சக மனிதர்கள் சம மனிதர்கள்

Written by நூருத்தீன் on .

“அத்தா! இன்னிக்கு நான் ஸ்கூலில் லில்லிபுட் பார்த்தேன்” என்று உற்சாகமாகக் கத்திக்கொண்டு ஓடிவந்தான் அப்துல் கரீம். அவனுடைய உம்மா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு

கடைக்குச் சென்றிருந்தார். அவர்கள் திரும்புவதற்குள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்திருந்த முஸ்தபா, டீ போட்டு, அதை அருந்தியபடி, லேப்டாப்பில் எதையோ வாசித்தபடி மும்முரமாக இருந்தார். அப்போது, கதவு திறக்கும் சத்தமும் அதைப் பின்தொடர்ந்து கரீமின் சத்தமும் வந்தன.

லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்தவர், “வீட்டில் நுழைந்தால் முதலில் ஸலாம்” என்று நினைவு படுத்தினார். அவசரமாக “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றான் கரீம். சில பைகளுடன் உள்ளே நுழைந்த கரீமின் உம்மாவும் ஸாலிஹாவும் ஒரே நேரத்தில் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றனர்.

“வஅலைக்கும் ஸலாம்” என்று பதிலளித்தார் முஸ்தபா. களைப்பாய்த் தென்பட்ட தம் மனைவியிடம், “இப்பொழுதுதான் டீ போட்டு இறக்கினேன். சூடு குறையாமல் இருக்கு. இந்தா குடி” என்று ஒரு கப்பில் டீ எடுத்துவந்து தந்தார். ஸாலிஹா தன் அம்மாவுடன் பைகளைத் திறந்து, வாங்கி வந்த சாமான்களை எடுத்து வைப்பதில் பிஸியாக இருக்க, கரீமோ தன் தந்தையின் பின்னாடியே கிச்சனுக்கும் ஹாலுக்குமாக ஓடிவந்தான்.

“யார் லில்லிபுட்? என்ன பார்த்தே?” மீதமிருந்த தன் கப் டீயுடன் சோபாவில் சாய்ந்து அமர்ந்து, புன்சிரிப்புடன் மகனை விசாரித்தார் முஸ்தபா.

“எங்கள் ஸ்கூல் ஆபீஸ் ரூம் இருக்குதே, அங்கு புதுசா ஒருத்தரை வேலைக்குச் சேர்த்திருக்காங்க. அவர் என்னுடைய உயரம்தான் இருக்கார் அத்தா. ஆனால் அவர் பாய் இல்லே. பிக் மேன். திக்கா மீசையெல்லாம் இருக்கு. குட்டியா பேண்ட், ஷர்ட் போட்டுக்கிட்டு அவர் நடந்து போறதைப் பார்த்தாலே ரொம்ப சிரிப்பா இருக்கு.“

“சர்க்கஸில் பஃபூன் இருப்பாங்களே அப்படியா?” என்று கேட்டாள் ஸாலிஹா. தன் தம்பியின் சிரிப்பும் விவரிப்பும் அவளது கவனத்தைத் திருப்பியிருந்தது. முஸ்தபா தம்முடைய புன்சிரிப்பை நிறுத்திவிட்டு தம் மகன் கூறுவதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

“அவரைப் பார்த்து நீங்களெல்லாம் சிரிச்சீங்களா?” என்று கேட்டார் கரீமின் தாயார்.

“அவர் எதிரில் சிரிக்கலை மம்மி. ஆனால் நாங்கள் பேசும்போது சிரிச்சுகிட்டோம். என் ஃப்ரெண்டுதான் அப்படி குள்ளமாக இருப்பவர்களை லில்லிபுட் என்று சொல்லவேண்டும் என்று சொன்னான்” என்றான் கரீம்.

அனைத்தையும் கேட்டபடி அமைதியாக அமர்ந்திருக்கும் தன் தந்தையைப் பார்த்தான் கரீம். தான் சொன்னதைக் கேட்டு அவரும் சிரித்து மகிழ்வார் என்று நினைத்தான் அவன். ஆனால், அவர் முகத்தில் தென்படும் புன்சிரிப்பு மறைந்து போயிருந்தது. கரீம் பேசி முடிக்கக் காத்திருந்த அவர் தன்மையான குரலில் பேசினார்.

“ஒருத்தருடைய உருவத்தைப் பார்த்து பரிகாசம் செய்வதும் சிரிப்பதும் தப்பு கரீம்” என்றார்.

“ஆனால், அவர் குட்டியான கையை ஆட்டிக்கொண்டு நடந்துபோவதைப் பார்த்தால் தானா சிரிப்பு வந்துடுது டாடி” என்றான் கரீம். எட்டு வயது சிறுவன்தானே அவன்!

“புரியுது கரீம். அவர் உருவம் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அவருக்கும் நம்மைப் போலத்தான் உணர்ச்சிகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். நம்மை யாராவது கிண்டல் செய்தால் நமக்குப் பிடிக்குமா? உன் டாடியைப் பார்த்து உன் ஃப்ரெண்ட்ஸ் பரிகாசமாகச் சிரித்தால் நீ விரும்புவியா?” என்று கேட்டார் முஸ்தபா. “நோ” என்றபடி தலையை ஆட்டினான் கரீம்.

“அப்படித்தான் அவருக்கும் இருக்கும். ஒருவருடைய உயரம், அழகு, கலர் எதுவும் அவருடைய சாய்ஸ் இல்லை. எல்லாம் அல்லாஹ்வுடைய முடிவு. யார், யாரை எப்படி படைக்க வேண்டும் என்று முடிவு செய்து படைத்தது அவன். அப்படி இருக்கும்போது அல்லாஹ்வுடைய படைப்பினத்தை நாம் பரிகாசம் செய்யலாமா? நிறம், உருவம் பிடிக்கவில்லை என்று முகம் சுளித்தால் அது அல்லாஹ்வின் விருப்பத்திற்கு மாற்றமாகப் போய்விடுமே” என்று விவரித்தார் முஸ்தபா.

“நம் ரஸூலுல்லாஹ் அப்படியான தம் தோழர் ஒருவரிடம் எப்படி நடந்து கொண்டார்கள் தெரியுமா?” என்று கேட்டார் கரீமின் அம்மா. “தெரியாது. சொல்லுங்க மம்மி” என்றனர் அக்காவும் தம்பியும்.

“ஜுலைபீப் (ரலி) என்றொரு நபித் தோழர் இருந்தார். அவர் மிக மிகக் குள்ளமானவர். அதனால் அவருக்கு குட்டைத் தாவணி என்னும் அர்த்தத்தில அமைந்த ஜுலைபீப் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. உயரம்தான் குள்ளமென்றால் அவரது தோற்றமும் அழகில்லாமல் இருந்திருக்கிறது. அதனால் 'தமீம்' - அழகற்றவன் என்றும் அவரை அழைத்திருக்கிறார்கள்.”

“உயரம் படு குள்ளம்; கவர்ச்சியற்ற தோற்றம்; அவர் என்ன வமிசம், என்ன குலம் என்பதும் தெரியாது; அவரின் பெற்றோர் யார் என்பது பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. அவர் ஓர் அராபியர் என்பதை மட்டும் அனைவரும் அறிந்திருந்தார்கள். இப்படியான அவரை இஸ்லாத்திற்கு முன் மதீனாவில் இருந்த மக்கள் கேலியும் கிண்டலும் செய்தபடி இருந்தார்கள். அதனால் மனம் மிகவும் துன்பப்பட்டுக் கிடந்தார் ஜுலைபீப்.”

“முஹம்மது நபி (ஸல்) மதீனா வந்ததும் அங்கு இஸ்லாம் பரவ ஆரம்பித்ததும் மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரராகப் பார்க்க ஆரம்பித்தார்கள், மதிக்கத் தொடங்கினார்கள். நபி (ஸல்) மிகவும் கருணயானவர்கள் இல்லையா? அவர்கள் ஜுலைபீபை அக்கறையாய் இழுத்து அரவணைத்துக் கொண்டார்கள். யாரோவாக இருந்த ஜுலைபீப் அன்ஸாரித் தோழராக ஆகிவிட்டார். பிறகு அவர்களே ஜுலைபீபுக்குப் பெண்ணும் தேடி கல்யாணமும் செய்து வைத்து சிறப்பித்தார்கள்.”

தம் மனைவி சொல்லி முடித்ததும், “அதனால் நாமும் அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும்தான் பழக வேண்டுமே தவிர, எந்தக் காரணத்தைக் கொண்டும் கேலி செய்யக்கூடாது. புரிகிறதா?” என்று கேட்டார் முஸ்தபா.

“யெஸ் டாடி. புதுசாக ஒரு ஸஹாபாவைப் பற்றிச் சொன்னதற்கு தேங்க்ஸ மம்மி” என்றார்கள் கரீமும் ஸாலிஹாவும்.

-நூருத்தீன்

புதிய விடியல் - ஜுன் 16-30, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<--முந்தைய அத்தியாயம்-->  <--அடுத்த அத்தியாயம்-->

<--நூல் முகப்பு-->

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner

Add comment

Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker