ஒரு பயணியின் டைரிக் குறிப்பு

Written by நூருத்தீன் on .

பத்தாண்டுகளுக்கு முன் பிப்ரவரி 2, 2010 தொடங்கிய பயணம் இது. சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுடன் அறிமுகமும் நட்பும் ஏற்பட்ட புதிதில் நாமும் ஏதாவது எழுதுவோமே என்று நபித் தோழர் ஒருவரின் வரலாற்றை அவர்களின் இணைய தளத்தில் எழுதினேன்.

  அது அவர்களுக்குப் பிடித்திருந்தது. வாசகர்களுக்கும் பிடித்திருந்தது. எதிர்பாராத அளவில் ஆதரவும் வரவேற்பும் கிடைத்தன. அவை ஊக்கமளிக்க, ‘தொடருவோமே’ என்ற முழுமூச்சில் இறங்கப்போக, எழுபது தோழர்களின் வாழ்க்கை வரலாறுடன் 22 டிசம்பர் 2017 அன்றுதான் அத்தொடர் நிறைவுற்றது.
 
ஏறத்தாழ எட்டாண்டுப் பயணம். அந்த எட்டாண்டு கால உழைப்பும் எழுத்தும் எனது வாழ்க்கையின் சுகந்த பக்கங்கள். 1400 ஆண்டுக்கும் முந்தைய, மணலும் தூசும் வீரமும் மணக்கும் அந்த அரேபிய களங்களில் புகுந்து புகுந்து வெளிவந்த என் அனுபவம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. இத்தொடர் எழுத ஆரம்பித்தபின் நிகழ்ந்த உம்ரா பயணங்களில் மக்கா, மதீனா மண்ணில் நிற்கும்போது என் அகத்துள் ஓடிய உணர்வுகள், புறத்தே சிலிர்த்த ரோமங்கள், தசாப்தங்களுக்கு முன் அந்நாட்டில் நான் வாழ்ந்தபோதோ, முந்தைய காலங்களில் புனிதப் பயணம் மேற்கொண்டபோதோ ஏற்படாதவை.
 
முற்றிலும் புதிய உணர்வு. முழக்க மாறிய பார்வை! இது எப்படி நிகழ்ந்தது?
 
ரசவாதம்! முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை, அவர்களுடன் ஒட்டி உறவாடிய அந்தப் புனிதர்களின் வாழ்க்கை ஆகியனவற்றுடன் உறவாடுவதால் ஏற்படும் ரசவாதம்!
 
இத்தொடர் இருபதுக்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கடந்திருந்த நிலையில் முதல் 20 அத்தியாயங்களை “தோழர்கள் - முதலாம் பாகம்”  என்ற நூலாக, சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டார்கள். 2011 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அந்நிகழ்வில் மறைந்த முனைவர் பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்), பேரா. அ. மார்க்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். அந்த நூலின் அனைத்து பிரதிகளும் வெகு விரைவில் விற்றுத் தீர்ந்தன.
 
அன்றிலிருந்து, அதை மீள் பதிவு செய்யவும் ஏனைய அத்தியாயங்கள் அனைத்தையும் நூலாக வெளியிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைக் குறித்து வாசகர்களிடமிருந்தும் தொடர்ந்து விசாரிப்புகள். அல்லாஹ்வின் பேரருளால் இப்பொழுதுதான் அது சாத்திமாகியுள்ளது.


 
நிலவொளி பதிப்பகத்தார் இந்நூலை வெளியிட முன்வந்து, அனைத்து அத்தியாயங்களையும் ஒரே தொகுப்பாகக் கொண்டுவரலாம் என்று முயன்றபோது ஆயிரத்தைத் தொடும் பக்கங்களும் விலையும் யோசிக்க வைத்தன. என்னதான் கனமான வரலாறாக இருந்தாலும், வாசகர்கள் கனமான புத்தகத்தைத் தூக்கி வாசிப்பது வசதியாக இருக்காது, அவர்களுக்கு எளிதாக அமையட்டும் என்ற எண்ணத்தில் இரண்டு பாகமாக வெளியிடுவது என்று முடிவானது. அதன்படி “தோழர்கள் - பாகம் 1” வெளியாகியுள்ளது. இந்த பாகத்தில் 35 தோழர்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. பாகம் -2இல் மீதமுள்ள 35 தோழர்கள் வெளிவருவர் இன்ஷா அல்லாஹ்.
 
அல்லாஹ்வின் நாட்டமும் திட்டமும் அற்புதமானவை. நாம் அறிந்திட இயலாதவை. உலகின் வடமேற்கு மூலையில் தானுண்டு, வேலையுண்டு என்று கிடந்தவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து உருப்படியான பணியொன்றில் அவனை மூழ்கடித்த அல்லாஹ்வின் பெருங் கருணையை என்ன சொல்லிப் போற்றுவது, புகழ்வது, நன்றியுரைப்பது? அவன் கற்றுத் தந்த ஒற்றைச் சொல்லை மட்டும் கண்ணீர் மல்க ஆழ்மனத்திலிருந்து உரைக்கின்றேன் - அல்ஹம்துலில்லாஹ்.
 
என் எழுத்தைச் செதுக்கி செம்மைப்படுத்தும் (உடன்பிறவா அண்ணன்களான) ஆசான்களுக்கும் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுக்கும் என்றென்றும் என் நன்றி. இந்நூல் வெளிவர உதவிய நிலவொளி பதிப்பகத்தாருக்கும் தொடர்ந்து எழுதுங்கள் என்று ஆர்வமூட்டும் சகோ. அமீனுக்கும் என் நன்றி. நான் அறிந்த, அறியாத வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
 
இந்நூல் அனைவருக்கும் சுகமான வாசிப்பு அனுபவத்தைத் தரும், அப்புனிதர்களின் வரலாற்றைச் சிறப்பான முறையில் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும் என நிச்சயமாய் நம்புகிறேன். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று கருத வேண்டாம். இத்தொடருக்கு வாசகர்கள் அளித்த கருத்தின் சாராம்சத்தில் உருவான நம்பிக்கை அது. எனவே, தயக்கமின்றி, இந்நூலை வாங்குங்கள். வாசியுங்கள். தங்கள் உறவு, சுற்றம், நட்பு அனைவரிடமும் அறிமுகப்படுத்தி அவர்களும் வாங்கி வாசிக்க ஊக்கமளியுங்கள். முஸ்லிம்கள், பிறமதத்தவர் அனைவருக்கும் இந்நூல் உவப்பை அளிக்கும், பயன் தரும். இன்ஷா அல்லாஹ்.
 
நமது பிழை பொறுத்து நற்செயல்களை அங்கீகரிக்க அல்லாஹ்வே போதுமானவன்.

-நூருத்தீன்

நூல் விற்பனைக்குக் கிடைக்கும் இடங்கள்

இதர கட்டுரைகள்

e-max.it: your social media marketing partner