சசி 2.0

Written by நூருத்தீன்.

கடந்த வாரம் புதன்கிழமை. உறங்கும் முன் யதேச்சையாக அந்த மின்னஞ்சலைப் பார்த்த எனக்கு அப்படியொரு ஷாக். உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்ச subject line-இல் “சசி” என்று இருந்த அந்த ஒற்றை வார்த்தை போதுமானதாக இருந்தது.

கோலி, கில்லி, பம்பரம், கிரிக்கெட்

போன்ற சென்னையின் (அக்கால) அத்தியாவசிய விளையாட்டுகளுடன் தொடங்கியது என் பால்யம். அக்கம்பக்கத்து வாண்டுகள் அடங்கிய தனி ‘ஜமா’வுடன் தேசியத் தெரு விளையாட்டுகளை நான் பயின்று வந்த நேரத்தில், எங்கிருத்து, எப்பொழுது சசியுடன் அறிமுகம் ஏற்பட்டது என்பது நினைவில்லை. ஆனால் அதன்பின் சசி என்னுள் இட்டதெல்லாம் அழியாத கோலங்கள்.

சசியின் வீடு அடுத்தத் தெருவில். தினமும் மாலையில் சந்தித்துவிடுவோம். பெரும்பாலும் எங்கள் வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்து, நான் தெரு விளையாட்டுகளை முடித்துவிட்டு வரும்வரை பொறுமையாகக் காத்திருப்பான். பிறகு பேசுவான். வாய் பிளக்காத குறையாகக் கேட்பேன்.

குமுதம் பத்திரிகையைப் புரட்டுவதும் தினத்தந்தி கன்னித்தீவு போன்றவைதாம் அச்சமயம் எனது வாசிப்பு விசாலம். ஆனால் சசிதரனோ அந்த வயதிலேயே சிறுவர் பத்திரிகைகளில் எழுதும் அளவிற்குக் கில்லாடி. முயல் தெரியுமா, அணில் படிச்சிருக்கியா என்று சிறுவர் பத்திரிகைக்கு என்னை அறிமுகப்படுத்தி, பொன்னி, வாசு காமிக்ஸ்லாம் அடாசு, முத்து காமிக்ஸ் படி என்று அறிவுறுத்தி, அவனது சங்காத்தம் அளித்த உத்வேகத்தில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது நானும் முயல் பத்திரிகைக்குக் கதை எழுதி அனுப்பி அது பிரசுரமும் ஆகிவிட்டது.

‘நைலான் கயிறு படிச்சிருக்கியா?’ என்று சுஜாதாவை அறிமுகப்படுத்தினான். விபரீதக் கோட்பாடு நாவலை அவன் விவரித்த விவரிப்பில் அசந்துபோய், உடனே வாங்கிப் படித்து அங்கு ஆரம்பித்தது சுஜாதா எழுத்துடன் என் தொடர்பு. அகிலன் என்பான், கல்கி படி, ஜெயகாந்தன் தெரியுமா, தேவன், துப்பறியும் சாம்பு என தினமும் எழுத்தும் வாசிப்பும் பேசும் அவனுடன் பழகிப் பழகி, நடுத்தெருவில் புத்தகத்தை வாசித்துக்கொண்டே நடக்கும் அளவிற்கு என் நிலை மாறிப்போனது. வாங்கிச் சேர்த்த புத்தகங்களைக் கொண்டு வீட்டிற்குள் வாடகை நூல் நிலையம் தொடங்கிய கூத்தெல்லாம் தனிக் கதை. வார இதழ்களில் வெளியாகும் சுஜாதாவின் தொடர்கதைகளை, புத்தகத்தின் ஸ்டேபில் பின்னை நீக்கி பத்திரமாகக் கிழித்து, பைண்டிங் செய்து நூலாக்கி மீண்டும் மீண்டும் வாசித்த அந்தக் காலத்தை இப்பொழுது நினைத்தாலும் மனதோரம் மகிழ்ச்சி.

எந்தப் பத்திரிகை என்று நினைவில்லை, ஏதோ ஒரு போட்டி. அதில் கலந்துகொள்ள, சில நுண்ணியத் தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க என் தந்தையின் புத்தக அலமாரியிலிருந்த பல பாக தமிழ் லெக்ஸிகன் அகராதியைப் புரட்டிக் கொண்டிருப்போம். அந்தக் காலத்திலேயே இருநூறு பக்க நோட் புக்கில் அவன் இரண்டு துப்பறியும் நாவல்களை எழுதி முடித்து, அதைப் பார்த்து நானும் நாவல் முயன்றதெல்லாம் குறைப் பிரசவ வரலாறு. சசி சித்திரம் வரைவதிலும் திறமைசாலி. நோட்புக்கில் காமிக்ஸ் கதை எழுதும் முயற்சியெல்லாம் நடந்தது. அவன் வரைவதை படிக்கட்டில் அமர்ந்து வியப்புடன் பார்த்தது இன்றும் நினைவில் பசுமை.

என்னைவிடச் சில வயது மூத்தவன் என்பதால் நான் கல்லூரியை முடிக்கும்முன் அவன் பச்சையப்பாவில் பட்டம் பெற்று வங்கியிலும் பணிக்குச் சேர்ந்துவிட்டான். கல்லூரிப் பருவத்திலும் அவன் அளிக்கும் அறிமுகம் தொடர்ந்தது. Irving Wallace-இன் Second Lady படித்துப்பார் என்றான். Sydney Sheldon நாவலின் மொழிபெயர்ப்பு குமுதத்தில் வருகிறது, நான் அதை மூல மொழியில் வாசித்திருக்கிறேன், பிரமாதம், தவறவிடாதே என்று அவன் சொல்லக் கேட்டு அதையும் தொட்டிருக்கிறேன். அவன் அறிமுகப்படுத்திய எதுவுமே என் ரசனைக்கு ஒத்துப்போகாமல் இருந்ததில்லை என்பது ஆச்சரியம். வாசிப்பில் இருவருக்கும் ஒரே அலைவரிசை இருந்தது. ஆனால் சினிமாவில்தான் எனக்கு சிவாஜி என்றால் அவனுக்கு எம்.ஜி.ஆர்.  தொடர்ந்து வாத்தியார் படத்தைக் கவனித்துப்பார் அதில் ஆண்மைத்தனம் இருக்கும். ஹீரோயிஸம் இழையோடுவதைக் கவனிக்கலாம் என்றெல்லாம் அவன் பரிந்துரைத்தும் எனக்கென்னவோ சிவாஜிக்கு அடுத்துத்தான் எம்.ஜி.ஆர் என்ற கருத்து மாறவில்லை.

ஜாகையின் ஏரியா மாறியது. குடும்பஸ்தர்கள் ஆனோம். நாடு கடந்தேன். அவன் பணிமாற்றலாகி புதுடெல்லிக்குச் சென்றுவிடத் தொடர்பு குறைந்து கடிதப் போக்குவரத்து ஓரளவு நிகழ்ந்தது. பிறகு அதுவும் மெல்ல மெல்லக் குறைந்து, விலாசமும் தொலைபேசி எண்ணும் தவறிப்போய், தொடர்பு முற்றிலுமாய் அறுபட்டு, ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன.

கடந்த சில மாதங்களாகத் திடீரென்று அவனது நினைவு அதிகம் ஏற்பட்டு, ஃபேஸ்புக், கூகுள், LinkedIn என்று தேடினால் ஏகப்பட்ட சசி. வைக்கோல் போரில் தேடிக்கொண்டேயிருந்தேன். அகப்படவில்லை. இனி அடுத்த விடுமுறையில் செல்லும்போது சென்னையில் நேரில் ஏதாவது முயன்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த சமயத்தில்தான்-

‘அன்பு நண்பன் என்பதா, பால்ய நண்பன் என்று விளிப்பதா’ என்ற தயக்க அறிமுகத்துடன், இரவில் அந்த மின்மடல். சுருக்கமாய் மூன்று பத்திகளில், மளமளவென்று விடுபட்ட காலத்தின் சுருக்கம். இன்றும் நிறையப் படித்துக்கொண்டிருப்பவன் இணையத்தில் என் “அவ்வப்போது” நூல் தொகுப்பில் இடறி, அங்கிருந்து நூல் பிடித்து என்னைக் கண்டுபிடித்துவிட்டான். தொடர்பு விடுபட்ட நாளாய் அவனும் என்னை மறக்காமல், தேடல் இருந்திருக்கிறது. எனக்கு ஏற்பட்ட வியப்பில், என்ன ஆரம்பித்து எங்கிருந்து எழுதுவது என்று தெரியவில்லை. எழுதியும் மாளாது என்பதால், முதலில் தொலைபேசி எண்ணைத் தா என்று வாங்கிக் கொண்டேன். இரண்டு, மூன்று நாள்கள் மூச்சிழுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினேன்.

அன்பும் அன்னியோன்யமும் மாறாத அதே சசி. திருவிழாவில் தொலைத்த குழந்தையை மீட்ட மகிழ்வைப்போல் என்னைக் கண்டுபிடித்துவிட்ட செய்தியை அவன் மனைவியிடமும் அமெரிக்காவில் இருக்கும் மகனிடம் விடியோ சாட்டிலும் பேசி அவன் குதூகலித்ததைக் கேட்டு நெகிழ்ந்து விட்டேன்.

‘உன்னுடைய அனைத்து படைப்புக்களையும் இன்னும் கொஞ்ச கால அவகாசத்தில் படித்து விடுவேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகு கருத்திடுவேன்’ என்று கூறியிருக்கிறான். தாட்சண்யமின்றி வரப்போகிறது நிறை, குறை. பாஸ் மார்க் வாங்கித் தேறிவிடுவேன் என்று நினைக்கிறேன்.

-நூருத்தீன்

 


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner

Comments   

0 #3 Sulthan 2018-01-23 09:53
பாஸ் மார்க் என்ன?! பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்
Quote
0 #2 நூருத்தீன். 2018-01-23 05:03
நன்றி நாஞ்சிலய்யா.
Quote
0 #1 naanjilan 2018-01-23 04:16
very nice Noor
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker