1947-11 03. அரிமா நோக்கு - பணமில்லை!

Written by பா. தாவூத்ஷா on .

எடுத்ததற்கெல்லாம்,  “கையில் பணமில்லை, அரசாங்கத்தில் பணமில்லை” என்று திரும்பத் திரும்ப நம் மந்திரிமார்கள் கூறுகிறார்கள். பணமெல்லாம் எங்கே போய்விட்டதென்று கேட்பதற்கு முன்பே, மதுவிலக்கின் காரணத்தால் வரும்படி குறைந்து விட்டதென்றும்

, அந்தக் குறைவை ஈடுசெய்வதற்காக வரிகளும் வரிகளுக்குமேல் வரிகளும் அதற்கு மேல் வரிகளும் விதிப்பதற்கு எத்தனை மார்க்கங்கள் இருக்கின்றனவென்று அரசாங்கம் துருவிக்கொண்டே யிருக்கின்றது.

சென்றசில வாரங்களுக்கு முன்னர் கனம் பிரதம மந்திரி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கிராமங்களின் முன்னேற்றம் பற்றிய விஷயமாகக் குறிப்பிடுகையில், “நானும் ஒரு கிராமவாசியே; ரோடுகளும் ஆஸ்பத்திரிகளும் சீர்திருத்தப் படவேண்டியவையே….ஆனால், பணமில்லையே!” என்று வருந்தினார். விற்பனைவரி அநியாயமான அளவுக்கு உயர்த்தப் படுகிறதே என்று வர்த்தகர்கள் அலறும்போது, “வேறென்ன செய்யமுடியும்? பொது மக்களாகிய நீங்களேதாம் அந்த மதுவிலக்கின் சுமையைச் சிறிது சுமக்கவேண்டும்,” என்று அரசாங்கம் இதோபதேசம் புரிகின்றது. அரசாங்க ஊழியர்கள் பலர் சம்பளம் போதவில்லையென்று அழும் போதும் இதே சமாதானம் கூறப்படுகிறது. கல்வி பயிலச் சில வசதிகள் கோரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் அதே பல்லவியைக் கேட்கிறார்கள்.

முடிவு என்ன? சென்னை “ஹிந்து”ப் பத்திரிகை அன்றொரு நாள் வரைந்திருந்ததைப் போல, எடுத்ததற்கெல்லாம் காரணம் காண்பிக்கப்படும், அல்லது காரணம் கற்பிக்கப்படும் மதுவிலக்கு என்னும் விபரீதப் பரீக்ஷை எவ்வளவு தூரம் வெற்றியளிக்குமோ தெரியவில்லை. முஸ்லிம்கள் குடிக்கக்கூடாது என்று ஆண்டவன் கட்டளை பிறந்தது; அன்றுமுதல் மதுவென்னும் அரக்கன் முஸ்லிம்களின் காற்றுவீசும் பக்கல்கூடத் திரும்பவில்லை. சென்னை மாகாணத்தின் சில ஜில்லாக்களில் மட்டும் வலுவிலே இவ் அரசாங்கத்தினரால் புகுத்தப்படும் மதுவிலக்குப் பூரண வெற்றியை அளிக்காததுடன், அரசாங்கத்துக்குக் கிடைத்துக் கொண்டிருந்த ஐசுவரியத்தையும் அஸ்தமிக்கச் செய்து, குடிக்காமல் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக ஏராளச் செலவை உண்டு பண்ணி, எடுத்தகாரியம் ஒவ்வொன்றுக்கும் “பணமில்லை, பணமில்லை!” என்னும் பல்லவியைப் பரப்பி, பொதுமக்கள் ஏற்கெனவே சுமக்க முடியாமல் மூச்சுத்திணறி நசுங்கிக் கிடைக்கையில் மேலும் மேலும் வரியைப் பல்கச்செய்துவிட்டது.

ஆண்டவனே நல்வழி காட்டுவானாக!

- பா. தாவூத்ஷா, பீ. ஏ.


தாருல் இஸ்லாம், நவம்பர் 1947
பக்கம்: 7

<<முந்தைய பக்கம்>>  <<அடுத்த பக்கம்>>

<<முகப்பு>>


 

e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker