இமாம் அபூஹனீஃபா - 09

Written by நூருத்தீன்.

இமாம் அபூஹனீஃபா அவர்களின் வாழ்நாளில் பெரும்பகுதி பனூஉமய்யாக்களின் ஆட்சியில்தான் கழிந்துள்ளது. ஏறத்தாழ ஐம்பத்தெட்டு ஆண்டுகள் அந்த ஆட்சியில் அவர் வாழ்ந்திருக்கிறார். அதனால், அவரது அனுபவத்தில் அவர் பனூஉமய்யாக்களின் வலிமையையும் பார்த்திருக்கிறார்; அவர்களின் குற்றங்குறைகளையும் அறிவார். அவர்கள் வலிமையின் உச்சத்தில் இருந்து,

பின்னர் வீழ்ச்சி அடைந்ததை அவர் நேரில் கண்டுள்ளார். அதன் பிறகு தொடங்கிய அப்பாஸியர்களின் ஆட்சியில் அவர் 12 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். அத்துடன் அவரது வாழ்க்கை முடிவுற்றது.

ஆட்சி மாறினாலும் அதிகாரம் கைமாறினாலும் அன்றைய உண்மையான மார்க்க அறிஞர்களுக்கு நேர்ந்த அவலம் மட்டும் மாறாமல் தொடர்ந்தது வரலாற்றில் பதிந்து போன கரும்புள்ளி. இரண்டு ஆட்சியாளர்களாலும் இமாம் அபூஹனீஃபா பாதிக்கப்பட்டார். எனவே, அந்தந்த ஆட்சியில் அவர் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாட்டையும் அனுபவங்களையும் சற்று நாம் அறிந்துகொள்வது அவசியம். ஏனெனில், எந்தத் தரப்பினரையும் கண்மூடித்தனமாகச் சாராமல், இறைவனின் சட்டங்களுக்கும் அவனுடைய திருப்திக்கும்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார். அதனால் ஆட்சியாளர்களுக்குச் சற்றும் அஞ்சாமல் அவர் எடுத்த முடிவுகளில் நமக்கு நிறையப் படிப்பினைகள் உள்ளன.

வாரிசுரிமை அடிப்படையில் கலீஃபாக்கள் பதவிக்கு வருவதை அபூஹனீஃபா கடுமையாக வெறுத்தார். உமய்யாக்களின் ஆட்சியில் நடைபெற்ற பல நிகழ்கவுள், அவர்களுக்கு ஆட்சி செலுத்தும் உரிமையில்லை என்ற முடிவுக்கு அவரைக் கொண்டு வந்திருந்தன. உமய்யாக்களின் ஆளுநரான அல்-ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃபின் அக்கிரமங்கள், அடக்குமுறைகள், அப்பாஸியர்களும் அலீ (ரலி) அவர்களின் வழித்தோன்றல்களும் அந்த ஆட்சியில் அனுபவித்த இன்னல்கள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் என பலவற்றையும் கண்ட அபூஹனீஃபாவுக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது. அதுதான் அவரது அரசியல் நிலைப்பாட்டை நிர்ணயித்தது.

இஸ்லாமிய சட்டத்துறையில் இமாம் அபூஹனீஃபா முதன்மையான அறிஞர்களுள் ஒருவர் என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட உண்மை. ஆனால் அவரைப்போல் உயர்வாகப் புகழப்பட்டவரும் இல்லை; கடுமையான விமர்சனத்திற்கு ஆளானவரும் இல்லை. அவரது இறையச்சம், மார்க்க அறிவு ஆகியவற்றை அறியாமல், சிலர் அவரைப் பற்றிய பொய்களைப் புனைந்து, இகழ்ந்தனர் என்றால், அவர் மீதுள்ள நல்லெண்ணத்தில் அளவுக்குமீறி அவரைப் புகழ்ந்து தள்ளியவர்கள் அடுத்த வகையினர்.

இமாம் அல்-ஷாபீஈ: “இஸ்லாமிய சட்டத் துறையில் அனைவரும் அபூஹனீஃபாவைச் சார்ந்துள்ளனர்.”

இப்னுல் முபாரக்: “இமாம் அபூஹனீஃபாவின் நேர்மையையும் சத்தியத்தைத் தேடிப்பிடிப்பதில் அவர் கொண்டிருந்த கடும் முயற்சியையும் அதிலிருந்து அவர் பிறழாதிருந்ததையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அவர் ஞானத்தின் மையப்பகுதி ஆவார்.”

 

பனூஉமய்யாக்களை எதிர்த்து, பாரசீகப் பகுதிகளில் அப்பாஸியர்களின் செயல்பாடுகள் இரகசிய மார்க்கப் பரப்புரையாக உருவாகத் தொடங்கின. பின்னர் அது ஓர் இயக்கமாகப் பரிணாமம் பெற்று, உமய்யாக்களின் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சியாக, போராட்டமாக வெடித்தன. ஹிஜ்ரி 122ஆம் ஆண்டு இமாம் ஸைது இப்னு அலீ (இமாம் ஹுஸைன் இப்னு அலீ (ரலி) அவர்களின் பேரர்) உமய்யாக்களின் கலீஃபாவாகிய ஹிஷாம் இப்னு அப்துல் மாலிக்குக்கு எதிராகத் தமது கிளர்ச்சியை நடத்திய போது, ஸைது இப்னு அலீக்குத்தான் முஸ்லிம் அரசுக்குத் தலைமை தாங்கும் உரிமை உள்ளது எனக் கூறி, அவருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தார் அபூஹனீஃபா. ஸைது இப்னு அலீயின் படை அணிவகுப்பை நபியவர்களின் பத்ருப் படை அணிவகுப்புடன் ஒப்பிட்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.

ஆனால் அப்போதைய சூழ்நிலையை அவர் ஆழ்ந்து நோக்கியதில், ஸைது இப்னு அலீ வெற்றி பெறும் வாய்ப்பில்லை என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதற்குக் காரணம் இருந்தது. ஸைது, கூஃபா நகர மக்களின் ஆதரவை நம்பியிருந்தார். ஆனால் அந்நகர மக்கள் மிக முக்கியமான தருணங்களில் தம் தலைவர்களைக் கைவிடுவதில் புகழ் பெற்றிருந்தவர்கள். ஸைதின் முப்பாட்டனார் அலீ (ரலி) அவர்களின் விஷயத்திலும் ஸைதின் பாட்டனார் ஹுசைன் (ரலி) அவர்களின் விஷயத்திலும் நிகழ்ந்த கொடுமை இதற்குப் பெரும் சான்றுகளாக உள்ளன.

ஸைதின் வெற்றிக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் அபூஹனீஃபாவின் சார்பும் அபிமானமும் நபியவர்களின் குடும்பத்தைச் சார்ந்த அவர்களுடைய வழித்தோன்றல்களின் மீது இருந்திருக்கிறது. அவர்களுக்கே ஆட்சி புரிவதில் உரிமை அதிகம் என்பது அச்சமயம் அவரது நம்பிக்கையாகவும் இருந்திருக்கின்றது. இவையெல்லாம் சேர்ந்துதான் உமய்யாக்களின் ஆட்சியில் இமாம் அபூஹனீஃபாவுக்குக் கசையடி தண்டனையாக வந்து விடிந்த முதல் அத்தியாய நிகழ்வுகள்.

ஆளுநர் இப்னு ஹுபைராவுடன் பிரச்சினை ஏற்பட்டு, கசையடி தண்டனைக்கு ஆளாகி, பிறகு விடுதலை பெற்றதும் தம் குடும்பத்தினருடன் மக்காவுக்குப் புலம்பெயர்ந்து விட்டார் அபூஹனீஃபா. அடுத்த சில ஆண்டுகள் அவரது வாழ்க்கை மக்காவில் கழிந்தது. உமய்யாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்து, அப்பாஸியர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, அவர்களுடைய இரண்டாவது கலீஃபா அல்-மன்ஸுர் பதவிக்கு வந்த பிறகுதான் தம்முடைய சொந்த ஊரான கூஃபாவுக்கு அவர் திரும்பினார். ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் மக்காவில் அவரது வாசம் அமைந்தது.

வேறு சில குறிப்புகள், அப்பாஸியர்களின் முதலாவது கலீஃபா ஆட்சி புரியும்போதே அவர் கூஃபாவுக்குத் திரும்பிவிட்டார் எனத் தெரிவிக்கின்றன.  அந்த முதலாவது கலீஃபா நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்திருக்கிறார். அனேகமாக அந்த நான்கு ஆண்டுகளில் அவர் மக்காவிலிருந்து கூஃபாவுக்கு வந்து சென்றிருக்கலாம், ஆனால், அவர் மீண்டும் கூஃபாவுக்கு வந்து நிரந்தரமாகக் குடியேறியது அல்-மன்ஸுர் பதவிக்கு வந்ததும்தான் என்கின்றனர் சில வரலாற்று ஆசிரியர்கள்.

உமய்யாக்களை வீழ்த்தி அப்பாஸியர்கள் ஆட்சியைப் பிடித்ததும், ‘தீர்ந்தது பிரச்சினை. இனி எல்லாம் நலமே’ என்று நம்பியிருந்த மார்க்க அறிஞர்களுக்கு அப்பாஸியர்களின் ஆட்சிக் காலம் அப்படியொன்றும் உகந்ததாக அமையவில்லை.

அப்பாஸியர்கள் உமய்யாக்களின் ஆட்சியில் அடக்குமுறைகளையும் சோதனைகளையும் சந்தித்தவர்கள்; அவையெல்லாம் அவர்களைப் பக்குவப்படுத்தி இருக்கும்; இறைவனுக்கு உவப்பான முறையில் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செலுத்தப் போகிறார்கள் என்று நம்பியிருந்தார் அபூஹனீஃபா. அதனால், அவர்களுக்குத் தமது சத்தியப் பிரமாணத்தை அளித்து மார்க்கச் சட்ட வல்லுநராகவும் செயல்பட்டார். மன்ஸுரும் ஆட்சிக்கு வந்தார். ஆனால் தங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் வந்ததும், நபியவர்களின் உறவினர்கள் என்ற சிறப்புரிமை அவர்களுக்கு இருந்ததால், அந்தக் கலீஃபாக்கள் எதையெல்லாம் மார்க்கம் என்று கருதினார்களோ அதையெல்லாம் மக்கள்மீது திணிக்கத் தொடங்கினர்.

அவர்களின் ஆட்சி கடுமையானதாகவும் இரக்கமற்றதாகவும் அமைந்தது. அலீ (ரலி) அவர்களின் வழித்தோன்றல்களை, அவர்களுடைய குடும்பத்தினரில் முதியவர்களை சிறையிலும் இருட்டறையிலும் அடைப்பது; தகுந்த காரணங்கள் எதுவுமின்றி அலாவீக்களைக் கொல்வதுமாக அவர்களது ஆட்சி இருந்தது.

‘ஆஹா! இதுவும் முந்தைய ஆட்சியைப் போன்றதே; பெயர் மட்டுமே வேறு’ என்ற யதார்த்த உண்மை இமாம் அபூஹனீஃபாவக்கு அப்போது புரிந்தது.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

(தொடரும்)

- நூருத்தீன்

சமரசம் பத்திரிகையில் மார்ச் 16-31, 2016 இதழில் வெளியானது

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<--முந்தையது-->  <--அடுத்தது-->

<--ஞான முகில்கள் முகப்பு-->

 

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker