முகவுரை

Written by பா. தாவூத்ஷா.

செந்தமிழ் நாட்டுச் சீரிய செல்வர்காள்! இத் தமிழ்நாட்டின் கண்ணுள்ள எல்லா மஸ்ஜித்களிலும் வெள்ளிகள் தோறும் நடைபெற்றுவரும் “ஜுமுஆ குத்பா” என்னும் நஸீஹத்களையெல்லாம் நமது தாய்மொழியாம் இனிய தமிழ் மொழியிலேயே உபதேசித்து வரவேண்டுமென்று நாம்

சென்ற பல ஆண்டுகளாக எழுதியும் இயம்பியும் வந்திருக்கும் பிரசாரத்தின் பயனாய் இதுசமயம் இத்தென்னாடு முழுவதும் ஒருவகைப் புத்துணர்ச்சி பூத்திருக்கிற தென்பதைத் தாங்களே நேரில் கண்டுவருகின்றீர்கள். இவ்வாறு தமிழிலே குத்பா ஓதுவதற்கு வேண்டிய ஆதார ஆதேயங்களை யெல்லாம் அடிக்கடி நாம் நும் “தாருல் இஸ்லாத்”தின் வாயிலாய் வெளியிட்டு வந்திருப்பதையும் தாங்கள் படித்திருக்கின்றீர்கள். ஆனால், தமிழ் நாட்டில் இதுகாலை (மின்பர் மீதேறி) உபதேசிப்பதற்குப் பொருத்தமான முறையில் ஒரு நூதன குத்பாக் கித்தாபை நாமே வெளியிட வேண்டுமென்று எம்மைப் பற்பல நண்பர்களும் அடிக்கடி நேரில் கண்டும் எழுத்து மூலமாக எழுதியும் கேட்டுக் கொண்டதன் பயனாகவே, “குத்பா பிரசங்கம்” என்னும் பெயருடைய இச் சிறு கிரந்தத்தை ஆறேழு மாதப் பிரயாசைக்குப் பின்னே ஒருவாறு உருப்படுத்தி ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்தியுள்ளோம்.

இதற்கு முன்னே இத்தென்னாட்டில் அரபு-தமிழிலும் தமிழிலும் சில குத்பாக் கித்தாபுகள் வெளிவந்திருந்தும் அவற்றைப் பார்க்கினும் மிக்க நல்ல முறையிலும் நவீன மாதிரியிலும் ஒரு குத்பா பிரசங்க கிரந்தம் எழுத வேண்டுமென்று யாம் கோரிக்கொண்டதன் மேல் எம்முடைய மௌலானா மௌலவீ பாஜில் ஹாபிஸ் ஏ. என். முஹம்மத் யூஸுப் சாஹிப் (பாக்கவீ) அவர்கள் தங்கள் சொந்த ஆராய்ச்சி வழியைப் பின்பற்றிப் பல கிரந்தங்களையும் ரிஸாலாக்களையும் ஆழ்ந்த நோக்கி, இதிலுள்ள 54 குத்பா பிரசங்கங்களையும் ஒருவாறு தையார் செய்து கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் யாமே முழுதும் தமிழ்நடை மேற்பார்வை செய்து, இப்பொழுது இந்த உருவத்திலே எமது காரியாலயத்திலிருந்து ஒருவாறு இதை முதன் முதலாக வெளியிட்டிருக்கின்றோம்.

இத்தகைய நவீன முறையில் எழுதப்பட்ட குத்பாக் கித்தாப்களுள் இதுவே முதல் முயற்சியாதலின், இதில் இன்னம் சீர்திருத்தம் செய்யவேண்டிய பற்பல குறைகள் காணப்படலாம் என்பதை யாமறிவோம். இதற்கு வேண்டிய உதவிகளை நண்பர்கள் செய்ய முன்வருவார்களாயின், அடுத்த பதிப்பில் அவற்றையும் அவற்றிற்குரிய நண்பர்களின் நாமதேயங்களுடன் சேர்த்துப் பிரசுரிக்கக் கடவோம். இதுபொழுது இந்தப் புத்தகத்தில் காணப்படும் ஒவ்வொரு குத்பாவின் இறுதியிலும் “அஊதும்”, ஒரு குர்ஆன் ஆயத்தும் ஓதி முடித்துக்கொண்டு பிறகே, “பாரக் கல்லாஹு…” என்பதை ஓதி முடித்துக் கொள்வது சிலாக்கியமாய் இருக்குமென்று யாம் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம். இன்னம், ஒவ்வொரு குத்பாவின் ஆரம்பத்திலும் ஹம்து, சலவாத்துக்குப் பின்னே பிரியமுள்ளவர்கள் அரபு வஸிய்யத்தையும் சேர்த்து ஓதிக்கொண்டு, பிறகு தமிழை ஆரம்பிக்கலாம்.

இந்நூலில் மாதம் ஒன்றுக்கு நான்கு வீதம் 12 மாதங்களுக்கும் 48 குத்பாக்களைச் சித்தஞ் செய்திருக்கின்றோம். ஆனால், வருஷம் ஒன்றுக்கு 52 வாரங்கள் வருவதினால், இறுதியில் பொது குத்பாவாக 4 குத்பாக்களைச் சேர்த்திருக்கிறோம். ஆதலின், எந்த மாதத்திலேனம் ஐந்து வெள்ளிக்கிழமை வருமாயின், அந்த 5-ஆவது வெள்ளியன்று அந்தப் பொது குத்பாவிலிருந்து ஒன்றை எடுத்து ஓதிக்கொள்வீர்களாக. இரண்டு பெரு நாட்களுக்காகவும் இரண்டு குத்பாக்கள் தனித் தனியே இறுதியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டுக்கும் முன்னாக, ஜுமுஆ குத்பா 52-க்கும் இறுதியில் ஜுமுஆவிலும் ஈத்களிலும் ஓதவேண்டிய இரண்டாவது குத்பா அரபில் அச்சிடப்பட்டிருப்பதைக் கவனித்து ஓதிக்கொள்வீர்களாக. ஜுமுஆவுக்கு ஓதும் இந்த இரண்டாவது குத்பாவையே ஈதிலும் இரண்டாவது குத்பாவாக ஓதும்போது, ஆரம்பத்திலும் இடையிடையேயும் “அல்லாஹு அக்பரு! அல்லாஹு அக்பரு!....” என்னும் தக்பீர்களை அடிக்கடி சேர்த்து ஓதிக்கொள்வீர்களாக.

நண்பர்காள்! ஒவ்வொரு ஜுமுஅவிலும் மஸ்ஜிதில் கத்தீப் ஒருவர் ஓதித்தான் மற்றவர்கள் இதிலுள்ள குத்பாக்களைக் கேட்டு இன்புற வேண்டுமென்பது ஒன்றும் நியதியில்லை. தமிழ்நாட்டு முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இதனை வாங்கிச் சொந்தத்திலே படித்துத் தாங்கள்மட்டும் இன்புறுவதல்லாமல், தங்கள் மனைவி, மக்கள், சகோதர சகோதரிகள் ஆகிய எல்லாருமே பயன்பெறுமாறு இதிலுள்ள இதோபதேசங்களை வாசித்துக் காண்பிப்பீர்களாக. இதில் அழகிய 54 அரிய உபன்னியாசங்கள் அடங்கியிருத்தலினால், இவற்றைச் சாதாரணமாய்ப் படித்துவந்த போதினும் நந் தாய்நாட்டுச் சகோதர சகோதரிகளனைவரும் நல்ல முற்போக்கு உணர்ச்சிக்குரிய பெரும் பயனை அடைவார்களென்பது திண்ணம்.

இதுவரை ஒன்றும் ஒழுங்கான முறையில் இத் தமிழ்நாட்டின்கண் நவீன நடையில் எழுதப்பெறாததால், எமக்குத் தெரிந்தவரை ஏதோ சிலவற்றை இந் நூலின்கண் நஸீஹத்தாக எழுதியிருக்கின்றோம். இவற்றையே நீங்கள் எக்காலத்தும் கடைப்பிடித்தொழுக வேண்டுமென்பது எம்முடைய நோக்கமன்று. இதையொரு முன்மாதிரி நூலாகவே வெளியிட்டிருக்கிறோமல்லாது, வேறொன்றுமில்லை. எனவே, இம்மாதிரியான முறையில் கால தேச வர்த்தமானங்களுக்கும் மஸ்ஜிதில் கூடியிருக்கும் மகா ஜனங்களின் நோக்கங்களுக்கும் ஏற்றவாறான முறையிலே அவரவரும் தமது தாய் பாஷையாகிய தமிழிலே, ஆதியில் நபிகள் பெருமானும் (ஸல்) அவர்களைப் பின்பற்றியொழுகிய குலபாயெ ராஷிதீன்களும் மற்றுமுள்ள ஸலஃப் ஸாலிஹீன்களும் தங்கள் தாய் பாஷையான அரபு பாஷையிலே பிரசங்கம் புரிந்து வந்ததேபோல் – (அக்காலத்தவர்கள் எழுதிப் படித்துக் கேட்போர்களை உறங்கச் செய்வது வழக்கமில்லை) சுயமே ஜுமுஆப் பிரசங்கம் செய்யக் கற்றுக்கொள்ளக் கடவார்களாக. அதற்கு இஃதொரு வழிகாட்டியாகவே இருக்கின்றதல்லது இதையே எக்காலத்திலும் குருட்டுப் பாடமாக ஓதிவர வேண்டுமென்பது எமது நோக்கமன்று. வஸ்ஸலாம்.

இங்ஙனம்

இஸ்லாத்தின் ஊழியன்,

பா. தாவூத்ஷா

தா. இ. ஆபீஸ்,

சென்னை.

22-1-1930


 

மூன்றாம் பதிப்பின் முகவுரை

“ஒவ்வொரு குத்பாவின் இறுதியிலும் பொருத்தமான குர்ஆன் ஆயத்தை ஓதி முடிக்கும்படி உபதேசிக்கிறீர்களே; தாங்களே அப்படிப்பட்ட பொருத்தமான ஆயாத்களைப் பொறுக்கி எடுத்து அச்சிட்டு விட்டால் சௌகர்யமாய்ப் போய்விடுமல்லவா?” என்று அடிக்கடி எம்மைப் பார்த்துக் கேட்ட தோழர்களின் துயரைப் போக்கவும் சென்ற இரு பதிப்புக்களையும்விட இந்த மூன்றாம் பதிப்பு மிகவும் சிறந்ததாகக் காணப்பட வேண்டுமென்று நாம் விரும்பியதற்கிணங்கவும் ஆயாத்களுடன் கூடிய இந்தப் புதிய பதிப்பை உங்களிடையே சமர்ப்பிக்கின்றோம். பல மாதங்களாகப் பிரயாசையெடுத்து, உரிய ஆயாத்கள் பொறுக்கியெடுக்கப்பட்டு அவற்றுக்கான பிளாக்குகள் தையாரிக்கப்பட்டதுடன், பழைய ஹம்து சலவாத்து பிளாக்குகள் தேய்ந்துவிட்டபடியால் அவற்றையும் புதிதாகச் செய்து இந்தப் பதிப்பை வெளியிட்டிருக்கிறோம்.

இதிலுள்ள குத்பாக்கள் சென்ற 24 ஆண்டுகட்குமுன் தையாரிக்கப்பட்டன வாகையால், இந்தப் புதிய நவீன காலத்துக்கு ஏற்றவண்ணம் ஏறக்குறைய எல்லா குத்பாக்களையுமே முழுக்க முழக்கத் திருத்த வேண்டியதாயிற்று. சமீபகாலமாக நம் தமிழ் முஸ்லிம் சகோதரர்களிடையே இந் நூல் விசேஷ சலிகையைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தமையாலேயே எமக்கும் புது ஊக்கம் பிறந்து இந்த மூன்றாம் பதிப்பை மிகவும் திருப்திகரமாய்த் தையாரித்து வெளியிட்டிருக்கிறோம்.

ஒவ்வொரு குத்பாவின் முடிவிலும் குர்ஆன் ஆயாத்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன வல்லவா? மின்பரில் ஏறி இந்த குத்பா கித்தாபை வாசிக்கும் இமாம்கள் மறந்துவிடாமல், அந்த ஆயத் ஆரம்பிக்கு முன்னே “அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்” என்று ஓதிவிட்டு, அதன் பின்னரே ஆயத்தை ஓத வேண்டும். இன்னம் பிரயோஜனகரமான மாறுதல்கள் ஏதும் இதில் சேர்க்கப்டலாமென்று கருதும் அன்பர்கள் எமக்கு எழுதினால் கவனிக்கிறோம்.

இங்ஙனம்
பா. தாவூத்ஷா
சென்னை-5

5-6-1953.

 <<குத்பா பிரசங்கம் முகப்பு>>     <<அடுத்தது>>

e-max.it: your social media marketing partner

Comments   

0 #2 நூருத்தீன். 2016-08-26 05:58
Br. Haroon Rasheed,
Thank you for your feedback.
Quote
0 #1 haroon rasheed 2016-08-26 05:46
Masha Allah Great service to Tamil Muslims 80 years ago. May Allah accept his deeds. Aameen.
Quote

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker