கற்கை நன்றே

Written by நூருத்தீன் on .

“டாடி! எனக்கு செகண்ட் லேங்குவேஜ் பாடம்தான் சரியா வரமாட்டேங்குது. அந்த க்ளாஸ் போர் அடிக்குது". ரிப்போர்ட் கார்டை நீட்டும்போதே ஸாலிஹா சிணுங்கினாள். முஸ்தபாவுக்கு விஷயம் புரிந்துவிட்டது. பிரித்துப் பார்த்தார்.

அனைத்தும் நல்ல மதிப்பெண்கள். செகண்ட் லேங்குவேஜ் பாடத்தில் மட்டும் மார்க் குறைந்திருந்தது. புன்னகையுடன் கையெழுத்து இட்டுத் தந்துவிட்டார்.

"அடுத்த முறை சிறப்பாகப் படி. நல்ல மார்க் வாங்கிவிடலாம்" என்றார். ஆனால் ஸாலிஹாவின் முகத்தில் பெரிய ஆர்வம் எதுவும் தென்படவில்லை. அன்றைய இரவு உணவு உண்ணும்போதும் அமைதியாகவே இருந்தாள். அப்துல் கரீம்தான் சேட்டை.

உறங்குவதற்குமுன் ஓய்வாக சோபாவில் அமர்ந்து "இரண்டுபேரும் இங்கே வாங்க" என்றார் முஸ்தபா. பிள்ளைகள் இருவரும் ஓடிவந்து அவருக்கு இருபுறம் அமர்ந்தார்கள். தந்தை ஏதோ கதை சொல்லப்போகிறார் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

"உங்களுக்கு பத்ரு போர் தெரியுமா?" என்று கேட்டார் முஸ்தபா. இருவரும் தெரியாது என்று தலையை ஆட்டினார்கள்.

"அதுதான் முஸ்லிம்களின் முதல் போர். இன்னொரு நாள் அதைப்பற்றி விரிவாகச் சொல்கிறேன். அந்தப் போருக்கு ரஸூலுல்லாஹ்வும் ஸஹாபாக்களும் தயார் ஆகிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது பதின்மூன்று வயது மகன் ஒருவர் தன் அம்மாவிடம், 'நானும் போரில் கலந்து கொள்ள வேண்டும். என்னையும் அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறினார். 'அப்படியா? தயாராகி வா. அழைத்துச் செல்கிறேன்' என்றார் அம்மா."

"பதின்மூன்று வயது என்றால் சிறுவராச்சே! அவர் எப்படி போருக்குச் செல்வார் டாடி?" என்று கேட்டாள் ஸாலிஹா.

"கரெக்ட். கையில் போர் வாளுடன் அவர் வந்தாரா, அவரது உயரமே ஏறக்குறைய அந்த வாள் அளவுதான் இருந்தது! அவருடைய அம்மாவும் அவரை ரஸூலுல்லாஹ்விடம் அழைத்துச் சென்றார்கள். அந்தச் சிறுவர், 'அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களுக்காக எனது உயிரை அர்ப்பணிக்கிறேன். என்னையும் அனுமதித்து ஏற்றுக் கொள்ளுங்கள். தங்களது தலைமையில் அல்லாஹ்வின் எதிரிகளை நானும் எதிர்த்துப் போரிடுவேன்' என்றார்.

ரஸூலுல்லாஹ் ஆச்சரியத்துடன் அந்தச் சிறுவரைப் பார்த்தார்கள். வாள் அளவு உயரமே உள்ள அந்தச் சிறுவரை எப்படி போர்க்களத்திற்கு அழைத்துச் செல்வது? அதனால், அன்பாய் ஆதரவாய் அந்தச் சிறுவரது தோளைத் தட்டிக் கொடுத்தார்கள். ‘நீ மிகவும் சிறியவன். வாய்ப்பு ஒருநாள் வரும் அதுவரை காத்திரு’ என்று சமாதானம் கூறினார்கள். சிறுவரது மனம் காயப்படாமல் பேசி அனுப்பி வைத்தார்கள். ஆனாலும் அந்தச் சிறுவருக்கு மிகவும் ஏமாற்றம். என்ன செய்தால் ரஸூலுல்லாஹ்வுக்குப் பிடிக்கும் என்று சிந்தித்தார். யோசனை தோன்றியது. உடனே அதைத் தன் அம்மாவிடம் சொன்னார். அம்மாவும், ̀இது நல்ல முடிவு' என்று உடனே உறவினர்களிடம் சொன்னார்கள்."

"அது என்ன முடிவு டாடி?" என்று ஆர்வமாகக் கேட்டாள் ஸாலிஹா.

"சொல்கிறேன். அவருக்கு குர்ஆன் கற்கும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் குர்ஆனைக் கற்க வேண்டும் என்றால் நபியிடம் நேரடியாகக் கற்கலாம் இல்லையா? அதனால் உறவினர்கள் அந்தச் சிறுவர் ஸைது இப்னு தாபித்தை ரஸூலுல்லாஹ்விடம் அழைத்துச் சென்று பேசினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே! எங்களின் சிறுவன் ஸைது இப்னு தாபித், நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்தவன், புத்திக் கூர்மையுள்ளவன். குர்ஆனின் பதினேழு சூராக்களை மனப்பாடம் செய்து வைத்துள்ளான். உங்களுக்கு அருளப்பட்ட அதே நேர்த்தியுடன் அதை ஓதக்கூடியவனாகவும் இருக்கிறான். உங்களிடம் உதவிக்குச் சேர்ந்து மேலும் மேலும் அதைக் கற்க ஆசைப்படுகிறான். தயவுசெய்து நீங்களே அவனை ஓதச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள்' என்றார்கள். 'எங்கே நீ மனனம் செய்து வைத்துள்ளதை ஓது, கேட்கிறேன்' என்றார்கள் முஹம்மது நபி (ஸல்).

அழகாய், தெளிவாய் ஓதினார் ஸைது இப்னு தாபித் (ரலி). குர்ஆன் ஆயத்துகள் சரியான ஏற்ற இறக்கத்துடன் இருந்தன. அவரது உள்ளத்தில் எந்தளவு குர்ஆன் இடம் பெற்றிருக்கிறது என்பது ரஸூலுல்லாஹ்வுக்குப் புரிந்துவிட்டது. ஸைது சிறப்பாய் எழுத, படிக்கக் கூடியவர் என்றும் சொன்னார்கள் அல்லவா? அதனால் ரஸூலுல்லாஹ்வுக்கு ஒரு யோசனை தோன்றியது. 'ஸைது! யூதர்கள் நான் கூறுவதைச் சரியாகத்தான் எழுதிக் கொள்கிறார்களா என்பதை அறியும் வாய்ப்பு எனக்கில்லை. எனவே நீ உடனே யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்கள். யூத மொழி ஸ்பெஷலிஸ்ட் ஒருவரின் தேவை முஸ்லிம்களுக்கு அவசியமாயிருந்தது.

"உடனே ஸைது. இராப் பகல் என்று அயராது உழைத்தார். அதன் பலனாய் இரண்டே வாரத்தில் யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொண்டார். அதன் பிறகு யூதர்களுக்கு எழுதக் கூடிய கடிதம், அவர்களிடமிருந்து வரும் தகவல் என்று எதுவாய் இருந்தாலும் படிப்பது, மொழிபெயர்ப்பது, எழுதுவது எல்லாம் ஸைதுதான் கவனித்துக்கொள்வார். பிறகு ஒருநாள், 'உனக்கு சிரியாக் மொழி தெரியுமா?' என்று கேட்டார்கள் நபிகள். 'தெரியாது' என்றார் ஸைது. 'அதைக் கற்று வா ஸைது' என்றார்கள் ரஸூலுல்லாஹ்."

"என்ன? இன்னொரு லேங்வேஜும் படிக்க வேண்டுமா?" என்று கண்கள் விரியக் கேட்டாள் ஸாலிஹா.

"ஆமாம்! அதையும் உடனே பயின்றார் ஸைது. அதுவும் எத்தனை நாளில்? பதினேழே நாளில். நபியவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக மிக இளவயது ஸைது இரண்டே வாரத்தில் ஒரு மொழியைக் கற்று, தயாராகிவிட்டார். இளைஞர் ஸைது இப்னு தாபித் ஆழ்ந்த அறிவுள்ள ஒரு மொழி வல்லுநராய் வளர்ந்தார். ரஸூலுல்லாஹ்வுக்கு அவர் மொழிபெயர்ப்பாளராக ஆகிப்போனார்" என்று கதையைச் சொல்லி முடித்தார் முஸ்தபா.

சற்று நேரம் அமைதியாக இருந்தாள் ஸாலிஹா. பிறகு, "இன்ஷாஅல்லாஹ் நாளைலேருந்து எனக்கு லேங்குவேஜ் க்ளாஸ் போர் அடிக்காது டாடி" என்றாள்.

-நூருத்தீன்

புதிய விடியல் - ஜனவரி 16-31, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<--முந்தைய அத்தியாயம்-->  <--அடுத்த அத்தியாயம்-->

<--நூல் முகப்பு-->

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner

Comments   

#1 Ummu afnan 2019-02-05 02:50
ஜஸாக்கல்லாஹு ஹைரன் சகோ
பிள்ளைகளுக்கு புரியும்படி சஹாபாக்களின் வரலாறை எளிய வடிவில் தருகிறீர்கள் ...அல்ஹம்துலில்லாஹ்
Quote

Add comment

Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker