ஆகாத கருமங்கள்

Written by பா. தாவூத்ஷா. Posted in ஜியாரத்துல் குபூர்

மௌலானா அஷ்ரப் அலீ எழுதியதைத் தழுவியது

 1. பள்ளி வாயில்களில் தொழுகைக்காக அழைக்கக்கூடிய (அதான்) “பாங்கு” மஸ்ஜிதின் வலது பாரிசத்தில்தான் நின்றுகொண்டு சொல்லவேண்டுமாம். இகாமத் சொல்ல வேண்டுவது இடது புறத்தில் இருந்துதானாம். இவ்வாறு சொல்வதைப்பற்றி நம் மார்க்கத்தில் ஆதாரமொன்றுமில்லை.
 2. அளவில் ஏற்றக்குறைவாக ஆய்விடுவதால் தானிய வர்த்தகம் புரியக்கூடாதாம். இஃது ஒரு தவறுள்ள கொள்கையாகும். கொடிய பஞ்சம் ஏற்பட்டுத் தானியம் கிடைப்பது அரிதாகி விடுங்காலத்தில், அதை வீணே அதிகமாய்ச் சேகரித்து வைப்பதும், அதை விற்காமல் தடுத்துவைப்பதும் நம் மார்க்கத்தில் ஆகாதவை (ஹராம்) ஆகும்.
 3. தொழுதுகொள்ளும்போது பின்பற்றி நிற்கும் முக்ததீ தலைப்பாகை யணிந்துகொண்டும், தலைமையாய் நின்று தொழவைக்கும் இமாம் மாத்திரம் தொப்பியை யணிந்துகொண்டு மிருப்பது தொழுகைக்குள் (மக்ரூஹ்) அருவருக்கத் தக்கதாம். இதுவும் ஓர் ஆதாரமற்ற விஷயமேயாகும்.
 4. (வலூ) சுத்தத்துடனில்லாம லிருக்குங்கால் நபி நாயகத்தின் (ஸல்) மீது (ஸலவாத்) ஆசி மொழியைக் கூறுவது கூடாதாம்; இதுவும் முழுத் தவறானதே யாகும். வலூ வில்லாமல் குர்ஆன் ஷரீபை ஓதுவதே ஆகக்கூடியதா யிருக்குங்கால், “தரூத்” ஓதுவதைப்பற்றிப் பாதகமில்லை. ஆனால், குர்ஆன் வேதத்தைப் பரிசுத்தமில்லாமல் தொடுவது கூடாதேயாகும்.
 5. ரூபாய்களெல்லாம் (யாஅஜீஜ்!) “சிறப்புமிக்க ஆண்டவனே!” என்று பலகாலம் தியானம் செய்துகொண்டிருந்தன வென்றும், அதனால்தான் உலகத்தினரெல்லாம் அவற்றை ஏற்றுக் கொள்கிறார்க ளென்றும் சில பாமரர்கள் நம்புகிறார்கள். இது மகா மோசமான கொள்கையே யாகும். இதற்கு மார்க்க ஆதாரமே கிடையாது.
 6. புருஷன் தன் மரித்த மனைவியின் (ஜனாஜா) சவப்பெட்டியின் காலைப் பற்றித் தாங்கிப் பிடித்துக்கொண்டு போகக்கூடாதாம். இதுவும் மூடச் சித்தாந்தமேயாகும். பிற ஸ்திரீகளின் சவப் பெட்டியைத் தாங்கிப் பிடித்துப் போவது நம் மதத்தில் அனுமதியுள்ளதா யிருக்க, தன் சொந்த மனைவியின் விஷயத்தில் தாராள அனுமதியுண்டு.
 7. ஓர் ஆடவனும், ஒரு ஸ்திரீயும் யாதொரு சாக்ஷியேனும் வாரிஸ்தாரரேனும் மில்லாமல் மனமொத்துச் சம்மதித்துத் தமக்குள் மணவாழ்க்கை உறவை வைத்துக்கொள்வது ஆகுமென்றும், இஃது ஒருவகையான விவாஹம்தா னென்றும், இது “சரீர காணிக்கை” எனப்படுமென்றும் சில பாமர மௌட்டியர்கள் நம்பி வருகின்றனர். இது பெருந் தவறான நடத்தையே யாகும். இஃது ஒருபோதும் விவாஹமாகமாட்டாது. நிச்சயமாய் இது வியபிசாரமே யாகும்.
 8. வலூவுடையவனின் வஸ்திரம் சற்று விலகிப்போய் வெட்கஸ்தலம் இதரர்களின் பார்வையில் பட்டுவிட்டாலும் பெண்கள் தலைத்துணி சரிந்துவிட்டாலும் வலூ முறிந்துபோகுமாம். இதுவும் ஒரு மூடக்கொள்கையேயாகும். தன்னையு மறியாமல் நடந்துபோகும் இத்தவறுதல் யாரையும் பாதிக்காது.
 9. நாற்காலி அல்லது பெஞ்சுப் பலகையின்மீது நின்று ஒருவன் தொழுதுகொள்வதால், அவன் குரங்காகப் போய் விடுவானாம். இது முழு மூடத்தனமே யாகும்.
 10. விடியற்காலைத் தொழுகையை இறுதியில் கூட்டத்துடன் ரேச்ந்து தொழுது கொண்டதன் நிமித்தம் சுப்ஹின் சுன்னத்து தொழுகை விடப்பட்டுப் போமாயின், முதலில் இமாமுடன் தொழுத பர்ல் நிறைவேறாதாம். அதற்குப் பரிகாரமாய்ச் சூர்யன் உதயமாகும்வரை தொழுத இடத்திலேயே அவசியமாய் உட்கார்ந்திருந்து சுன்னத்தையும் தொழுத பின்னர்தான் பர்லும் நிறைவேறுமாம். இதுவும் தவறான கொள்கையே யாகும். அவ்வாறு சுன்னத்துத் தவறிவிடுமாயின், தாராளமாய் இதர காரியங்களில் பிரவர்த்தித்திருந்து சாவகாசமாய்ச் சூர்யன் உதயமானதன் பின்னர் அதைத் தொழுது கொள்ளலாம். இதுவே இஸ்லாத்தின் அனுமதி.
 11. முன் மாலை (அஸ்ர்) நேரத்திற்கும், அஸ்தமன (மக்ரிப்) நேரத்திற்கு மிடையே ஒன்றையும் புசிக்கவேனும், பருகவேனும் கூடாதாம். அவ்வாறு ஒருவன் மீறிச் செய்வானாயின், அவனது மரணகாலம் அந்த இடையிட்ட காலமாகத்தான் இருக்குமாம்; அந்நேரத்தில்தான் ஷைத்தான் மரணத் தறுவாயி லுள்ளவருக்குச் சிறுநீர்ப் பாத்திரத்தை் கொண்டு வந்து தந்து ஏமாற்றுவானாம். அம்மத்திய மாலை நேரத்தில் ஆகாரம் உட்கொண்டவன் ஏமாந்து ஷைத்தானின் வயமாவானாம். புசிக்காதவனா யிருப்பின், தப்பிக்கொள்வானாம். இதுவும் பெரும் மௌட்டியமேயாகும்.
 12. சூர்ய சந்திர கிரகணங்களின்போது அவை விடுபடுமட்டும் ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாதாம்; சாப்பிடவேனும், நீரருந்தவேனும் கூடாதாம். இதுவும் தவறானதென்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அக்காலங்களில் எல்லாவற்றையும் தடுத்து வைக்குமாறு நம் மார்க்கம் போதிக்கவில்லை. இவை இஸ்லாத்திற்கு ஆகாத கருமங்களாகும். ஆனால், சூர்ய சந்திர கிரகண காலங்களில் ஆண்டவனை வணங்கவேண்டு மென்றுதான் மதம் அனுமதித்திருக்கிறது. இவ்வாறு புதிய வழக்கங்களைச் சிருஷ்ப்பது (பித்அத்) தீய நூதனச் செயல்களேயாகும்.
 13. மரித்துப்போன சவம் (மையித்து) வீட்டிலோ அதன் பகுதிகளிலோ இருக்கும்வரை உண்பதும் குடிப்பதும் பாபமென்று சிலர் நம்புகின்றனர். இதுவும் மகா கொடிய அனாசாரமேயாகும்.
 14. சில முஸ்லிம் ஸ்திரீகள் தொழுது கொண்டபின்னர்த் தொழுகைக்குரிய விரிப்பைக் கலைத்துத் திரும்பிப் போட்டு விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இப்படிச் செய்யாவிட்டால், ஷைத்தான் அதன் மீதுவந்து தொழுது கொள்வானாம். இதுவும் ஒருவித மௌட்டியமேயாகும்.
 15. பிறர் வீட்டு விருந்துகளுக்குச் சென்றால் திருப்தியாக வயிறார உண்டுதான் வரவேண்டுமாம்; கொஞ்சமேனும் பசியுடன் எழுந்து வந்துவிடக் கூடாதாம். இதுவும் தவறான அபிப்பிராயமே யாகும். உண்ணும் விஷய மெல்லாம் அவரவரின் இஷ்டத்தைப் பொறுத்தது. மார்க்கத்தில் இதற் கெல்லாம் கட்டுப்பாடில்லை.
 16. சரீரத் தங்கடமுள்ள ஒரு தொழுகையாளி ஜமாஅத்துடன் தொழுது கொள்ளும்போது வரிசையின் இடையில் உட்கார்ந்து தொழுதால் அதைச் சிலர் அருவருப்பாகக் கொண்டு, அன்னாரைக் கண்டிக்கின்றனர். கடைசியில்போய்த் தொழுது கொள்ளவும் வற்புறுத்துகின்றனர். இதுவும் ஒரு துர்வழக்கமும் ஒழுக்கமின்மையுமே யாகும்.
 17. நோன்புவைக்க வேண்டுமானால் தனியாக ஒற்றை நோன்புமாத்திரம் வைக்கக்கூடாது; இரண்டு மூன்று சேர்த்துத்தான் நோற்றல் வேண்டு மெனச் சில மௌட்டியர்கள் நம்புகின்றனர். இதுவும் ஓர் ஆதாரமற்ற வீண்வாதமேயாகும். ஒரே நோன்பை வைப்பதால் பாதகமொன்று மில்லை.
 18. தூங்கி எழுந்து இரவின் பிந்திய ஜாமத்தில் தொழப்படும் “தஹஜ்ஜுத்” தொழுகைக்குப் பின் நித்திரை புரியக்கூடாதென்றும், அப்படிச் சயனித்து விட்டால் தொழுத அத்தொழுகை பிரயோஜன மற்றுப் போகிற தென்றும் சில பாமர அறிவிலிகள் நம்புகின்றனர். இதுவும் ஒரு தவறான நம்பிக்கையே யாகும். இரவில் எழுந்து தஹஜ்ஜுத் தொழுதால் விடியும் வரை விழித்துக் கொண்டிருக்க வேண்டு மென்னும் பயனத்தினால் இதைக் கேள்வியுறும் பலர் தொழுது கொள்ளாமலே இருந்து விடுகின்றனர். நம்மார்க்கச் சட்டப்படி தஹஜ்ஜுதுக்குப் பிறகு தூங்கி எழுவதால் குற்ற மொன்றுமில்லை. தாராளமாய் நித்திரை புரிந்து காலைத் தொழுகைக்கு மீண்டும் எழலாம். 

(தொடரும்)

Image courtesy: missionislam.com

<<முந்தையது>>  <<அடுத்தது>>

<<ஜியாரத்துல் குபூர் முகப்பு>>


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


e-max.it: your social media marketing partner

செய்திமடல்

புதிய பதிவுகளைப் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்:

Delivered by FeedBurner

Lock full review www.8betting.co.uk 888 Bookmaker