ரமளானே வருக!

Written by நூருத்தீன் on .

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் தொழுகையும் நோன்பும் மட்டும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி, பருவமடைந்த முஸ்லிம்கள் அனைவருக்கும் கட்டாயம். அது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இவ்விரண்டில் ரமளான் நோன்புக்குத் தனிப்பட்ட முறையில் எக்கச்சக்க சிறப்பு உண்டு என்பதும் முஸ்லிம்கள் நன்குணர்ந்த தகவல். அதனால் ரமளான் நெருங்குகிறது என்றதுமே அசிரத்தையாக உள்ள நம் செல்கள்

விழித்துக் கொள்ளும்; ஆன்ம சிந்தனையும் பக்தியும் இயற்கையாகவே உந்தப்பட்டு மனமும் உடலும் நோன்புக்கும் இரவு நேரத்தின் மேலதிக வழிபாட்டிற்கும் உற்சாகமாகத் தயாராகி விடும்.

சென்ற ஆண்டு ரமளான் நம்மை வந்தடைந்தபோது ஐவேளை கூட்டுத் தொழுகையும் ஜும்ஆ தொழுகையும் தடைப்பட்டு, அது முஸ்லிம்கள் பரிதவித்து நின்றிருந்த அசாதாரண நேரம். கொரோனா வடிவில் வந்திறங்கி விட்ட மாபெரும் சோதனையைப் பறைசாற்ற, நிற்பதற்கு இட நெருக்கடி மிகுந்த மக்காவின் கஆபா வளாகம் வெறிச்சோடிக் கிடந்த ஒரு காட்சி போதுமானதாக இருந்தது.  உலகெங்கும் ரமளானில் பொங்கி வழியும் உற்சாகம் அனைத்திற்கும் தடை ஏற்பட்டு, அவரவரின் தனிமையில் கழிந்தது நோன்பு. ஆண்டு ஒன்று உருண்டோடி,   அச்சோதனையில் பெரும் மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடாத நிலையில், இதோ மீண்டும் ரமளான். உலகெங்கும் மீண்டும் வீடடங்கு முன்னேற்பாடுகள். மீண்டும்  கவலையுடன் முஸ்லிம்கள்.

அக்கவலையும் பரிதவிப்பும் நியாயமானவையே. பிழை சொல்வதற்கில்லை. ஆனால், நாம் சில அடிப்படைகளைப் புரிந்து கொண்டால், இச்சோதனையை வேறொரு கோணத்தில் அணுக முடியும்; இப்பேரிடர் கால ரமளான் நமக்கோர் அற்புத வாய்ப்பு, இறையருள் என்பதை உணர அது நமக்கு வாய்ப்பளிக்கும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்த ஆண்டிற்கு அடுத்து, ஹிஜ்ரீ இரண்டில் ரமளான் நோன்பு கட்டாயக் கடமையாக அறிவிக்கப்பட்டது. அந்த முதலாம் ரமளான் முஸ்லிம்களுக்கு எப்படிக் கழிந்தது? போரில்! ரமளான் பதினேழாம் நாள்தான் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பத்ரு யுத்தம் நிகழ்ந்தது. போருக்கு முன்னரான முஸ்தீபுகளும் அந்த முதலாம் ரமளானில்தான் நடைபெற்றன.

அன்று தொடங்கி, வரலாறு நெடுக நாம் ஆராய்ந்தால் மாபெரும் சிறப்பு மிக்க ரமளான் மாதம் இயற்கை நிகழ்வுகள் எதிலிருந்தும் விலக்குப் பெற்றதில்லை என்பது புரியும். பிறப்பு, இறப்பு, போர், கலகம், மழை, புயல், பேரிடர் எதுவுமே அம்மாதத்தில் விடுப்பு எடுத்து விலகி நிற்பதில்லை. அவையவை தத்தம் விதிப்படி நிகழும். ரமளான் தன் முறைப்படி வந்து செல்லும். நாமும் நமக்கிடப்பட்ட கட்டளைப்படி கடமையாற்ற வேண்டியதுதான். ஆனால் என்ன வித்தியாசம் எனில், யதார்த்த சூழ்நிலையில் நுழையும் ரமளானில் உள்ள நடைமுறைக்கும் அதில் நாம் நமக்கு ஏற்படுத்திக் கொள்ளும் சலுகைகளுக்கும் வசதிகளுக்கும் சோதனைக் காலங்களில் தடை ஏற்பட்டு விளைவாக நம் மனங்களில் கிலேசம்.

ரமளானின் வழிபாட்டை மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுவதென்றால் அதன் முதல் விதி நோன்பு. எத்தகு சோதனையான காலத்திலும் - நம் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடில்லாத வரை - அந்நோன்பை நோற்பதில் பிரச்சினை இருக்கப் போவதில்லை. இதுவன்றி கட்டாயக் கடமையல்லாத ஒன்று இரவு நேரங்களில் பள்ளிவாசல்களில் நடைபெறும் அதிகப்படியான தொழுகை. தராவீஹ் எனப்படும் இத்தொழுகை இதர மாதங்களில் சோம்பலாக உள்ள முஸ்லிம்களிடம்கூட ஒருவித ஆன்மீகப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, வரிசைகள் நிரம்பி வழிவது உலக யதார்த்தம்.

அல்லாஹ் நமக்குக் கட்டாயமாக்கியுள்ள நோன்பின் அடிப்படை விதி என்ன?

‘ஓரிறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்வாழ்ந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. (நோன்பு நோற்பதால் இறைபக்தி மேலோங்கி, பாவங்களிலிருந்து) உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளலாம்’. (குர் ஆன் 2: 183)

ஏன் நோன்பு விதியாக்கப்படுகிறது என்றால், அதைக்கொண்டு உங்களது இறைபக்தியும் அச்சமும் மேலோங்கும், பாவங்களிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்று அறிவித்து விட்டான் இறைவன். அதற்கு நாம் முயற்சி புரிய ஏதுவாக வழிகெடுக்கும் ஷைத்தானுக்குச் சங்கிலியிட்டு, நம்மிடம் ரமளானை ஒப்படைத்து விடுகிறான் அவன்.

இத்தகு ரமளானில், படைத்தவனின் உவப்பிற்காகப் பகலில் உணவு, நீர் துறந்து, அனுமதிக்கப்பட்ட ஆசாபாசங்களிலிருந்து விலகி நோன்பு நோற்று, அதைத் திறக்கும் நேரத்தில் ஏற்படும் பக்திப் பரவசம் ஓர் உன்னதம் என்றால், அவனிடம் ஒன்ற, கெஞ்ச, அழ, பாவ மன்னிப்புக் கோரி மன்றாட இரவுத் தொழுகைகள் நமக்கு ஒரு பாலம். ஆத்மார்த்தப் பரிசுத்ததுடன் நோன்பும் தொழுகையும் அமையும் போதுதான் நம் உடலிலும் அகத்திலும் ரசாயண மாற்றம் சரியான விகிதத்தில் நிகழும். மேற்சொன்ன வசனத்தில் அவன் குறிப்பிடும் 'தக்வா' எனப்படும் பேறு வாய்க்கும்.

தராவீஹ் எனப்படும் இரவுத் தொழுகையைப் பள்ளிவாசலில் கூட்டாகச் சேர்ந்து தொழுவது நற்பேறு, சுகானுபவம் என்ற போதிலும் கவனச் சிதறல்களும் சில பள்ளிவாசல்களில் முறையற்று நிகழும் படோடபமும் சமகாலத்தில் நாம் சந்திக்கும் இடைஞ்சல்கள். படைத்தவனுடன் நாம் கொள்ள விழையும் பிரத்யேகத் தொடர்புக்கு அதனால் சங்கடம். நபியவர்கள் தம் வாழ்நாளில் ரமளானின் சில நாள்கள் மட்டுமே இத்தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றத் தலைமைத் தாங்கிவிட்டு அடுத்து வந்த நாள்களில் தனியாகவே தொழுதார்கள் என்கிறது வரலாறு. தராவீஹ் தொழுகையின் ஃபிக்ஹ் சட்டமன்று இங்கு இக்கட்டுரையின் ஆராய்ச்சி. மாறாக வேறு.

கொரோனோவின் பேரிடர் நம்மைச் சூழ்ந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சில கட்டுப்பாடுகளும் அரசின் அறிவிப்புகள் ஆகியுள்ளன. கூட்டமாக ஒன்று கூடும்போது பின்பற்ற வேண்டிய இடைவெளி, வயோதிகர்களும் உடல் நலமற்றவர்களும் பெரும் கூட்டங்களில் கலப்பதால் அவர்களை  இந்நோய் எளிதில் தாக்கும் அபாயம், நாமே நம்மை அறியாமல் சக மனிதர்களுக்கு இதைக் கடத்தும் சாத்தியம் ஆகியன இதர சோதனைகள்.

அமெரிக்காவின் நியூஸ்வீக் (Newsweek) பத்திரிகையில் சென்ற ஆண்டு மார்ச் 17, 2020 பேராசிரியர் க்ரெக் கான்ஸிடைன் (Professor Craig Considine) என்பவர் எழுதியிருந்த கட்டுரையில் கீழ்காணும் வாசகம் முக்கியமானது.

"நோய்த்தொற்றுக் காலங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதரத்தையும் தனிமைப்படுத்தலையும் பரிந்துரைத்தவர் யார் தெரியுமா? ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் - இஸ்லாத்தின் நபி முஹம்மது. அவர் உயிர்கொல்லி நோய்களுக்கான மருத்துவ நிபுணர் அல்ல என்ற போதிலும் கோவிட் போன்ற நோய்த் தொற்றைத் தடுக்கவும் எதிர்கொள்ளவும் அவர் சிறப்பான அறிவுரை வழங்கியுள்ளார்" என்று தெரிவித்துக் கீழ்காணும் நபி மொழியையும் முன்னுதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.

'ஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்குக் கொள்ளைநோய் ஏற்பட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள்' (புகாரி)

ப்ளேக் எனப்படும் கொள்ளைநோய்க்கு இணையான அல்லது அதைவிட மோசமான கொரோனா உலகைச் சுற்றி வளைத்துள்ள இத்தருணத்தில் பாதிப்படைந்துள்ள நமது இயல்பு வாழ்க்கை மனத்திற்கு உவப்பற்ற சூழல்தான். என்ற போதிலும் நாம் சந்திக்கும் கட்டுப்பாடுகளும் தடைகளும் நபியவர்கள் பரிந்துரைத்துள்ள வழிகாட்டுதலுக்கு உட்பட்டே அமைந்துள்ளன என்பதை உணர முடிந்தால் கிலேசம் குறையும். ஊன்றிச் சிந்திப்போமானால் இவற்றைப் பின்பற்றுவதில் முஸ்லிம்கள்தாம் முன்னோடியாகத் திகழ வேண்டும்.

இத்தகு நேரத்தில் -

  • நாம் நம்மைப் படைத்தவனுடன் தனியே தொடர்பு கொள்ள,
  • யாருக்கும் எவருக்கும் தெரியாமல் அவனிடம் கதறி அழ,
  • ஸுஜுதில் தொழுகை விரிப்பை நம் கண்ணீரால் நனைக்க,
  • அவனிடம் மட்டுமே மனம் ஒன்றி கை உயர்த்தி மன்றாட,

இந்த ரமளான் நமக்கு நல்வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பதை உணர்ந்தால் இச்சோதனைக் காலமும் நமக்கு ஒரு வரம்.

நபி (ஸல்) கூற்று ஒன்று உண்டு. அது நாம் இங்கு நினைவு கூரத்தக்கது.

"இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது" (முஸ்லிம்)

-நூருத்தீன்

மெய்ப்பொருள் இணைய தளத்தில் ஏப்ரல் 11 2021, வெளியான கட்டுரை

Image courtesy: Nabila Abuljadayel

இதர கட்டுரைகள்

 

e-max.it: your social media marketing partner

Tags: Ramadan Corona

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker