சதை ஆடும்

Written by நூருத்தீன் on .

ஒருநாள் மாலை முஸ்தபா வீட்டிற்குள் நுழையும்போது வீடு பரபரப்புடன் இருந்தது. ஹாலில் உள்ள சோபாவில் ஸாலிஹாவும் அப்துல் கரீமும் வருத்தமான முகபாவத்துடன் உட்கார்ந்திருந்தார்கள்.

ஸாலிஹாவின் உள்ளங்கையிலும் கரீமின் பாதத்திலும் பேண்ட் எய்ட் ஒட்டப்பட்டிருந்தது. அவர்களின் அம்மா கிச்சனில் தரையை ஈரத் துணியால் துடைத்துக்கொண்டிருந்தார்.

ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார் முஸ்தபா. “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார்.

“வ அலைக்கும் ஸலாம்” என்று பிள்ளைகளிடமிருந்து அமைதியான பதில் வந்தது.

“வாங்க” என்றார் ஸாலிஹாவின் அம்மா.

“என்ன நடந்தது?” என்று கேட்டார் முஸ்தபா.

“ஒன்றும் பெரிசா இல்லை. டிரஸ் மாத்திட்டு வாங்க. சொல்றேன்.”

முஸ்தபா கை, கால் கழுவி, ஆடை மாற்றிக்கொண்டு பிள்ளைகளின் அருகில் வந்து அமர்ந்தார். இருவரும் அவரது மடியில் ஆளுக்கொரு பக்கமாகப் படுத்துக்கொண்டார்கள். அவருக்கு கோப்பையில் டீ தந்துவிட்டு, எதிரிலுள்ள சோபாவில் அமர்ந்துகொண்டார் ஸாலிஹாவின் அம்மா.

டீயை உறிஞ்சியவாறே மனைவியைப் பார்த்தார் முஸ்தபா. “அடுப்பில் பாலை வைத்துவிட்டு, ஸாலிஹாவிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பாத்ரூமிற்குப் போனேன். பால் கொதித்ததும் தனக்கு ஹார்லிக்ஸ் கலப்பதற்காக அவள் சூடான பாலை ஒரு கிளாஸில் ஊற்றியிருக்கிறாள். பிறகு சூட்டை உணராமல் கிளாஸை அவள் எடுக்க, கை சூடு பொறுக்க முடியாமல் கிளாஸ் தரையில் விழுந்து உடைந்து, தரையெல்லாம் அது சிதறி, பால் சிந்தி, கொஞ்ச நேரத்தில் களேபரமாகிவிட்டது.”

“உடைந்த கிளாஸ் என் கையையும் கிழித்துவிட்டது டாடி” என்று பேண்டேஜ் ஒட்டியிருந்த தன் கையைக் காட்டினாள் ஸாலிஹா.

“அல்லாஹ்வே! அது சரி, இவருக்கு என்ன காலில் பேண்டேஜ்.”

“அதை ஏன் கேட்கிறீர்கள்? அக்கா பயத்தில் சத்தம் போட்டதும் தம்பிக்காரர் ஓடி வந்து அக்காவுக்கு உதவுகிறேன் என்று அவளைக் கையைப் பிடித்து தரையில் இருந்த கண்ணாடி குத்தாமல் நடத்திக்கொண்டு வந்தவர் தன் காலில் குத்திக்கொண்டார். அது கிழித்து இரத்தம் வர, அதையும் துடைத்து பேண்ட் எய்ட் போட்டேன்.”

“அக்காவுக்குப் பிரச்சினை என்றதும் தம்பி துடித்துவிட்டாரோ?”

“ஆமாம். தன் கால் இரத்தம்கூட அவருக்குப் பெரிசா தெரியலே. அக்காவுடைய கையை சுத்தம் செய்து பேண்டேஜ் போடச் சொல்லித்தான் தம்பிகாரருக்கு அவ்ளோ அக்கறை.”

அன்பாக இருவர் தலையையும் தடவிக்கொடுத்தார் முஸ்தபா. “ஃகைர். அல்லாஹ் இந்தளவு பிரச்சினையை இலேசாக்கி வைத்தான். அல்ஹம்துலில்லாஹ். சகோதரிக்கு ஒன்று என்றதும் துடித்து ஓடிவந்த கரீமின் இந்தச் செயல் எனக்கு சஹாபா பராஉ (ரலி) வின் வாழ்க்கையைத்தான் நினைவுப்படுத்துகிறது.”

“அவருடைய அக்காவுக்கும் கையில் அடிபட்டுச்சா டாடி?” என்று கேட்டான் கரீம்.

“இல்லை. தம்பிக்காக அவர் தன் கை சதையையே இழந்துவிட்டார்” என்றார் முஸ்தபா.

“அதைச் சொல்லுங்கள் டாடி” என்றாள் ஸாலிஹா.

“உம்முஸுலைம் (ரலி) என்ற சஹாபிய்யாவுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெயர் பராஉ (ரலி). மற்றொருவர் பெயர் அனஸ் (ரலி). இருவருமே நபித் தோழர்கள். கலீஃபா உமர் (ரலி) ஆட்சி புரிந்தபோது பாரசீகர்களுடன் போர் நடந்தது. அந்தப் போரில் சகோதரர்கள் இருவரும் கலந்துகொண்டார்கள். பாரசீகத்தில் உள்ள தஸ்தர் என்ற ஊரை முஸ்லிம் படை முற்றுகையிட்டது. உள்ளே புகுந்துகொண்ட பாரசீகர்கள் கோட்டைச் சுவரிலிருந்து முஸ்லிம்கள்மேல் மழைபோல் அம்பு வீசித் தாக்கினார்கள். அதில் நிறைய முஸ்லிம்கள் இறந்தார்கள்.”

ஸாலிஹாவும் கரீமும் ஆவலுடன் தந்தையின் முகத்தைப் பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

“அதோடு மட்டும் இல்லாமல் பெரிய பெரிய கொக்கிகளை, சிவந்துவிடும் அளவிற்கு நெருப்பில் சுட்டு, அவற்றை இரும்புச் சங்கிலிகளில் இணைத்து, சுவர்களின் மேலிருந்து கீழே இறக்குவார்கள்.”

“அது எதற்கு?” என்று கேட்டான் கரீம்.

“முஸ்லிம் வீரர்கள் சுவரை நெருங்கவோ அதை ஏறிக் கடக்கவோ முயலும்போது அந்த நெருப்புக் கொக்கிகளை முஸ்லிம்கள் மேல் மாட்டி, கவ்வி இழுப்பார்கள். சூடு தாங்க முடியாமல் தசை பொசுங்கி முஸ்லிம்கள் உயிர் இழப்பார்கள். அப்படியொரு கொக்கியில் அனஸ் மாட்டிக்கொண்டார். கொதிக்கும் கொக்கியில் அவர் தவிக்க, அதை அவருடைய சகோதரர் பராஉ பார்த்துவிட்டார். உடனே அந்தச் சுவரை நோக்கி ஓடி, அதில் விறுவிறுவென்று ஏறி, அந்தக் கொக்கியைப் பற்றிப் பிடித்து தம் சகோதரரை விடுவித்தார்.

ஆனால் நெருப்பாய் இருந்த கொக்கி அவரது கையைப் பொசுக்கி புகைய ஆரம்பித்தது. இருந்தாலும் விடாமல் தம் சகோதரரை அவர் காப்பாற்றினார். ஆனால் அவரது கையில்தான் தசை பொசுங்கி விட்டது. எலும்புகள் நீட்டிக்கொண்டு தெரிந்தன.”

“வாவ்... வெரி பிரேவ் மேன்” என்றான் கரீம்.

“ஆமாம். சஹாபாக்கள் அனைவரும் மிகவும் வீரமானவர்கள். எதிரிகளுக்கு அஞ்சமாட்டார்கள்” என்றார் முஸ்தபா.

“நானும் அவர்களைப்போல் வீரமாக இருப்பேன்” என்றான் கரீம். “நானும்தான்” என்றாள் ஸாலிஹா.

-நூருத்தீன்

புதிய விடியல் - ஆகஸ்ட் 16-31, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<--முந்தைய அத்தியாயம்-->  <--அடுத்த அத்தியாயம்-->

<--நூல் முகப்பு-->

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner

Comments   

#1 Ummu afnan 2019-08-27 11:47
சுப்ஹானல்லாஹ்....
பாசம் கலந்த வீரமும் வியக்க வைக்கிறது
Quote

Add comment

Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker