01. நபிகள் நாயகத்துக்கு வ'ஹீ யருளப்பெற்ற விவரம்

Written by நூருத்தீன்.

அத்யாயம் -1

நபிகள் திலகத்துக்கு வ'ஹீ யென்னும் வேதஞான வெளிப்பாடு அல்லா(ஹ்)வினால் எவ்வாறு அருளப்பட்ட தென்பது

  1. “இன்னம், வ'ஹீயை - (உதிப்பை)க் கொண்டே, அல்லது திரைக்குப் பின்னிருந்தே, அல்லது தூதரொருவரை அனுப்பியும், தனது அனுமதி கொண்டு தான் நாடியதை 'ஹீயறிவிப்பதுங் கொண்டே யன்றி, (வேறு முறையால்) அல்லா(ஹ்) அ(டிய)வனுடனே வார்த்தை யாடக்கூடு மென்பது எந்த மனிதனுக்கும் உரித்தாயில்லை.” (:குர்ஆன் 42:51).
  2. “இன்னம், நிச்சயமாகவே இஃது - (இந்தக் :குர்ஆன்) பிரத்தியக்ஷமான அரபு பாஷையில், சகல லோகங்களுக்குமுரிய ரக்ஷகன்பா லிருந்து அருளப்பட்டதா யிருக்கிறது; - நீவிர் அச்சமூட்டி யெச்சரிப்பவருள்ளே (ஒருவரா) யிருப்பான் வேண்டி, நம்பிக்கைக் குரிய ஆன்மா - (ஜிப்'ரீல் என்னும் அமரர்) அதனுடனே உமது ஹிருதயத்தின்மீது இறங்கி யிருக்கின்றார்” (:குர். 26:192-195).
  3. “இன்னம், அன்ன வண்ணமாயே உமக்கு நாம் ஓர் அரபு மொழிக் :குர்ஆனை அருளி யிருக்கின்றோம்” (:குர். 42:7).
  4. “பரிசுத்த ஆன்மா-(ஜிப்’ரீல்) இதனை உம்முடைய ரக்ஷகன்பா லிருந்து உண்மையைக் கொண்டே இறக்கிக் கொண்டு வந்துளார்” (:குர். 16:102).
  5. “எவனொருவன் ஜிப்’ரீலுக்குப் பகைவனா யிருக்கிறானோ [அவன் அல்லா(ஹ்)வுக்கே பகைவனா யிருக்கிறான்;] என்னெனின், நிச்சயமாக அன்னவர் அல்லா(ஹ்)வின் கட்டளை கொண்டே உம்முடைய ஹிருதயத்தின் மீது இதனை இறக்கி வைத்தார்” (:குர். 2:97).
  6. “நாம் இதனைப் பகுதி பகுதியாய் வெளிப்படுத்தி யருளி யிருக்கின்றோம்” (:குர். 17:106).

:குர்ஆன் ஷரீ‘பின் பிரகாரம் வ‘ஹீ யென்பது இப் பூவுலகில் எங்குங் காணப்படும் ஒரு சர்வ வியாபக சம்பவமாகவே யிருந்து வருகிறது. வானம், பூமிபோன்ற அசேதனப் பொருள்களுக்கும் வ‘ஹீ யனுப்பப்படுவ துண்டென்று அவ்வேதம் அறைகின்றது (41:11,12; 99:5); அப்பால் கீழ்த்தரப் பிராணிகட்கு வ‘ஹீ யறிவிக்கப்படும் விஷயம் விவரிக்கப்பட் டுள்ளது (16:68,69). ஆனால், மானிடருக்கு அறிவிக்கப்படும் வ‘ஹீ மேற்கூறிய வ‘ஹீகளி னின்று முற்றிலும் வேறாயதாயே யிருந்துவருகிற தென்பதில் கிஞ்சித்தும் சந்தேகமிருக்கக் காரணமில்லை; எனவே, இப்படிப்பட்ட வ‘ஹீயைக் குறித்தே யாம் இங்கு ஆராய்ச்சி செய்ய வேண்டியவர்களா யிருக்கிறோம். மேலே குறிக்கப் பட்டுள்ள தலையங்க ஆயாத்களுள் முதலாவது ஆயத் கூறுவதாவது: அல்லா(ஹ்) அடியவருடனே மூன்று விதத்திலேயே சம்பாஷணம் புரிகிறான்; அஃதாவது, அடியவனுக்கு ஆண்டவன் மூன்று வகையைக் கொண்டே வ‘ஹீயை யருள்கின்றான்:- (1) அடியானுடைய உள்ளத்தி னுள்ளே ஆண்டான் ஒரு விஷயத்தை உதிப்பின்வாயிலாய் உற்பத்தியாக்குகிறான்;- இங்கு வழங்கப்பட்டுள்ள வ‘ஹீ யென்பது தனது தாதுப் பொருளுக்குரிய “துரிதமாய், அல்லது சயிக்கினையாய் அறிவித்தல்” என்னும் தன்னுடைய ‘அசல்’ தாத்பர்யத்தையே சுட்டிக் காட்டுகின்றனது. (2) ஒரு திரைக்கு அப்பாலிருந்து பேசுவதேபோல் அல்லா(ஹ்) மறைவிலிருந்தே அறிவிக்கிறான்; இதில், ரூயா (கனா) என்பதும், இதன் உயரிய காட்சி யெனப்படும் கஷ்‘ப் (சூக்ஷ்ம தர்சனம்) என்பதும், இன்னம் உயரிய நிலை யெனப்படும் இல்ஹாம் (சுழுத்தி நிலையிலே - புலன்கள் செயலற்று உறங்கு நிலையிலே - குரல்கள் பேசக் கேட்கப்படுவது) என்பதும் அடங்கும். (3) வானவர் ஜிப்’ரீலென்பார் (அ’லை) வ‘ஹீயறிவிக்கப்படவேண் டியவர்பால் அல்லா(ஹ்)வின் தூதுச் செய்தியுடனே பட்டவர்த்தனமான வசனங்களைக் கொண்டு அறிவித்து வைக்குமாறு அனுப்பப்படுகின்றார். வ‘ஹீயின் வகைகளுள் ளெல்லாம் இம் மூன்றாவது வகையே மிகவு முயரிய வ‘ஹீயா யிருந்துவருகிறது; அல்லா(ஹ்)வின் இத் தூதுச்செய்தி முதல்வகையி லனுப்பப்படுவதே போல் உதிப்பா யில்லாமலும், இரண்டாம் வகைி லனுப்பப்படுவதேபோல் சொப்பனமாக, சுழுத்தியாக இல்லாமலும், வானவர் ஜிப்’ரீல் வாயிலாய் வெளிப்படையான வார்த்தைகளாகவே அருளப்பட்டு வருகிறது. இது நபிமார்களுக்கே யுரிய சொந்த வ‘ஹீயா யிருக்கிறது. :குர்ஆன்ஷரீ‘ப் அரபு பாஷைக்குரிய வசனங்களாகவே நபிகணாதருக்கு (சல்) அருளப்பட்டு வந்தது (தலையங்க ஆயாத் 2, 3); வானவர் ஜிப்’ரீலே அதன் ஆயாத்களைச் சுமந்து கொண்டு வந்தார்; அன்னவர் “நம்பிக்கைக் குரிய ஆன்மா” வென்றும், “பரிசுத்த ஆன்மா” வென்றும் அழைக்கப்படுகிறார் (தலை. ஆயாத் 2, 4, 5); அவ் வானவர் நபிகணாயகரின் ஹிருதயத்தினமீது விஜயம் செய்துகொண்டிருந்தார் (தலை. ஆயாத் 2, 5). இறுதி ஆயத், :குர்ஆன் ஷரீ‘ப் துண்டு துண்டாகவே (23 ஆண்டுகளில்) வெளியாக்கப்பட்டு வந்ததென்று கூறிக்கொண்டிருக்கிறது.

இவ் வத்யாயத்தில் வரையப்பட் டுள்ள ‘ஹதீ’:துகள், :குர்ஆன் ஷரீ‘பில் மிகவிளக்கமாய் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்களையே செவ்விதாய் ஊர்ஜிதப்படுத்திக்கொண் டிருக்கின்றன. நபிமார்களுக் குரிய துரியாதீத வ‘ஹீயைப் பெறுமுன்னே நம்முடைய நபிபெருமானார் (சல்அ’ம்) சொப்பனத்திலே தான் முதல்வித வ‘ஹீகளைப் பெற்றுவந்தார்கள். நபிகள் திலகம் முதன் முதலில் உயரிய துரியாதீத - மூலாதாரத்தில் ஆன்மா தங்கி அவிச்சை (ஆத்ம அஞ்ஞான) மாத்திரையை விஷயீகரிக்கும் ஐந்தாம் ஆன்ம நிலைக்குரிய - வ‘ஹீயைப் பெற்றுக்கொண்ட அனுபூதி வானவர் ஜிப்’ரீல் விஜயம் செய்வதைக் கொண்டே நிறைவேற லாயிற்று; அவர், :குர்ஆன் ஷரீ‘பின் 96-ஆவது அத். முதலைந்து ஆயாத்களிலுள்ள விஷயத்தை - அல்லா(ஹ்)வின் தூதுச் செய்தியை - அரபு மொழிகளால் அறிவித்துவைத்தார். அதனை நபிபெருமானார் (சல்) வர(க்):காவிடம் அறிவித்தார்கள்; அக்கணமே அப் பெரியார் அவர்கள்மீது உறுதிகொண்டு, மூஸா நபிக்கு அல்லா(ஹ்)வின் வ‘ஹீயைக் கொணர்ந்த அந்த வானவர் ஜிப்’ரீலே இப்பொழுதும் அல்லா(ஹ்)வின் தூதுச் செய்தியைக் கொண்டுவந்ததுளா ரென்றுங் கூறலுற்றார் (‘ஹதீ’.3). :குர்ஆன் ஷரீ‘பிற்குரிய உயரிய துரியாதீத வ‘ஹீ வானவர் ஜி்ப்’ரீல் வாயிலாய் அரபு வார்த்தைகளாகவே அருளப்பட்ட தென்றும் அறிவிக்கப் பட்டுள்ளது (‘ஹதீ’. 4, 5). அவ்வுயரிய வ‘ஹீ வந்திறங்குங்கால், நபிகள்பிரான் கடும் பிரயாசைக் குள்ளானார்க ளென்றும் நாம் அறிந்து கொள்கிறோம்: நளிர் மிகுந்துள்ள நாட்களிலும் வ‘ஹீ வருங்கால், அப்பெருமானார் வேர்த்துப்போய் நனைந்துவிடுவார்கள்; சரீரம் கனத்தும் போய்விடும்; இன்னம், அன்னவர்கள்மீது ஒரு வெளிப்படையான மாறுதலும் வந்து தோன்றலாகும் (‘ஹதீ’. 5-8). இதனால் விளக்கமாவது யாதெனின்: அல்லா(ஹ்)வின் இத்தகைய ஆன்மவுலக அனுபூதியை அடையப் பெறுதற்காக அப் பெருமானார் (சல்) இந்த ஸாக்ர (விழிப்பிற்குரிய) நிலையைவிட்டு, அப்பால் தொலைவிலுள்ள துரியாதீத நிலைமைக்கு மாற்றப்பட்டு விடுவது வழக்கமென நாம் நன்கறிந்துகொள்ள வேண்டியவர்களா யிருக்கிறோம்; ஆகவே, அவர்கள் இப் பௌதிகவுலக சம்பந்தத்தை அடியுடன் அறுத்துவிட்டு, அவ் வான்மவுலகத் தொடர்புடையவர்களாய் உயர்த்தப்பட்டு விடுவது எத்துணை உண்மையுள்ள சம்பவமாய்க் காணப்பட்ட தெனின், அஃது அவர்களுடைய புற வுறுப்புக்களிலும் புறத் தோற்றத்திலும் முற்றிலும் மெய்யான மாற்ற மொன்றனையே கொண்டுவந்து சேர்ப்பித்ததென்க.

 


 

 

 

e-max.it: your social media marketing partner

Add comment


Lock full review www.8betting.co.uk 888 Bookmaker