந்த மருந்து” என்கிறார்கள் உளவியலாளர்கள். மனதாரச் சிரித்தால் மூளையில் என்டார்ஃபின் (endorphin) எனும் அமிலம் கிளம்பி, லாகிரி வஸ்துகள் அற்ற இயற்கையான உற்சாகத்தை அளிக்கிறதாம். உடம்பிலுள்ள சுவாச அமைப்பிற்கும் இலேசான உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

நார்மன் கஸின் (Norman Cousin) எனும் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். பேராசிரியரும் கூட. அவருக்கு நோயொன்று ஏற்பட்டு மிகவும் படு்த்தி எடுத்தது. இதர மருந்துகளுடன் பிரதானமாய்ச் சிரிப்பையும் ஒரு மருந்தாக அவர் உபயோகித்ததையும் அது அவருக்கு எத்தகைய நிவாரணத்தை அளிதததென்பதையும் அவர் எழுதிய Anatomy of an Illness என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.

சிரிப்பு மனதிற்கு எத்தகைய இதமளிக்கிறது என்பதைப் பெரும்பாலும் நாம் அனைவரும் இயற்கையாகவே உணர்ந்திருப்போம். மனதையும் முகத்தையும் சிரிப்பு மலர வைக்கும். முகத்தை “உம்“ மென்று வைத்துக் கொண்டு சிரிக்க முடியுமா என்று முயன்று பாருங்கள். சகிக்காது!

வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் பதற்றமின்றி அணுகி, மனம் விட்டுச் சிரிக்கப் பழகினால் மனதை நாள்தோறும் மகிழ்வாய் வைத்துக் கொள்ளலாம்.

பிரச்சனை, கவலை, சோதனை இல்லாத வாழ்க்கையென்பது யாருக்கும் இல்லை. அந்தந்த நிகழ்விற்கு ஏற்ப வாழ்க்கையை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஆனால் அதைத் தாண்டி எவ்வளவு விரைவில் இயல்பு நிலையை அடைகிறோம் என்பதில்தான் மன மகிழ்வின் சூட்சமம் அடங்கியிருக்கிறது.

புது கார். வாங்கி ஒருமாதமே இருக்கும். பல் துலக்க மறந்தாலும் கார் துடைக்க மறக்காமல் கவனித்துக் கொள்கிறீர்கள். ஒருநாள் ஆட்டோகாரர் ஒருவர் உங்கள் காரை ஸடைலாகக் “கட்“ செய்து இடித்து விட்டு, தவறு உங்களுடையது என்பதைப்போல் கைநீட்டியும் திட்டிவிட்டு போயே போய்விட, இறங்கிப் பார்த்தால் உங்கள் காரின் முன் பகுதி நசுங்கிய மூக்காய்க் காட்சியளிக்கிறது.

அதற்கு என்ன செய்யலாம்? ஒரு மாதம் சோறு தண்ணீர் இல்லாமல் கிடந்து மாயலாமோ?

இயற்கையாய்த் தோன்றும் வருத்தம், கோபம், ஆத்திரம் இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவந்து செப்பனிட வேண்டியதைச் செப்பனிட்டுவிட்டு அடுத்த ஓரிரு நாளுக்குள் வாய் விட்டுச் சிரிக்கும் அளவிற்கு நீங்கள் தேறிவிட்டால் நடந்த முடிந்த அந்த வேண்டாத செயலும் பெரும் பிரச்சனையாகத் தெரியாது. சிரித்துக் கொண்டேகூட நண்பரிடம்அந்த நிகழ்வை நீங்கள் விவரிக்க முடியும்.

ஒரு பிரச்சனையை அடுத்து இயல்பு நிலையை அடைய ஒருவருக்கு ஒருநாள் ஆகலாம். பிறி தொருவருக்கு ஒருவாரம் ஆகலாம். வித்தியாசம் என்ன? முதலாமவர் ஆறு மடங்கு குறைவாய் வருத்தப்படுகிறார்!

நாமெல்லாம் மனிதர்கள். ஆசாபாசம் நிறைந்தவர்கள். சில சமயம் காரியங்கள் தவறாய் நடைபெறத்தான் செய்யும். சில கணவன்மார்களின் மனைவிகளிடம் ஓயாத வருத்தம் உண்டு. “என்னிக்குததான் இவர் ஒரு விஷயத்தை உருப்படியாய்ச் செய்திருக்கிறார்.” அதையெல்லாம் நினைத்து மாய்ந்து மறுகாமல் திருத்திக் கொண்டு சிரித்துப் பழகினால் வருத்தத்தை ஒதுக்கிவிட்டு மன மகிழ்வை எளிதில் எட்ட முடியும்.

குழந்தைகள் சிரிப்பைக் கவனித்திருக்கிறீர்களா? அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளாது? அதனால்தான் “பிறரை நோக்கிப் புன்னகைப்பதும் தர்மமே,” என்று உலகிற்கு வழி காட்டிய தலைவர்கள் கூறிச் சென்றனர். உங்கள் புன்னகைக்கு ஒருவர் பதில் புன்னகையை அளித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. அப்படி இல்லையெனில் அவரிடம் நீங்கள் வாங்கிய கடன் நிலுவையில் இருக்கலாம்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த என் நண்பரொருவர் -- மனுஷருக்கு நல்ல ஹாஸ்ய உணர்வு -- தமக்குப் பள்ளியில் நிகழ்ந்த அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்து கொண்டார். பத்தாம் வகுப்பில் அவர் படித்துக் கொண்டிருக்கும்போது, “இனி குற்றவாளிகள் யாரும் பொய் பேச முடியாது. தலையில் ஹெல்மட் மாதிரியான கருவியைப் பொருத்தி மின்னதிர்வுகளை தலைக்குள் செலுத்தினால் குற்றவாளிகள் கடகட என்று செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு உண்மையைக் கக்கிவிடுவர்” என்று அவருடைய வாத்தியார் கூறியிருக்கிறார். உடனே இவர் எழுந்து, “ஏன் சார்! குற்றவாளி ஊமையாக இருந்தால் என்ன செய்வார்கள்?” என்றிருக்கிறார். இவருடைய நண்பர்கள் உம்முனாம் மூஞ்சியர்களாக இருக்க வாய்ப்பே இல்லை.

அதற்காக எதற்கெடுத்தாலும் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே இருப்பதும் நல்லதன்று. “அளவிற்கதிகமான சிரிப்பு உள்ளத்தை மந்தப்படுத்தும்.” தவிரவும் உடம்பிற்கு நல்லதோ இல்லையோ, மற்றவருக்கு நம்மேல் சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். நம்மை வேறுவிதமான டாக்டரிடம் அனுப்பிவிடுவார்கள்.

அளவோடு சிரித்தால் வளமோடும் வாழலாம். மகிழ்வோடும் வாழலாம்.

மனம் மகிழ, தொடருவோம்...

இந்நேரம்.காம்-ல் 22 அக்டோபர் 2010 அன்று வெளியான கட்டுரை

<--முந்தையது--> <--அடுத்தது-->

<--ம. ம. முகப்பு-->

e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker