யார் இந்த தேவதை? - முன்னுரை

Written by நூருத்தீன் on .

சிறுவர்கள் உலகம் களங்கமற்றது. அப்பருவம் தீவினைகளும் அழுக்கும் ஊடுருவத் தொடங்காத காலம். தாங்கள் கற்பதைப் பஞ்சைப்போல் உறிஞ்சிக்கொள்ளும் அவர்களின் இளைய பருவத்தில், அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு உகந்த கருத்துகளையும்

ஈருலக வாழ்க்கைக்கும் பயனளிக்கவல்ல தகவல்களையும் அளிப்பது நமது கடமையாகிறது. இப்பணியை நம் முன்னோர்கள் காலங்காலமாக நீதிக் கதைகள் என்ற வடிவில் செயல்படுத்தி வந்தனர். சிறுவர்களுக்கு அறமும் பண்பும் ஒழுக்கமும் நீதியும் வீரமும் புகட்ட கதைகள் சிறப்பான வடிவமாக அமைந்தன.

அவ்வடிவத்தில் நம் இஸ்லாமிய வரலாற்றையும் மாண்புகளையும் நாம் தொடங்கவிருக்கும் சிறுவர் பகுதிக்கு எழுதித் தர முடியுமா என்று கேட்டு புதிய விடியல் பத்திரிகையின் இணை ஆசிரியர் சகோ. ரியாஸ் திடீரென்று ஒருநாள் என்னைக் கேட்டார். சிறுவர் இலக்கியம் என்பது தனித்திறம் தேவைப்படும் ஒரு துறை. எழுத்து அனுபவம் மிகச் சொற்பமாக உள்ள எனக்கோ அது முற்றிலும் அந்நியமான பகுதி. முதலில் பெரும் தயக்கம் ஏற்பட்டது. ஆயினும் அவர் அளித்த நம்பிக்கையும் உற்சாகமும் ஏதோ ஒரு தையரித்தை அளித்தன. அல்லாஹ்வின் துணையை ஆதாரமாகக் கொண்டு சிலேட் பக்கங்கள் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தேன்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை, நபித் தோழர்களின் வாழ்க்கை, குர்ஆனில் அல்லாஹ் சுப்ஹானஹுவதஆலா விவரித்துள்ள வரலாறு ஆகியனவற்றில் நமக்கு ஏராளமான தகவல்களும் பாடங்களும் படிப்பினைகளும் உள்ளன. Role model எனப்படும் முன் மாதிரியைத் தேர்ந்தெடுக்க அவர்களின் வரலாற்றை வாசித்தாலே போதுமானது. ஆகையால், இத்தொடருக்கான அடிப்படையாக அவை அமைத்துக்கொள்ளப்பட்டன. தங்கள் வீட்டுச் சிறார்களுடன் நிகழ்ந்த சேட்டைகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்களின் அனுபவங்கள், சிறுவர் கதை எனில் இப்படியெல்லாம் இருக்கலாம் என்று நண்பர்கள் தாமாக முன்வந்து அளித்த டிப்ஸ் ஆகியன அடுத்து எனக்குப் பெரும் உதவி புரிந்தன.

இப்படியாக சிறுகச் சிறுக வளர்ந்த சிலேட் பக்கங்கள் இருபத்து நான்கு அத்தியாயங்களாக நிறைவு பெற்றது; இப்பொழுது ‘யார் இந்த தேவதை’ என்ற நூலாக வெளியாகியுள்ளது. இது முழுக்க முற்றிலும் அல்லாஹ்வின் பேரருளே அன்றி வேறில்லை. அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் பெருமையும் அவனுக்கே உரித்தாவன. இப்படி ஒரு தொடர் எழுத எனக்கு ஊக்கமும் வாய்ப்பும் அளித்த சகோதரர் ரியாஸுக்கும் புதிய விடியலுக்கும் இலக்கியச்சோலைக்கும் எனது மனமார்ந்த நன்றி.

சிறுவர் இலக்கியம் என்ற சிறப்புத் துறைக்குள் இது இடம்பிடிக்கும் என்று நம்புவது பேராசை. ஆனால், சிறுவர்களுக்கும் நமக்கும் ஏதேனும் ஒருவகையில் உதவக்கூடிய கருத்துகள் நிச்சயமாக இந்த சிலேட் பக்கங்களுக்குள் இருக்கின்றன என்பது மட்டும் என் நம்பிக்கை. இப்பணியை ஏற்றுக் கொள்ளவும், இதிலுள்ள பிழைகளை பொறுத்துக்கொள்ளவும் எனது பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து அருள்புரியவும் அந்த ஏக இறைவன் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.

-நூருத்தீன்

இதர கட்டுரைகள்

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker