1947-10 12. குற்றமன்றோ?

Written by சாரண பாஸ்கரன் on .

துன்மார்க்க இருள் படர்ந்த
   தொல்லுல கெல்லாம் உய்ய
நன்மார்க்க ஒளியைப் பாய்ச்சி
   நஞ்சினை அமுத மாக்கிப்
பன்மார்க்கப் புகழை ஏற்கும்
   பரிபூர்ண நிலையில் நிற்கும்

சன்மார்க்க இஸ்லாம் வந்த
   சகோதரா சற்றே கேளாய்!

மடமையை உடைத்த வம்ச
   வழியினில் வந்த நீயுன்
கடமையை உணருங் காலம்,
   கருத்தினைத் திருத்துங் காலம்
திடமுட னின்றே என்று
   சிந்தையில் பதிய வைத்து
உடனெழுந் துன்ச மூகத்
   துயிர்நிலை காக்க வாராய்!

குறையுள அதிகாரத் தார்
   கொடுத்திடும் சட்டம் பேணித்
தரையினில் வாழு முன்றன்
   சமுதாயம் சார்ந்தவர்கள்
மறையுரை இறையின் சட்டம்
   மதித்திடா துழலக் கண்டும்
பறையறை கின்றாய் ‘முஸ்லிம்
   பரிசுத்த வான்க’ ளென்று!

பேச்சிலே பெருமை காட்டல்
   பித்தரின் செய்கை என்ற
ஏச்சினைத் தந்த இஸ்லாம்
   இனத்தினில் பிறந்தோ ரின்று
பேச்சிலே வாழு கின்ற
   பேதைமை அறிந்து முன்றன்
மூச்சிலே கனல் விடாது
   முஸ்லிமென் றிசைப்ப தேனோ?

கலையினை உலகிற் கீந்து
   கர்த்தனை அன்றி யார்க்கும்
தலையினைச் சாய்க்கோம் என்ற
   தன்மானம் காக்கும் வீர
நிலையினைப் புகட்டு மிஸ்லாம்
   நெறியினை முஸ்லி மென்போர்
குலைத்திடக் கண்டும், வீணே
   குந்திடல் குற்ற மன்றோ?

- சாரண பாஸ்கரன்

வேலைக்காரன் :- அம்மா! அம்மா! ஐயாவுக்குப் பலகட்டிக் கொண்டது; ஓடி வாருங்கள்!
வீட்டு எஜமாட்டி :- அப்படியா? சீக்கிரம் சென்ற மாதத்துப் பல்வைத்தியர் பில்லை எடுத்துக் காட்டு!

 

 

 

 


தாருல் இஸ்லாம், அக்டோபர் 1947

பக்கம்: 24

<<முந்தைய பக்கம்>>  <<அடுத்த பக்கம்>>

<<முகப்பு>>


e-max.it: your social media marketing partner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker