தயானந்தரின் சொல்லும் செய்கையும் - 2

Written by பா. தாவூத்ஷா.

(6) சொல்:- (ச. பி. 4-ஆவது அத். ரிஷிதர்ப்பணம்) கற்றுணர்ந்தவர்களையே தேவர்களென்றும், அவர்களுக்குச் சேவை செய்வதையே தர்ப்பணமென்றும் கூறுகின்றார்கள். பிரம்மாவுக்குச் சமமான தங்கள் குழந்தைகளும், சீடர்களும், சேவகர்களுமே அவர்களுடன் கருதப்படுகிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் சேவை செய்வதற்கே சிராத்தமென்றும் ரிஷிதர்ப்பணமென்றும் பெயர். (எனவே, சுவாமிஜீ இதன் மூலமாய்த் தமக்கு மரியாதையையும், சேவை பெறுவதையுமே நாடினாரென்று தெரிந்து கொள்ளுகிறோம். இல்லையேல் பார்ப்பீர்களாக:)

(6) செயல்:- (ஜீவிய சரித்திரம், பக்கம் 138, வரி 8) சுவாமிஜீ தமது ஆரம்பக் கல்வியைத் தந்தையினிடமே பெற்றார்; அவர் ஒரு சாமவேதி. அவர் பிராம்மணராய் இருந்ததுடனே சிவபக்தி உடையவராய் இருந்து வந்தார். ஆதலின், ஆதியில் அவர் தமது குமாரனுக்குச் சிவமதத்தையும் பிறகு விஷ்ணு மதத்தையும் கற்றுக்கொடுத்தார். (இதனால் சுவாமிஜீயின்மீது, பெரியோர் என்ற முறையில் தகப்பனார் கற்றுணர்ந்தவராயும் ரிஷியாயும் இருந்ததல்லாமல் பிதுர் தர்ப்பணம், தேவதர்ப்பனம், ரிஷிதர்ப்பணங்களுக்கெல்லாம் உரிமை பெற்றவராயும் இருந்து வந்தார். ஆனால், சுவாமிஜீ ஒரு கடனையாவது முடித்தரில்லை; இவ்விதமான கடன்களைத் தீர்க்காதவருடைய ஜன்மம் வீணான ஜன்மமேயாம். இப்படிப்பட்ட மனிதனை வேதத்துக்குத் தீங்கு செய்கிற நாஸ்திகனென்று கூறுகின்றனர்! வாக்குக்கு மாற்றம் செய்கிறவனும் இவனே என்று கூறுகின்றனர். கபீர்.)

(7) சொல்:- எந்த வழியைத் தம்முடைய தகப்பனாரும், முன்னோர்களும் பின்பற்றி வந்தார்களோ, அதே வழியைப் பிள்ளைகளும் பின்பற்ற வேண்டும். ஆனால், நல்ல வழியாய் இருந்தால் மாத்திரம் அதைக் கைக்கொள்ள வேண்டுமேயல்லாது, கெட்ட வழியைக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் தர்மாத்மாக்களான புருஷர்களுடைய வழியில் செல்வதனால் ஒருபொழுதும் துக்கம் ஏற்படாது. நீங்கள் இதை நம்புகிறீர்களா? இல்லையா?

(7) செயல்:- ஆனால், சுவாமிஜீயோ தம்முடைய தகப்பனார், முன்னோர்களின் பரம்பரைத் தொழிலாகிய ஜமீன்தாரித்தனத்தையும், வீட்டிலிருந்தே கல்வி கற்றுக்கொண்டிருப்பதையும், ஜமீன்தாரின் யாதொரு வேலையையும் (சமஸ்தானத் தஹ்சில்தாரின் எந்த வேலையையும்) செய்வதையும் மேற்கொண்டொழுகாமல், அதற்கு மாறாய் அவருடைய வம்சத்தில் தோன்றி, இல்லாத ஆடலையும் பாடலையும் புரிந்துவந்தார். இதனால் நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனின், சுவாமிஜீயின் தகப்பனாரும் முன்னோர்களும் தீதான தவறிய வழியில் இருந்தார்கள் என்பதே. ஆனால், ச. பி. அத். 4-இல் காணப்படும் “ஏ மைந்தா! நீ என்னுடைய ஒவ்வோர் உறுப்புக்களினின்றும் உண்டாயிருக்கிறாய். இந்திரியம் (விந்து) ஹிருதயத்திலிருந்து (footnote - வீரிய உற்பத்தியின் ஸ்தானம் பீஜங்களென்று கூறுவர் உடற்கூற்று வல்லுநர். ஆனால், அவர்களும் இனி தயானந்தரிடந்தான் வந்து பாடங்கேட்க வேண்டும் போலும்!) உண்டாகிறபடியால் நீ என்னுடைய ஆத்மாவுமாயிருக்கிறாய்,” என்ற இவ்வார்த்தையின் பிரகாரம், கெட்ட நடத்தை, கெட்ட வழி இவற்றிலுள்ள துராத்மாவும் துர்நடத்தையுடையதாகவே அவ்விந்திரியம் இருக்கவேண்டியது அத்தியாவசியமாய்க் காணப்படுகிறது. மேலும் அஃது உடம்பின் சகல சத்துக்களையும் கிரஹித்த பின்னரே விந்துவாய்த் தயாராகின்றது. (எனவே, சுவாமிஜீயின் தந்தையார் துன்மார்க்கத்தின்மீது இல்லையென்று ஒப்புக்கொள்ளப்படின், அதற்கு மாறாய் நடந்துவந்தவர் துர்நடத்தை உடையவராவார். ஆதலின், நீதமாய் யார் கெட்ட வழியிலுள்ளவர் என்பதை நீங்களே தீர்ப்புச் செய்வீர்களாக. கபீர்.)

(8) சொல்:- (ச.பி. அத். 5) பிரமசரிய ஆசிரமத்தைக் கைக்கொண்டு நடந்தபின்னர், கிருகஸ்தாசிரமம், வானப் பிரஸ்தாசிரமம், சன்னியாச ஆசிரமம் இவைகளை முறையே கொள்ளுதல் மனிதர்களுக்கு ஏற்ற விதியாகும். (ஆனால், சுவாமிஜீ இந்தக் கட்டளையின்படி நடவாமல் வேதத்தை அவமதித்தவராயும், தம்முடைய வார்த்தைக்குத் தாமே முரண் செய்தவராயும் இருக்கின்றார்.)

(8) செயல்:- சுவாமி தயான்ந்தரின் ஜன்மலக்னம் இற்றை நாள்வரை எல்லா ஆரியர்களின் கையிலும் சிக்கவில்லை; மேலும் சுவாமிஜீயே தமது இரகசியம் வெளிப்படாமல் இருப்பதற்காக அதை மறைத்து வைத்திருந்தார். ஆனால், ஆரியர்களும் அதை மறைத்து வைப்பதே சிலாக்கியமென்று எண்ணங்கொண்டிருந்தாலும் இருக்கலாம். “ஆயினயெ அப்ஆலெ தயான்ந்த்” 18-ஆம் பக்கம் பார்க்க: “சம்வச்ரம் 1881; பக்ரீஷாகஹா, சாலிவாஹனம் 1746, பாத்ரபதசுத்த நவமி, வியாழக்கிழமை (கி. பி, 1824-இல்) ராம்ப்பூரில் (மோர்தீ எஸ்டேட் கத்தியவார் தேசம்) பஜன் ஹரி காப்டி வீட்டில் பகல் 12 மணிக்குச் சமீபமாய் ஓர் ஆண் குழந்தை ஜன்னமாயிற்று. மூல நக்ஷத்திரம், பிரீதியோகம், கௌலவ கர்ணம், (சாந்திரமானம் 9-இல்) சூரிய சிம்மபாத முடிவில், 18-15-1-இல் விருச்சிக லக்னம், தனுர் ராசி, லக்னாதிபதி பிருஹஸ்பதியாய் இருக்க, ராக்ஷஸ கணத்தில் ஜனித்த அக்குழந்தைக்கு, “பிரன் சத்ரீ சிவ பஜன்” என்னும் பெயர் வைக்கப்பட்டது” (footnote - இவ் வருஷத்துக்குரிய வட இந்திய பஞ்சாங்கத்தைக் கொண்டு கணித்துப்பார்த்து, இந்த லக்னத்தில் ஜனித்த மனிதன் யோகியாகவும் சாதுவாகவும் மதபோதகராகவும் இருத்தல் முடியுமா? அல்லது அவனொரு பொய் வேஷக்காரப் போக்கிர்யாய் இருத்தல் கூடுமா? என்பதை நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்.) - (இம்மாதிரி அசலில்). அதன் பிறகு ஆரியர்களும் சுவாமிஜீயும் அப்பெயரை “மோல் சங்கர்” (மூல சங்கரர்) என்று வெளியிட்டனர். (ஜீவிய சரித்திரம், பக்கம் 157, 158) சம்வச்ரம் 1899-இல் “சாலுதரா கல்பானீ” என்னுமிடத்தில், தமது 18-ஆவது வயதில் சுவாமிஜீ பூரணானந்த சன்னியாசம் எடுத்துக்கொண்டார். (அஃதாவது, சுவாமிஜீ வேதத்துக்கு மாற்றமாயும், தமது கொள்கைக்கே முரணாயும் மனிதர்களுக்கு ஏற்பட்ட லௌகிகக் கடன்களை மேற்கூறியவாறு நிறைவேற்றாமலே சன்னியாசத்தை எடுத்துக்கொண்டார். எனவே, இவ்விதமான வெட்கம் தம்மீது வந்து சார்ந்துவிடாமற் போவதற்காகவும், இப்படியே நின்று விடுமாயின், பெரியவர்களான மனிதர்களின் கோஷ்டியில் தமது பெயர் வைத்து எண்ணப்படமாட்டாது என்பதற்காகவும் அஞ்சிக்கொண்டு, இவைகளை எல்லாம் நீக்கிப் பரிசுத்தமாய் விடுவதற்காகவே கீழ்க்காணுமாறு கூற முன்வந்திருக்கிறார். கவனிப்பீர்களாக:)

(9) சொல்:- (ச. பி. அத். 5–இல் “சந்நியாச ஆசிரமம்” என்ற தலைப்பின்கீழ்க் காட்டப்பட்டுள்ள பிரமாணத்தில் கூறியிருப்பது:) எத்தினத்தில் வைராக்கியம் உண்டாகிறதோ, அத்தினத்திலேயே வீட்டிலிருந்தாவது கானகத்திலிருந்தாவது சன்னியாசத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். (சுவாமிஜீயின் இவ் வார்த்தையால் தெரிந்துகொள்ள வேண்டுவதாவது: வைராக்கியம் உண்டான பிறகு சன்னியாசத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதே; ஆனால், தயானந்த்ஜீ செய்ததேபோல் பிரமசாரியான சிறியோன் சன்னியாசம் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைப்பதாய்க் காணப்படவில்லை.)

(9) செயல்:- இனிக் கூறப்படும் செய்கையைக் கவனிப்பீர்களாக: சன்னியாசத்தின்போது அவருக்கு வயது 18. அப்பொழுது சுவாமிஜீயின் பிரமசரியம்கூடச் சரிவர முடிவு பெறவில்லை. ஏனெனின், (ச. பி. அத். 3) “நாற்பத்தெட்டு வருஷகாலம் பிரமசரியத்தைக் காப்பாற்றிக் கொள்வதே மூன்றாவதான உத்தம பிரமசரியம்….நாற்பத்தெட்டு வருஷபரியந்தம் உண்மையாய்ப் பிரமசரியத்தை அனுஷ்டிப்பவன் தன்னுடைய பிராணனை வசீகரம் செய்து எல்லா வித்தைகளையும் கிரகிக்கிறான்.” இன்னமும் (ஜீவிய சரித்திரம், 158-ஆம் பக்கம், வரி 15) “என்னே பரிதாபம்! ஆரியர்களின் உயர்ந்த ஆசிரமங்கள் என்னவிதமான க்ஷீணதசையை அடைந்துவிட்டன! சன்னியாசங் கொடுக்குங் குருக்கள், அதற்கு முதற்படியாயுள்ள எந்தவிதமான ஆசிரமத்தையும் பரிபூரணப் படுத்திக்கொள்ளாத பிராம்மண வாலிபனை இறுதியில் உயர்தரமாயுள்ள சன்னியாச ஆசிரமத்தில் சேர்த்து விடுகின்றனர்.” (ஆதலின், சுவாமிஜீ சன்னியாச ஆசிரமத்தை நேரே எடுத்துக்கொண்டது கூடாத கர்மமாய்க் காணப்படுகின்றது.)

(10) சொல்:- (ச. பி. அத். 5) (சன்னியாசத்தை அடைவதற்குரிய) மூன்றாவது வழியாவது பிரமசரியத்திலிருந்து நேராகச் சன்னியாசத்தை அடைவதே. இம்மார்க்கத்தில் ஐம்புலன்களையும் மனத்தையும் சுவாதீனம் செய்துகொண்டு, சகல சிற்றின்ப ஆசைகளிலிருந்தும் நீங்கினவராய்ப் பரோபகாரம் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கும் பரிபூரண ஞானியே நேராகப் பிரவேசிக்கலாம்.

(10) செயல்:- இம் மூன்றாம் மார்க்கத்துக்குப் பரிபூரண ஞானியாயிருத்தல் அத்தியாவசியமாய்க் காணப் படுவதுடன், ஐம்புலன்களையும் மனத்தையும் சுவாதீனம் செய்துகொள்வதும் அத்தியாவசியமாய்க் காணப்படாமலில்லை. (எனவே, ஈண்டுக் கவனிக்கவேண்டியதாவது: சுவாமிஜீ எந்த வகையால் நேரே சன்னியாசத்தை அடைந்தார்? என்பதுதான். அவர் அப்பொழுது பரிபூரண ஞானியாயிருந்தாரா? இல்லையா? கபீர்.)

௸ செயல்:- (ஜீவிய சரித்திரம், பக்கம் 157, வரி 12) இப்போழுது சன்னியாச ஆசிரமத்துள் நுழைந்துகொள்ள அவர் நாடினார்; சமையல் சமைப்பதன் கஷ்டங்களினின்றும் விடுதலை அடைவதுமல்லாமல், சன்னியாச ஆசிரமத்தில் சேர்வதனால் தம்முடைய பெயரும் மாறிவிடுமென்று மனத்தில் எண்ணினார்; மேலும் வீட்டு மனிதர்களும் கண்டுகொள்வதற்கான யாதொரு சந்தர்ப்பமும் ஏற்படாது. (17-ஆவது வரி) பண்டிட் தக்ஷணியானவர் தயான்ந்தரைச் சன்னியாச ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ளும்படி மிக உருக்கமாய் ஸிபாரிஷ் செய்து கூறியதாவது: “இந்தப் பிரமசாரி தர்ம சாஸ்திரங்களைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வ முள்ளவராய் இருக்கிறார்; ஆனால், சோறு சமைத்தல் முதலிய மற்றையவற்றின் கஷ்டங்களின் காரணத்தால் நாடிய நாட்டத்தின்படி கல்வியைக் கற்றுக்கொள்ள இயலாமலிருக்கிறார்.” (கனம் தங்கிய ஐயன்மீர்! இதை வைராக்கியமென்று ஒருபோதும் கூறுவது முடியாத காரியமாகும். கபீர்.) இரண்டாவதாக, பரிபூரன ஞானியாயும், ஐம்புலன்களையும் அடக்கி ஆளக்கூடியவராயும் இருந்திருக்கிறாராவென்றும் ஆராய்ந்து பாருங்கள்.

கீழ்க் கூறப்படும் விஷயமும் மேற்கூறப்பட்டவைகளினின்றுமே கிடைக்கின்றது. தயானந்தரைக் குறித்து எழுதப்பட்ட விஷயங்களெல்லாம் அவர் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணாக்கரென்றே கூறுகின்றன. ஜீவிய சரித்திரத்தில் காணப்படுவதாவது: “ச. 1881-இலிருந்து இருபது ஆண்டுகளுக்குள் இருபது இடங்களுக்குச் சென்று இருபது மனிதர்களிடம் கல்விகளைப் பயின்றார். இறுதியாக ச. 1917-க்குச் சரியான கி.பி, 14-11-1860-இல் (அஃதாவது, 36-ஆவது பிராயத்தில்) மதுரா என்னும் ஸ்தலத்திலுள்ள சுவாமி விரஜானந்தரின் முன்னே கால் மடித்துத் தலைவணங்கிக் கல்வி கற்கலாயினார்.

தமது 18-ஆவது வயதின் ஆகபேசாக்கில் (முதல் மாதம்) சன்னியாசம் கொண்டது முதல் இருபத்தொரு வருஷம் (அஃதாவது, தமது 39-ஆவது பிராயம்) வரை கல்வி பயின்று கொண்டிருந்தார். ஆதலின், சுவாமி தயானந்தர் சன்னியாசங் கொண்டபொழுது அவர் பரிபூரண ஞானியாய், அல்லது குறைந்தபக்ஷம் ஓர் அரைகுறையான ஞானியாகவேனும் இருந்தனராவென்று யாரே கூற முன்வருவர்? இதைத் தவிர்த்து அவர் எத்தனையோ விஷயங்களையும், அபிப்பிராயங்களையும் அடிக்கடி மாற்றி மாற்றிக் கொண்டிருந்ததே அவர் ஞானமற்றவர் என்பதற்கும், வேதத்தை உணராதவர் என்பதற்கும் போதிய சான்றாகும். ஏனெனின், அவர் வேதத்தை உணர்ந்தவராயும், அதன்படி நடந்தவராயும் இருந்துகொண்டே தம்முடைய அபிப்பிராயங்களையும் புரட்டிக்கொண்டிருந்தார் என்பது வெறும் பேச்சாகவே காணப்படுகிறது. மேலும் வேதத்தின் கட்டளைகள் புரண்டாலொழிய, அவ்வேதத்தின்முன் மனித அபிப்பிராயம் எவ்வளவு மதிப்பை அடைந்திருக்கிறதென்பது தெரியாததன்று.

-பா. தாவூத்ஷா

படம்: அபூநூரா

தட்டச்சு: யூனுஸ் அஹ்மது 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

e-max.it: your social media marketing partner

Add comment


Security code
Refresh

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker