கண்மூடிப் பின்பற்றும் வெறி

Written by நூருத்தீன்.

மாம் தஹாவீயை (الطحاوي) காழீ ஃபதல் அபீஉபைதா (Fadl Abi Ubaydah) ஒருமுறை அணுகி ஏதோ ஒரு பிரச்சினையை விவரித்து, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அபிப்ராயம்

கேட்டிருந்திருக்கிறார்.

இமாம் தஹாவீயும் தமது அபிப்ராயத்தைத் தெரிவித்திருந்திருக்கிறார். அதைக் கேட்ட காழீ ஃபதல் ஆச்சரியத்துடன், “இது அபூஹனீஃபாவின் அபிப்ராயம் கிடையாதே!” என்றார்.

“இமாம் அபூ ஹனீஃபா சொல்வதையெல்லாம் நானும் சொல்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“நீங்கள் அபூ ஹனீஃபாவைப் பின்பற்றுபவர்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்.”

இது ஏதோ மத்ஹபுச் சண்டை தொடர்பான கட்டுரை போலிருக்கிறது என்று ஆர்வமோ, ஏமாற்றமோ ஏற்பட்டால், தவிர்த்துவிட்டுத் தொடரவும். துளியூண்டு செய்தி கடைசியில்.

இமாம் தஹாவீயின் வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தை இலேசாக எட்டிப்பார்த்தால் இஸ்லாமிய நீதிபதி ஃபதலின் ஆச்சரியம் நமக்குப் புரியும்.

தஹாவீயுக்குக் கல்வி கற்பித்த முதல் ஆசான் அவருடைய ‘உம்மா’. தாயாகப்பட்டவர் தம் மகனுக்கு ‘அலீஃப், பா, தா’ என்று அரிச்சுவடியும் வீட்டுப் பாடமும் சொல்லித் தந்திருப்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாத ஆரம்பக் கல்வி அது. ஏனெனில், அறிஞர் எனக் குறிப்பிடுமளவிற்கு அந்தப் பெண்மணி மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தவர். அவர் அப்படி என்றால், அவருக்கு அல்-முஸனீ என்றொரு சகோதரர்; அவரும் இஸ்லாமியக் கல்வியில் ஓர் அறிஞர். இமாம் அல்-முஸனீ (Imam al-Muzani) என்று குறிப்பிடுமளவிற்குக் கல்வி ஞானம்.

அவர்கள் வாழ்ந்துவந்த அந்தக்கால கட்டத்தில் இமாம் ஷாஃபீயின் (ரஹ்) சிந்தனை அடிப்படையிலான கல்விதான் எகிப்தில் வழக்கத்தில் இருந்தது. அல்-முஸனீ இமாம் ஷாஃபீயிடம் நேரடியாகக் கல்வி பயின்று தேற, அவருடைய சகோதரி - தஹாவீயின் தாயாரும் இமாம் ஷாஃபீயின் மாணவர் குழாமில் ஒருவர். மார்க்கக் கல்வியில் அபார அறிவாற்றலுடன் திகழ்ந்திருக்கிறார்கள் அவ்விருவரும்.

இத்தகைய குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்திருக்கிறார் தஹாவீ. பால பருவத்திலேயே குர்ஆனை மனனம் செய்துவிட்டு, மார்க்கக் கல்வியைத் தம் தாய், தாய் மாமா ஆகியோரிடம் பயில ஆரம்பித்திருக்கிறார். அவர்கள் இருவரும் இமாம் ஷாஃபீயிடம் கல்வி பயின்றிருந்ததால் தஹாவீயின் கல்வியும் அந்தச் சிந்தனையின் அடிப்படையிலான கல்வியாக அமைந்துவிட்டது. ஆனால் பிற்காலத்தில் அவருக்கு வேறொரு கல்வி வாய்ப்பு இராக்கிலிருந்து வந்து அமைந்தது.

அஹ்மது பின் அபீஇம்ரான் என்பவர் எகிப்திற்கு நீதிபதியாக வந்து சேர்ந்தார். அவர் இராக் நாட்டிலுள்ள கூஃபாவில் இமாம் அபூஹனீஃபாவின் (ரஹ்) சிந்தனை அடிப்படையில் அமைந்த மார்க்கக் கல்வி பயின்றவர். பழகுவோம் வாருங்கள் என்று அவர் அழைப்பு விடுத்தாரோ; இல்லையோ – இமாம் தஹாவீ அவருடன் பழக ஆரம்பித்தார். பயணமும் தகவல் தொடர்பும் கடினமான அக்கால நிலையில் வெளிநாட்டு அறிஞரிடம் கல்வி கற்க வாய்ப்பு என்பதெல்லாம் இறைவன் கொடுக்கும் வரம். வீணாக்காமல் அஹ்மது பின் அபீஇம்ரானிடம் பாடம் கற்க ஆரம்பித்தார் இமாம் தஹாவீ. இமாம் அபூஹனீஃபாவின் கருத்துகள் மெல்ல மெல்ல தாக்கம் ஏற்படுத்த, ஒரு கட்டத்தில் எகிப்து மக்களுக்கு ‘ஷாஃபீ’ தஹாவீ ‘ஹனஃபி’ தஹாவீ ஆகிவிட்டார்.

அதனால்தான், “நீங்கள் அபூஹனீஃபாவைப் பின்பற்றுபவர்கள் என்றல்லவா நான் நினைத்திருந்தேன்” என்றார் காழீ ஃபதல் அபீஉபைதா.

இந்தக் கதையெல்லாம் இருக்கட்டும். இந்தக் கேள்வி பதில் நிகழ்வில் அதென்ன துளியூண்டு செய்தி? அது இமாம் தஹாவீயின் பதில்.

காழீயிடம், “ஒரு வெறியர்தான் மற்றவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற முடியும் (லா யுகல்லிதூ இல்லா அஸாபி)” என்று பதிலளித்தார் தஹாவீ. காட்டமான பதில்.

அது என்ன ஆயிற்று என்றால், “லா யுகல்லிதூ இல்லா அஸாபி“ என்பது எகிப்தில் ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது.

-நூருத்தீன்

வெளியீடு: சத்தியமார்க்கம்.காம்

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<சான்றோர் முகப்பு>>

e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker