சைஃபீ

Written by நூருத்தீன் on .

சியாட்டில் பூமியின் வடமேற்கில் அமைந்துள்ளதால் குளிர்-கோடை பருவங்களில் இரவும் பகலும் இருநிலைக் கோடி. கோடையில் காலை 4:30 க்கு விடிந்து மாலை 9:20 ஆன பின்பும் மறைவேனா என அடம் பிடிக்கும் சூரியன், குளிர் காலத்தில் 8:00-க்கு எட்டிப்பார்த்து மாலை 4:30-க்கெல்லாம் காணாமல் போய்விடும்.

இதில் இரு பருவமும் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் நகர்த்தி நாங்கள் நடத்தும் கூத்து தனிக் கதை.

என் பிரச்சனைக்கு வருகிறேன். குளிர்காலத்தில் மாலை 4:30க்கே மக்ரிபு தொழுகை நேரம் வந்துவிடும். வீடு திரும்ப பஸ் பிடிப்பது, தொழுகையை நேரத்துடன் நிறைவேற்ற வேண்டிய கடமை என்று அச் சமயங்கள் எனக்குப் பெரும் சவால். இரண்டு பஸ்கள் மாற வேண்டும் என்பதால் சவால் சில நேரங்களில் சங்கடமாகவும் ஆகிவிடும். அலுவலகத்தில் தொழுதுவிட்டு இரண்டாவது பஸ்ஸை நிமிடங்களில் தவறவிட்டால் அடுத்ததற்காக அரைமணி நேரம் குளிரில் காத்திருப்பது, வெடவெட! மூக்கும் முகரையும் சில்லிட்டுப் போகும்.

சில ஆண்டுகளுக்குமுன் யதேச்சையாக அதைக் கண்டுபிடித்தேன். பஸ் மாறும் downtown பகுதியில் பாகிஸ்தானியர் ஒருவரின் சிற்றுண்டிக்கடை + ஃபோட்டோ காப்பி ஷாப். அக் கடையில் தொழுதுகொள்ள வசதி இருந்தது. சிரித்த முகமும் இனிய உள்ளமுமாக இருந்தார் அதன் முதலாளி சைஃபீ. பிறகென்ன? படபடப்பு, பரபரப்பின்றி அங்கு அவருடனும் மற்றும் சிலருடனும் கூட்டாகத் தொழுதுவிட்டு, இரண்டாவது பஸ்ஸுக்கு குளிரில் நின்று வாடாமல் நிற்க இடமும் கிடைத்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியா வந்துவிட்டதால் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் அந்தக் கடைக்குச் சென்றேன். சகோ. சைஃபீ கடையில் இல்லை. விசாரித்தால் வருத்தமான தகவல். கடையில் ஒளூச் செய்ய சென்றவர் வழுக்கி விழுந்து, வலது கை தோள்பட்டை விலகி fracture. கட்டுடன் ஓய்வெடுத்து வருகிறார். மூன்று, நான்கு மாதம் ஆகும் என்றார்கள். பிறகு அவருக்கு ஃபோன் செய்து விசாரித்துக்கொண்டேன்.

அதன்பின் கோடை வந்துவிட்டது. அந்தக் கடைக்குச் செல்ல வாய்ப்பு இல்லை. இருந்தாலும் சில மாதங்களுக்குப் பிறகு விசாரிப்பதற்காகச் சென்றேன். பணிக்குத் திரும்பியிருந்தார். சிறு அசௌகரியங்கள் இருந்தாலும் கை பழைய நிலைக்குத் தேறியிருந்தது. அதே சிரித்த முகம், அதே இனிய பேச்சு என்றிருந்தாலும் அவரது முகமாற்றத்தைக் கண்டு எனக்குப் பெரும் வியப்பு. வழுவழு தாடையில் பளீர் தாடி!

அவரே பதில் அளித்தார். “வேறொன்றுமில்லை; இயலவில்லை என்பதால் ரேஸருக்கு ஓய்வு விடும்படியானது. இந்த சுன்னாஹ்வை ஏன் தவறவிட வேண்டும் என்று பிறகு யோசித்ததில் இனி இது நிரந்தரம். உங்கள் தாடை அளவிற்கு மாறிவிடுவேன்.”

இதோ இந்த ஆண்டு குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டது. அவரது கடைக்கு எனது விஜயமும். அச் சமயம் சைஃபீயுடன் செல்ஃபி!

-நூருத்தீன்

இதர கட்டுரைகள்

 

e-max.it: your social media marketing partner