21 - ஆழ்மன சக்தி

பனிப்பாறை (iceberg) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? டைட்டானிக் எனும் பெரியதொரு கப்பல் அதில் இடித்துக் கவிழ்ந்து போனதே? துருவ

மண்டலங்களுக்கு நெருக்கமாயுள்ள கடல்களில் மிதக்கும். ராட்சத மலை போன்ற இவை கடல் நீர் மட்டத்துக்கு மேல் சிறு பாறைபோல் மட்டுமே தென்படும். அப்படித் தென்படுவது ஒன்பதில் ஒரு பங்கு. மீதமுள்ள எட்டுப் பங்கு? அது நீருக்குக் கீழே சமர்த்துப் பிள்ளையாய் மிதந்து கொண்டிருக்கும்.

சரி, அதற்கு என்ன இப்போ?

உணர்வு உள்ள நம் அனைவருக்கும் உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. கண்ணால் யாரும் பார்த்ததில்லை எனினும் "ஆமாம், இருக்கிறது!" என்று பொத்தாம் பொதுவாய் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு எல்லோருக்கும் ஓர் அபிப்ராயம் உண்டு. மறுப்பாளர்கள் பண்டிகை நாளன்று தொலைக்காட்சியில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு "உள்ளுணர்வு உண்மையா பொய்யா?" என்பதைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த உள்ளுணர்வு என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, என்பதை விவரிக்கச் சொன்னால்... அது சிரமம். அதற்காகச் சாமான்யர்கள் நாம் வருத்தப்பட ஏதுமில்லை. உள்ளுணர்வு பற்றியும் அது நம்மை இயக்குவது பற்றியும் மனோவியலாளர்கள் மூளையைச் சொறிந்துக் கொண்டு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து சுருக்கமாய்க் காப்பி அடித்துக் கொண்டால் நமக்குப் போதும்.

"மனதின் ஆழ்மனம் சக்தி வாய்ந்தது. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அடைய வழிவகை செய்து விடுகிறது. அந்த ஆழ்மனதின் ஆதிக்கமும் பயனும் நம்மை முழுவதும் ஆலிங்கனம் செய்யக் கூடியது." இதுதான் சாராம்சம்!

உள்ளுணர்வெனும் அந்த ஆழ்மனச் சக்தியைத்தான் மேலே சொன்ன பனிப்பாறையை உவமையாகக் கூறி விவரிக்கிறார்கள். நாம் உணர்ந்த, அறிந்த நம் வெளியுணர்வு வெளியே தெரியும் பனிப்பாறை அளவே (tip of the iceberg). வலிமையான மீதம் நம்முள்ளே புதைந்திருக்கும் நம் உள்ளுணர்வு! பிரமிப்பாயில்லை?

வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் பனிப்பாறைக்கு எங்கு செல்வது; எப்படிப் புரிந்து கொள்வது? எனவே நாம் வேறு சில உதாரணங்களை ஊருக்குள் தேடுவோம்.

சைக்கிள் ஓட்டப் பழகுவதற்குப் பெரும் பிரயத்தனம் தேவைப்படும்; கவனித்திருப்பீர்கள். சைக்கிளின் கைப்பிடியை ஆட்டாமல் பிடிக்க வேண்டும் என்பார்கள்; முதுகைச் சாய்க்கக் கூடாது என்பார்கள்; பேலன்ஸ் தவறாமல் பெடலை மிதிக்க வேண்டும் என்பார்கள்... விழுந்து சில்லறை எண்ணாமல் சைக்கிள் ஓட்டக் கற்றவர்கள் மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும். அப்படிப் பலவற்றையும் மனமானது உள்வாங்கி, உடலானது செயல்படுத்தி, சைக்கிளானது நம்மைச் சுமந்து கொண்டு ஓடத் துவங்கியபின், கற்பதற்குச் சிந்தனை செலுத்திய அத்தனையும் பொருட்டின்றி மறைந்துபோய், சைக்கிள் ஓட்டனுமா நீங்கள் ஏறி உட்கார்ந்தால் போதும்; செயல்படுத்துவது உங்கள் உள்மனமே. உங்கள் வெளியுணர்வு பழகி உணர்ந்த அனைத்தும் உள்மனதில் ஆழப்பதிந்து, நீங்கள் சைக்கிளில் எவ்விதச் சிரமமுன்றிச் சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரையும் அதைத் தின்று கொண்டிருக்கும் மாட்டையும் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டியதுதான்.

பிரக்ஞையுடன் கூடிய நமது சிந்தனைகள், நமது உடலின் செயல்பாடுகள், மனோபாவம், செயல் திறன் ஆகியன எல்லாம் உள்ளுணர்வுக்குள் பலமாய் பதிக்கப்பட்டுவிடுகின்றன. இவை நம்முடைய உள்ளுணர்வை வடிவமைக்கின்றன. அது தன்னிச்சையாய் நம்மை இயக்குகிறது.

அதாவது?

படுவேகமாய்த் தட்டச்சு செய்யும் திறன் கொண்ட ஒருவரிடம் எந்த எழுத்து எங்கிருக்கிறது என்று கேட்டால் அவரால் உடனே சொல்ல முடியாது. கீ போர்டை நைஸாய் அவர் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கும். அல்லது மேசையில் தன் விரல்களால் தட்டச்சுவது போல் பாவனை செய்தே சொல்ல வேண்டியிருக்கும். வியப்பாயில்லை? இது உள்ளுணர்வின் மகிமை என்கிறார்கள்.

க்ளாட் பிரிஸ்டல் (Claude Bristol) தன்னுடைய The Magic of Believing என்ற புத்தகத்தில், "உள்ளுணர்வு நம் வலிமைக்கு மூலம்" என்கிறார்.

நாம் நடப்பது, பேசுவது, சட்டென சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நம்மை நோக்கி ஓடிவரும் எருமை மாட்டினிடமிருந்து சரேலென விலகுவது என இப்படிப் பலவற்றிற்கும் நம் மனதின் உள்ளே ஆழ்மனதில் கச்சிதமான ப்ரோக்ராம் ஒன்று அமர்ந்து கொண்டு நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.

தினசரி நமக்கு எழும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியன சிறிது சிறிதாக உள்மனதில் பதிவாகிப் பதிவாகி, நம்மைத் தன்னிச்சையாய் வலிமையுடன் இயக்கிக் கொண்டே இருக்கின்றன. எந்த அளவிற்கு? நம்முடைய வெற்றி தோல்விகளின் காரணிகளை நிர்ணயிக்கும் அளவிற்கு!

உங்களது உள்ளுணர்வு உண்மையென்று நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, உங்களது உள் மனம் தயாராகியுள்ளதற்கு ஏற்பவே நீங்கள் வாழ்க்கையின் இலக்கினை அடைவீர்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

அதனால்தான் "வெற்றி" என்பதைக் குறிக்கோளாய்க் கொண்டவருக்கு வெற்றியை எட்டுவதே உள்மனதின் எதிர்பார்ப்பாக மாறிப்போய், அது ஆழப் பதிந்துவிடுகிறது. அதற்கேற்ப அந்த வெற்றியின் இலக்கிற்கு அவரது ஆழ்மனம் அவரைச் செலுத்துகிறது. அதற்கு எதிர்மறையான எண்ணம் கொண்டவருக்கு மனதின் எதிர்பார்ப்பும் மாறிப்போகிறது.

ஆழ்மனம் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் அசாதரணமான ஆற்றல் கொண்டது. ஏதோ ஒரு பிரச்சனை; என்ன செய்வதென்று தெரியாமல் தூக்கமும் வராமல் புரண்டுக் கொண்டிருப்பீர்கள். ஒருநிலையில் அலுத்துப்போய், "சரி நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று தூங்கியும்போய் மறுநாள் எழும்போது திடீரென்று ஒரு வழி தோன்றியிருக்கும்.

இதையே, "ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலோ, ஏதோ ஒன்றைத் தேர்வு செய்வதிலோ குழப்பம் இருந்தால் அதை ஒத்திப்போடுங்கள்; இன்னம் உசிதம் இரவு தூங்கிவிட்டுக் காலையில் எழுந்து பாருங்கள்; சட்டெனத் தெளிவான ஒரு முடிவை நீங்கள் அடைய முடியும்," என்று நெதர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் சமீபத்தில் நிகழ்த்திய ஆராய்ச்சியின் மூலம் மேலும் உறுதிப்படுத்துகிறார்கள்.

இது எவ்விதம் நிகழ்கிறது? இதுதான் என்று அடித்துச் சொல்ல முடியாது. மூளை என்பது மிகவும் சிக்கலான, மனிதனால் முழுதும் பிரித்துப் போட்டு ஆராய முடியாத ஒரு சதை. அது இன்னும் மனிதனுக்குப் புதிரே! எனவே வெளியுணர்வற்ற ஆழ்மன சிந்தனா நிலையினால் நிகழ்கிறது என்று மட்டும் அறிந்து கொள்ளலாம்.

மனதில் உள்ளது தானே வார்த்தையில் வரும்! மிகவும் புழக்கத்தில் உள்ள வாசகம். இங்கு அந்த மனம் ஆழ்மனம்!

நமது எண்ணங்களே நமது ஆழ்மன உணர்வை நிர்ணயிக்கின்றன. ஆழ்மனமே நம்மை நடாத்துகிறது. எனவே நமது எண்ணம் தூய்மையாய் இருப்பது,

மனதிற்கு நல்லது!

உடம்பிற்கு நல்லது!

சூழ்ந்திருக்கும் சுற்றத்துக்கும் நட்புக்கும் நல்லது.

மனம் மகிழ, தொடருவோம்...

இந்நேரம்.காம்-ல் 05 நவம்பர் 2010 அன்று வெளியான கட்டுரை

<--முந்தையது--> <--அடுத்தது-->

<--ம. ம. முகப்பு-->

e-max.it: your social media marketing partner

Comments   

0 #1 பாலகுரு.கு 2014-08-20 04:13
உண்மையான செய்திகள் நன்றிகளும் வாழ்த்துக்களூம் தெரிவித்துக்கொள்கிறேன் நான் இந்த ஆழ்மனதின் ஆற்றல்களை என் சொந்த வாழ்க்கையில் பல பயன்களுடன் வாழ்த்துக்கொண்டியிருக்கின ்றேன் மேலும் இதில் பல்வேறு சுய ஆராய்ச்சியில் உள்ளேன்

முன்னேப்போல் நான் கடினமாக உழைப்பதேயில்லை என் மனதைக்கொண்டே வாழ்க்கையும் தொழிலிலும் மகிழ்ச்சியான வாழ்ந்துக்கொண்டுயிருக்கின ்றேன் ....................
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker