தளிர் பதினைந்து - முன்னுரை

Written by நூருத்தீன் on .

தொடக்கப்பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட பழக்கம் அது. நண்பன் சசியுடன் உருவான சங்காத்தம் ஏற்படுத்திய பின் விளைவு கதை எழுதிப் பார்ப்பது.

சசி அறிமுகப்படுத்திய முயல், அணில், அம்புலிமாமா, முத்து காமிக்ஸ் ஆகியனவற்றை வாசிக்கப் பழகி, அவனைப் போலவே நானும் கதை எழுதும் முயற்சியில் இறங்கினேன். ஒன்றும் ஒப்பேறவில்லை. தனது கதைகள் பதிவான அனுபவத்தின் அடிப்படையில் அவன் அளித்த உந்துதலில், விடாது செய்த முயற்சியில், முயல் பத்திரிகையில் வெளியானது 'பழி வாங்கிய பேய்'. அப்பொழுது நான் ஐந்தாம் வகுப்பு. பெருமையில் கொம்பு முளைக்காத குறை.

அத்துடன் சரி. அதற்குப் பின் முயன்றதெல்லாம் முடிந்தது குறைப் பிரசவத்தில்தான்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு முயற்சியில் எழுதியதை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க, அது பிரசுரமும் ஆகிவிட்டது. அது ஏற்படுத்திய உற்சாகத்தில் சித்திரம் மட்டுமல்ல, எழுத்தும் கைப்பழக்கம்தான் போலும் எனத் தோன்றி எழுதிப் பழகுவது அதிகமானது. பல நிராகரிக்கப்பட்டன. சில அச்சேறின.

ஒரு கட்டத்தில் கவனமெல்லாம் கட்டுரைகள் பக்கம் திரும்பி, அது இஸ்லாமிய வரலாற்றுக்கு மாறி, 'அட! இதுதான் என் ஓட்டத்திற்கு உகந்த களம்’ என்று மனத்தில் அசரீரி. காரணம் அதை எழுதும்போது இயல்பாகக் குவியும் ஆர்வம்; மனத்தில் உருவாகும் திருப்தி. ஆனால், அது நிறைய உழைப்பும் எழுத்தில் ஓர் ஒழுங்கும் தேவைப்படும் பணி. இன்றும் உவப்புடன் அது தொடர்கிறது. எல்லாம் ஏக இறைவனின் கருணை; நாட்டம். புகழும் பெருமையும் அவனுக்கே.

அந்த ஓட்டத்தின் இடையே, அசதிக்கு இளைப்பாறுதலாகவும் பாஸிட்டிவ் திசை திருப்பலாகவும் கற்பனைக்கு ஏற்பக் கிறுக்குவது நடக்கும். மனத்திற்கு அதில் ஏதோ ஓர் ஏகாந்தம். கட்டுப்பாடுகள் அற்ற தளர்வுடன் பயிலும் எழுத்து நடையால், சில சிறுகதைகள் உருவாகின. இன்று திரும்பிப் பார்த்தால் எனது அமெச்சூர் முயற்சியில் இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள். (வேறு சில என்னுடைய 'அவ்வப்போது' நூல் தொகுப்பில் இடம்பெற்றுவிட்டதால் அவை இதில் இடம் பெறவில்லை).  நூற்றுக்கணக்கில் நாவல்களும் சில நூறு சிறுகதைகளும் வெற்றிகரமாகப் படைத்த எழுத்தாளர்கள் நிறைந்த எழுத்துலகில் இந்தப் பதினைந்து ஒரு விஷயமா என்ன? எல்லாம் இளந்தளிர்.

இருக்கட்டுமே. இன்றைய டிஜிட்டல் பெருவெளி சமகாலச் சங்கப்பலகை. அதில் யாருக்குத்தான் இடமில்லை? நாமும் இதை ஒரு தொகுப்பாக அதில் வெளியிட்டால் என்ன குறைந்துவிடும்? இதுவும் அந்த அண்டத்தில் ஓர் ஓரத்தில் கிடக்கட்டுமே என்ற எண்ணம் உதித்து,... விளைவு இந்தத் 'தளிர் பதினைந்து'.

முதிர்ச்சிக்கும் பக்குவத்துக்கும் ஏற்பத்தான் எழுத்தின் நடை; வெளிப்பாடு. இருபத்திரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்தப் பதினைந்து கதைகளில் அவற்றின் மாறுபாடு எளிதாகத் தெரியும். அவற்றை மாற்றாமல், மெய்ப்பு மட்டும் திருத்தித் தரும்படி அண்ணன் நாஞ்சிலன் (Dr. "AMSA" Kabeer M.A., Ph.D.,) அவர்களை அணுகினேன். தமது சிரமங்களைப் பொருட்படுத்தாமல் பெருவிருப்புடன் அவர்கள் நல்கிய உதவியும் மேற்பார்வையிட்டு நுணுக்கமான திருத்தங்கள் பரிந்துரைத்த அண்ணன் ஜமீல் அவர்களின் உதவியும் நன்றிக்கு அப்பாற்பட்டவை.

இத்தொகுப்புக்கு அணிந்துரை வழங்கிய நண்பன் சசிதரனுக்கு மனமார்ந்த நன்றி.

சுட்ட பதார்த்தத்தைச் சந்தைப் படுத்திவிட்டேன். ருசியுடையதாக இருப்பின் அது அதற்குரியவர்களை எட்டிவிடும். அதுவே என் நம்பிக்கை. மற்றபடி இலக்கிய விருது, சாகித்திய அகாடமி என்றெல்லாம் கனவு இல்லை. பேராசையும் அறவே இல்லை. நம்புங்கள்.

இக்கதைகளை வாசிக்கும் உங்களுக்கு எனது உத்தரவாதமானது, 'நிச்சயமாக ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும்' என்பதே.

நிறை, குறை என்று தங்களுக்குத் தோன்றுவதை என் மின்னஞ்சலுக்கு எழுதினால் இத்தளிர் தங்களை வாழ்த்தும்.

-நூருத்தீன்

அமேஸான் கிண்டிலில் இந்நூல் வெளியாகியுள்ளது.

India: https://www.amazon.in/dp/B08PHBKH93
USA: https://www.amazon.com/dp/B08PHBKH93

இதர கட்டுரைகள்

 

e-max.it: your social media marketing partner

Tags: குட்டிக் கதை சசி

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker