01. வஹீ அருளப்பெற்ற விவரம் - ஹதீஸ் 1

Written by பா. தாவூத்ஷா.

ஹதீஸ் 1

1உமருப்னுல் கத்தாப் (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் திருத்தூதர் (அல்லாஹ்வின் ஆசியும் சாந்தியும் அன்னவர்கள்மீது அமையக் கடவன) (இவ்வாறு) கூறியதை யான் கேட்டேன்:

“செய்கைகளெல்லாம் நோக்கத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படும்;2 மேலும், மானிடன் தான் கோருகிறதையே பெற்றுக் கொள்ளுகிறான்; ஆகையால், அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் எவனொருவன் தனது வீட்டைத் துறந்து வெளியேறுகிறானோ,3 அவனது வெளியேற்றம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பொருத்தமாயிருக்கிறது; இன்னம், எவனொருவன் தான் அடைய விரும்பும் உலக சம்பந்தமான இலாபத்தின் நிமித்தமாக, அல்லது தான் விவாகம் செய்துகொள்ள விழையும் ஸ்திரீயின் நிமித்தமாகத் தனது வீட்டைத் துறந்து வெளியேறுகிறானோ, அவனது வெளியேற்றம், அன்னவன் எதற்காக வெளியேறுகிறானோ, அதற்காக விசாரிக்கப்படும்.” – (புகாரீ 83:23; 1:1)


1. ‘இமாம் புகாரீ இந்த ஹதீதைக் கொண்டே தாங்கள் சேகரித்துள்ள ஜாமிஃ என்னும் மகா கிரந்தத்தைத் துவக்கியுள்ளார்கள்; “வஹீயின் துவக்கம்” என்னும் அத்தியாயத்தின் ஆரம்ப ஹதீதாய் இருக்கிறது இது. ஆனால், இவ் வத்யாயத்தில் விளக்கப்படும் விஷயத்திற்கு இந்த ஹதீது பொருத்தமாயில்லை என்பது வெள்ளிடை மலை. எனினும், உண்மையிலே இப் பெரியார் சேகரித்துள்ள கிரந்தத்திற்கே இஃதொரு முகவுரையே போலக் காணப்படா நின்றது; மெய்யாகவே இஃதொரு சரியான முன்னுரையாகத்தான் அமைந்து கிடக்கிறது என்னலாம்: இந்தக் கிரந்த கர்த்தாவின் நோக்கத்துக்குரிய உள்ளப் பரிசுத்தத்தை இது நன்கு விளக்கிக் காண்பிப்பதோடு, நபிகள் நாயகத்தின் (ஸல்) சொற்களைக் கொண்டும் செயல்களைக் கொண்டும் அவற்றினைப் படிப்பவன் எத்தகைய உன்னத ஒழுக்கக்குன்றுக்கு உயர்த்தப்பட வேண்டுமென விழைகின்றானோ, அத்தகைய உன்னதத்துக்கு உயர்த்தப்படப் போவது அவனுக்கு அவற்றின்பாலுள்ள உண்மையான உள்ளப் பரிசுத்தத்தையே பெரிதும் பொறுத்து நிற்கிறதென்னும் மெய்ம்மையினையும் நன்கெடுத்து நிரூபிக்கின்றது.

2. ”செய்கைகள்” என்பன, நபிபெருமான் எவற்றின்பால் மானிடர்களை அழைக்கின்றார்களோ, அப்படிப்பட்ட உயரிய நல்ல ஒழுக்கங்களையே சுட்டிக்காட்டும். எத்தகைய சத்தொழுக்கமும், அதற்குரிய அந்தரங்க நோக்கம் உள்ளப் பரிசுத்தமுள்ளதாய் இல்லாதிருப்பின், ஒரு சிறிதும் பயனளிக்க மாட்டாதென்பது வெளிப்படை. எனவே, முஸ்லிம்கள் (ஒழுக்கத்தில்) முன்னேறுதற்கு முக்கிய அம்சமாய் இருந்து வருவது உண்மையான உள்ளப் பரிசுத்தமேயென்று நாம் இங்கு நன்கு தெரிந்துகொள்ளுகிறோம். 

3. அரபு மூலத்தில் ஹிஜ்ரத் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது; இதன் பொருள், “ஊரை, அல்லது உறவினரைத் துறந்து ‘வெளியேறல்’, அல்லது ‘ஓடுதல்’, அல்லது இழிய இச்சைகளைத் ‘திரஸ்கரித்தல்’ ” என்பதாயிருக்கிறது; இழிந்த குணம், தீய மனப்பான்மை ஆகியவற்றைத் துறத்தலும் இந்த ஹிஜ்ரத்திலே சாரும். எனினும், இஸ்லாத்தின் சரித்திரத்திலே நபி பெருமானார் (ஸல்) மக்காவைத் துறந்து மதீனா சென்று சேர்ந்ததே ஹிஜ்ரத்தென்று பிரபலமாய்ச் சொல்லப்பட்டு வருகிறது; முஸ்லிம் ஆண்டுக் கணக்கும் இச் சம்பவத்தினின்றே ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அவர்கள் அந்நகரிலே - (மக்காவிலே) மத சுதந்தரமும் மனச்சாக்ஷி சுதந்தரமும் பெற்றுக்கொள்ள முடியாமற் போய்விட்டபடியால், அன்னவர்கள் மக்காவிலிருந்து தங்கள் வீடு வாசல்களையும், உற்றார் பெற்றார்களையும் அடியுடனே துறந்து வெறியேற வேண்டியவர்களாய் விட்டார்கள்; அம் முஸ்லிம்கள் பல தெய்வ விக்ரக வணக்கத்தை விட்டு, ஏகேசுவரக் கொள்கையாம் இஸ்லாத்தின் பக்கல் சார்ந்து நின்றமையால், மக்காவிலிருந்த மறமாக்களாய :குறைஷியர் அவ்வேழை முஸ்லிம்களையெல்லாம் சொல்லொணா விதத்தாலெல்லாம் துன்புறுத்தி வரலாயினார்கள். எனவே, ஹிஜ்ரத் என்பது, மனிதன் தனது மனச்சாக்ஷியின் காரணத்தால் இவ்வுலக சம்பந்தமாயுள்ள தொடர்புகளையும் சுகபோகங்களையும் எல்லாம் அடியுடன் திரஸ்கரித்து, அதனால் விளையும் எல்லாவிதத் துன்பங்களையும் பரம சங்கடங்களையும் திருப்தியுடனே சகித்துக்கொண்டிருப்பதைக் குறிக்கத் தலைப்பட்டுவிட்டது. 


<--முந்தையது--> <--அடுத்தது-->

<--முகப்பு-->

e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker