வியபிசாரமன்று; ஆனால், “நியோகம்!” - 10

Written by பா. தாவூத்ஷா.

ஸ்திரீகளும் புருஷர்களும் தம்முடைய சுரோணிதத்தையும் சுக்கிலத்தையும் விலைமதிக்கக் கூடாதவை என்று கருதவேண்டும். பிறகு இந்த விலையுயர்ந்த பதார்த்தத்தை அன்னிய ஸ்திரீயிடமேனும் வியபிசாரியினிடமேனும் கூடி நாசம் செய்யும் புருஷர்களும்

துஷ்ட ஆடவருடன் கூடி அவ்வாறு நாசஞ்செய்கின்ற ஸ்திரீகளும் மதியீனர்களென்றே கருதப்பட வேண்டும். ஏனெனின், வியவசாயியும் தோட்டக்காரனும் ஒன்றுமறியாத மூடர்களாயிருந்தும் தங்கள் நிலங்களிலும் தோட்டங்களிலும் வெற்றிடங்களின் விதைகளை விதைத்துப் பயிர்செய்ய மாட்டார். சாதாரண விதையை ஒன்றுமறியாத மூர்க்கர் இவ்வாறு செய்யும்போது உத்தமோத்தமமான மனித பீஜத்தைத் தானனுபவிக்க முடியாத தீயநிலங்களில் இழந்து விடுகிறவன் முழுமூடனேயாவான். ஏனெனின், அந்த வித்தின் பழம் இவனுக்குக் கிடைப்பதில்லை,” என்று எடுத்தோதுகிறார்.

முஸ்லிம்களாகிய நாங்களும் இதையேதான் வற்புறுத்திக் கூறுகின்றோம். ஆனால், ஆரியவேதம் நான்கிலும் கரைகடந்த ஞானத்தை யுடையவரென்று கூறிக்கொள்ளும் தயானந்தரே பிராம்மண வித்தை க்ஷத்ரியரிடமும் க்ஷத்ரிய வித்தை வைசியரிடமும் வைசிய வித்தைச் சூத்திரரிடமும் தெளிக்கும்படியான உத்தரவை உண்டுபண்ணியிருக்கிறார்; ஜாதி வித்தியாசமில்லாமல் எல்லாம் கலப்புப் பயிராய் முளைக்கும்படி செய்துவிட்டார். ஆனால், வியவசாயிகளையும் தோட்டக்காரர்களையும் மூடர்களென்றும் மூர்க்கர்களென்றும் குறிப்பிட்டுள்ளார், தயானந்த் மஹாராஜ்!

அறியாதவர்களான வியவிசாயிகளுக்கும் தோட்டக்காரர்களுக்கும் தங்கள் ஈசுவரனும் தாங்களும் சேர்ந்து நல்லவிதமான வியவசாய நீதிமுறைகளைக் கற்பித்திருக்கிறீர்கள்; உங்கள் உபதேசத்தின்படியே அவர்களும் இன்றளவும் நடந்துவந்து உயர்ந்த அந்தஸ்தை யடைந்துவிட்டார்கள். ஆனால், நியோகத்தினால் வெவ்வேறு ஜாதியினர் வெவ்வேறு வம்சத்தில் வெவ்வேறு நபர்களிடம் ஆண் பெண் வித்துக்களைப் பரஸ்பரம் பரிவர்த்தனை செய்வதனாலுண்டாகும் புத்திர பாக்கியங்களையும், அவர்களுக்குக் காரணபூதமாய் விளங்கிய நியோக புருஷ மனைவியரையும் என்னென்று கூறுவீர்கள்? உங்களால் மூர்க்கர்களென்றும் மூடர்களென்றும் வர்ணிக்கப்படும் தோட்டக்காரர்களுக்கும் வியவசாயிகளுக்கும், உங்கள் ஆரியநியோகத்துள் ஆழ்ந்துகிடக்கும் மேற்குல மக்களுக்கும் இடையில் அங்க அவயவத்தில் ஒன்றும் வேறுபாடு காணப்படவில்லையே; ஆனால், ஒன்றுதான் அவர்களுக்கும் உங்களுக்குமுள்ள வித்தியாசம்! நீங்கள் பகிரங்கமாக நியோகம் செய்கின்றீர்கள்; அவர்கள் அந்த நியோகத்தை வெறுத்து கௌரவமுள்ள ஸ்திரீபுருஷர்களாக வாழ்ந்துவருகிறார்கள்.

மனைவி கர்ப்பவதியாய் இருக்கும்பொழுது ஒரு வருஷம்வரை புருஷன் சம்போத்தை நிறுத்தச் சக்தியற்றவனாயிருந்தால் அப்பொழுது வேறொரு ஸ்திரீயுடன் நியோகம் செய்து குழந்தைகளைப் பெறலாம். ஆனால்… வியபிசாரத்தனம் செய்யக்கூடாது,” என்றும் எழுதுகிறார்.

முன்னே சொன்னது வியபிசாரமல்லாது வேறு என்னவாயிருக்கிறது தயானந்த் மஹாராஜ்? மோகத் தீயின் வேகத்தை அடக்கமுடியாமல் அன்னிய ஸ்திரீகளிடம் சேர்ந்து முகத்தில் கரியைப் பூசிக்கொள்வது வியபிசாரம் அன்றென்று கூறப்பட்டுவிடுமாயின், பிறகு வியபிசாரத்தனமென்பதுதான் என்ன? அதன் அந்தரங்கம்தான் சுவாமிஜீயின் கருத்தின் பிரகாரம் இன்னதென்று எமக்குப் புலப்படவில்லையே. இதுகாறும் ஆரியரல்லாத மற்ற நண்பர்களெல்லாம் தம்மனைவியைத் தவிர்த்து அன்னிய ஸ்திரீயின் மூஞ்சியில் விழிப்பதும் வியபிசாரமென்று கேள்விப்பட்டிருந்தார்கள்; ஆனால். ஆரியரும் அன்னவரின் வேதபாஷ்யங்களும் வெளியானது முதல் ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் பதினொரு பதினொரு ஸ்திரீ புருஷர்களிடம் சிற்றின்பம் துய்த்தபோதிலும், “அதன் பெயர் வியபிசாரமன்று; ஆனால், நியோகம் என்று கூற வேண்டும்,” என்று சொல்லப்படுகின்ற லைஸென்ஸை வைத்துக்கொண்டு, அவரவரும் ஒழுக்கநிலை தடுமாறி மனம்போன போக்கெல்லாம் போலாமென்று அறிந்துகொண்டிருப்பார்கள். எனவே, இதன்பெயர் வியபிசாரமன்றாம்; ஆனால், நியோகமென்று சொல்லவேண்டுமாம்!

ஏ! சர்வலோக சரண்யனாகிய, பக்தவத்ஸலனும் பரந்தாமனும் அடியார்க் கெளியவனுமாய், எங்களுக்கும் அந்த ஆரியர்களுக்கும் மற்றுமுள்ள சிருஷ்டிகளுக்கும் பொதுவாய் விளங்கிவரும் ஆண்டவனே! எங்களை வியபிசாரத்தினின்றும் நியோகமென்னும் மூடுமந்திரத்தால் அழைக்கப்படும் அந்தப் “பலபட்டறை” ஒழுக்கக் கேட்டினின்றும் அதிகம் காப்பாற்றி உன்னுடைய பாதுகாப்புக்குள்ளே வைத்தருள்வாயாக.

மேற்கூறிய விதமான வழிக்கேடான தவறுதல்களை இழைக்கும்படியும் துர்ச்செய்கைகளைத் தூண்டும்படியும் வியபிசாரத்தை நியோகமென்னும் போர்வைக்குள் அனுமதிக்கும்படியும் வியாக்கியானம செய்யப்படுகின்ற வேதங்களைவிட்டும், அவ் வேதங்களே ஈசுவர வாக்கென்று பிரமைகொண்ட மனத்துடன் கொண்டாடிவரும் மனிதர்களைவிட்டும் எங்களைத் தடுத்தாட்கொண்டு காத்தருள்வாயாக.

“சத்தியார்த்த பிரகாசத்தில்” கற்பிக்கப்படுவதே போன்ற படிப்பினைகளினாலேயே எப்பொழுதும் இந்த இந்துஸ்தானத்தில் பஞ்சங்களும் படுகொலைகளும் பிளேகுகளும் காலராக்களும் வைசூரிகளும் மற்றும்பல கொள்ளைநோய்களும் சண்டைகளும் சச்சரவுகளும் சாந்தியின்மையும் அமைதிக்குறைவும் வேரூன்றிக் கிடக்கின்றன. லேக்ராம், சிரத்தானந்தர் போன்ற ஆரிய சமாஜத் தலைவர்களும் மிகப் பயங்கரமாய்க் கொல்லப்படுவதற்கும் இந்த தயானந்தரே மூலகாரணமாய் விளங்குகின்றார். ஆனால், எல்லாம் வல்ல இறைவன் நமக்கெல்லோருக்கும் சுகசாந்தியையும் சுத்தந்தமான ஒழுக்கத்தையும் கொடுத்தருள்வானாக. ஆமீன்! ததாஸ்து!

-பா. தாவூத்ஷா

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker